மீண்டும் வெடித்த தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை! நீங்களேவா? விளக்கமளித்த உதயநிதி!
Oct 25, 2024, 02:59 PM IST
முதலமைச்சரின் புத்தாய்வு பயிற்சி திட்டம் சார்பாக இன்று நடத்தப்பட்ட விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டுள்ளது என சர்ச்சை எழுந்துள்ளது.
முதலமைச்சரின் புத்தாய்வு பயிற்சி திட்டம் சார்பாக இன்று நடத்தப்பட்ட விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டுள்ளது என சர்ச்சை எழுந்துள்ளது. இதற்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். பொதுவாக தமிழ்நாடு அரசின் சார்பாக நடத்தப்படும் அரசு விழாக்கள், ஆலோசனை கூட்டங்கள் என அனைத்திலும் நிகழ்வு தொடங்கும் முன் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவது வழக்கமான ஒன்றாகும்.
ஆளுநர் விழா சர்ச்சை
முன்னதாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி கலந்து கொண்ட இந்தி மாத நிறைவு விழா கொண்டாட்டமும் டிடி தொலைக்காட்சியின் பொன் விழா ஆண்டு நிகழ்ச்சியும் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்தது. இந்த விழா சென்னை சுவாமி சிவானந்தா சாலையில் உள்ள தூர்தர்ஷன் தமிழ் தொலைகாட்சி அலுவலகத்தில் நடந்து இருந்தது. இந்த விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய அலுவலர்கள் மிகவும் திக்கியவாறே பாடினார். மேலும் தமிழ்த்தாய் வாழ்த்தில் "தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்" என்ற வரி வர வேண்டிய இடத்தில் திணறி திராவிடநல் திருநாடும் என்ற வரியை விட்டு பாடியிருந்தனர்.இவ்வாறு ஆளுநர் விழாவில் பாடப்பட்டதையடுத்து முதலமைச்சர் உட்பட பலர் கண்டனம் தெரிவித்தனர்.
குறிப்பாக முதலமைச்சர் ஸ்டாலின், ‘திராவிடம் என்ற சொல்லை நீக்கி, தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை பாடுவது தமிழ்நாட்டின் சட்டத்தை மீறுவதேயாகும் எனவும், தன் இஷ்டப்படி ஆளுநர் நடக்கிறார் எனவும் தெரிவித்து இருந்தார். ஆளுநரின் இந்த செயல் தமிழர்களின் உணர்வை அவமதித்து உள்ளதாகவும் ஆளுநரை ஒன்றிய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும்’ எனவும் கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து துணை முதலமைச்சர் உதயநிதி, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் ஆகியோர் கண்டனங்களை பதிவிட்டு இருந்தனர்.
தமிழ்நாடு அரசு விழாவில் இப்படியா?
இந்நிலையில் இன்று முதலமைச்சரின் புத்தாய்வு திட்டத்தில் பயிற்சி பெற்ற நபர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சியில் தமிழ்த் தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டதாக ஒரு வீடியோ வைரல் ஆகி வருகிறது. அந்த வீடியோவில் “சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்” என்ற வரியில் கண்டமதில் எனப் பாடியுள்ளனர். இவ்வாறு தவறாக பாடிய அரசு ஊழியர்களை மீண்டும் தமிழ்த்தாய் வாழ்த்தை பாடுமாறு உதயநிதி கூறியுள்ளார். மேலும் இரண்டாவது முறை பாடும் போதும் அந்த ஊழியர் புகழ்மணக்க என்பதை திகழ் மனக்க என்று பாடியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
உதயநிதி விளக்கம்
தற்போது விழாவில் என்ன நடந்தது என உதயநிதி விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், 'தமிழ்த் தாய் வாழ்த்தை யாரும் தவறாக பாடவில்லை. தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது திடீரென மைக்கில் கோளாறு ஏற்பட்டு 2, 3 இடங்களில் அவர்கள் என்ன பாடுகிறார்கள் என யாருக்கும் கேட்காமல் போய்விட்டது. அதனால்தான் அவர்களை மீண்டும் முதலில் இருந்து பாட வைத்தோமே தவிர, அவர்கள் தவறாக பாடினார்கள் என்பதற்காக அல்ல எனக் கூறியுள்ளார். இருப்பினும் எதிர்க்கட்சி மற்றும் பாஜகவை சேர்ந்த பலர் தமிழ்நாடு அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
டாபிக்ஸ்