Ration shops: ’மே மாதத்தில் ரேஷன் கடையில் பாமாயில், பருப்பு கிடைக்கவில்லையா?’ ஜூன் மாதம் முதல் கிடைக்கும் என அறிவிப்பு!
May 28, 2024, 02:34 PM IST
பாராளுமன்றத் தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக பாமாயில் மற்றும் துவரம் பருப்புக்கான ஒப்பந்தப்புள்ளிகள் மீதான முடிவுகள் மேற்கொண்டு அப்பண்டங்களைக் கொள்முதல் செய்வதில் காலதாமதம் நேரிட்டது.
ரேஷன் கடைகளில் மே மாதத்திற்கான பாமாயில் மற்றும் துவரம் பருப்பு ஆகியவை கிடைக்கவில்லை எனில் வரும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் பெற்றுக் கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது.
மானிய விலையில் பாமாயில்
இது தொடர்பாக பொது விநியாகத்துறை சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு அரசு, சிறப்புப் பொது விநியோகத் திட்டத்தின் வாயிலாக 2.23 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் தோறும் தலா ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.30க்கும் ஒரு லிட்டர் பாமாயில் ரூ.25க்கும் மானிய விலையில் வழங்கி வருகிறது.
ஒப்பந்தபுள்ளிகள் இறுதி செய்ய காலதாமதம்
பாராளுமன்றத் தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக பாமாயில் மற்றும் துவரம் பருப்புக்கான ஒப்பந்தப்புள்ளிகள் மீதான முடிவுகள் மேற்கொண்டு அப்பண்டங்களைக் கொள்முதல் செய்வதில் காலதாமதம் நேரிட்டது.
துவரம் பருப்பு, பாமாயில்களை வாங்கி கொள்ளலாம்
இருப்பினும் அரசின் தொடர்ந்த சீரிய முயற்சிகள் காரணமாக நகர்வுப் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டு நாளது தேதியன்று (27.05.2024) 82,82,702 குடும்ப அட்டைதாரர்களுக்குத் தலா ஒரு கிலோ துவரம் பருப்பினையும் 75,87,865 குடும்ப அட்டைதாரர்களுக்குத் தலா ஒரு லிட்டர் பாமாயில் பாக்கெட்டினையும் நியாயவிலைக் கடைகளிலிருந்து வழங்கப்பட்டுள்ளது.
24,96,510 கிலோ துவரம் பருப்பு மற்றும் 33,57,352 பாமாயில் பாக்கெட்டுகள் நியாய விலைக்கடைகளில் குடும்ப அட்டைதாரர்கள் பெற்றுச் செல்ல தயார் நிலையிலும் 8,11,000 கிலோ துவரம் பருப்புமற்றும் 7,15,395 பாமாயில் பாக்கெட்டுகள் கிடங்குகளில் நியாயவிலைக் கடைகளுக்கு அனுப்பும் பொருட்டு நாளது தேதியில் இருப்பில் வைக்கப்பட்டுள்ளன. மீதம் பெற வேண்டிய துவரம்பருப்பு மற்றும் பாமாயில் ஒப்பந்ததாரர்களிடமிருந்து பெற்று விரைவாக கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
ஜூன் முதல் வாரத்தில் பெற்றுக் கொள்ளலாம்
குடும்ப அட்டை தாரர்களுக்கு மே 2024 மாத ஒதுக்கீட்டினை இம்மாத இறுதிக்குள் வழங்கிட அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும் மே 2024 மாதத்தில் பருப்பு மற்றும் பாமாயில் பெற முடியாதவர்கள் வசதிக்காக ஜுன் 2024 மாதம் முதல் வாரம் வரை நியாயவிலைக்கடைகளில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பெற்றுக் கொள்ள தேவையான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளும்படி மாவட்ட வழங்கல் அலுவலர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
ரேஷனில் பாமாயில் மற்றும் துவரம் பருப்பு தட்டுப்பாடு
குடும்ப அட்டைதாரர்களின் நன்மையினைக் கருத்தில் கொண்டு மே 2024 மாதத்தில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பாக்கெட் பெற இயலாத அட்டைதாரர்கள்அவர்களுக்கான மே 2024 மாத துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பாக்கெட்டினை ஜுன் 2024 மாதம் முதல் வாரத்தில் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் கிடைக்கவில்லை என்ற புகார் பொதுமக்கள் மத்தியில் எழுந்தது. இந்த பிரச்னையை கண்டறிந்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி இருந்தனர்.
தமிழ்நாடு அரசு ரேஷன் கடைகளின் மூலம் வழங்கும் பொருட்கள் அனைத்தும் தட்டுப்பாடின்றி இருப்பில் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். பொருட்களை கொள்முதல் செய்வதில் காலதாமதம் செய்யாமல் ஏழை, எளிய, நடுத்தர மக்களின் அத்தியாவசித் தேவையை கவனத்தில் கொண்டு காலத்தே கொள்முதல் செய்ய வேண்டும் என ஜி.கே.வாசன் வலியுறுத்தி இருந்தார்.
டாபிக்ஸ்