Sattai Duraimurugan: ’யூடியூபில் பணம் சம்பாதிக்க எதை வேண்டுமானாலும் பேசுவதா?’ சாட்டை துரைமுருகனை திட்டி தீர்த்த நீதிபதி!
Aug 01, 2024, 09:58 PM IST
Sattai Duraimurugan: சர்ச்சைக்குரிய வகையில் பேசி youtube இல் பதிவேற்றம் செய்தால், அதற்கு பார்வையாளரும் கூடுகிறது. பணமும் குவிக்கிறது. யூடியூபில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக மக்களிடையே வெறுப்பை தூண்டும் விதமாக பதிவிட்டு உள்ளார் என நீதிமன்றம் கருத்து
யூடியூபில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக மக்களிடையே வெறுப்பை தூண்டும் விதமாக பேசி சாட்டை துரைமுருகன் பதிவிட்டுள்ளார். பேச்சு சுதந்திரம் அனைவருக்கும் பொதுவானது தான். ஆனால் அதனை வரம்பு மீறி பயன்படுத்தக் கூடாது. அதனை ஏற்றுக் கொள்ளவும் முடியாது என மதுரை உயர்நீதிமன்றம் கூறி உள்ளது.
பிரமாண பத்திரம் தாக்கல்
இனிமேல் எப்பொழுதும் சர்ச்சைக்குரிய வகையில் அவதூறான கருத்துக்களை தெரிவிக்க மாட்டேன். அதை சமூக வலைதளங்களில் பதிவிட மாட்டேன் என நாம் தமிழர் கட்சியின் சாட்டை துரைமுருகன் மதுரை அமர்வு நீதிமன்றத்தில் உத்திரவாத பிரமாண பத்திரம் தாக்கல் செய்து உள்ளார்.
வன்கொடுமை பிரிவின் கீழ் வழக்கு பதிவு
திருச்சி உய்யக்கொண்டான் திருமலையைச் சேர்ந்த சாட்டை துரைமுருகன் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "நான் நாம் தமிழர் கட்சியில் மாநில பொறுப்பில் இருந்து வருகிறேன். முன்னாள் தமிழக முதலமைச்சர் கருணாநிதி குறித்து தேர்தல் கூட்டத்தில் பேசும்போது அவதூறான கருத்துக்களையும், பட்டியல் இன மக்களுக்கு எதிரான (SC/ST) கருத்துக்களையும் தெரிவித்ததாக என்மீது திருச்சி மாவட்ட காவல்துறையினர் வன்கொடுமை பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கில் கீழமை நீதிமன்றத்தில் முன் ஜாமின் பெற வேண்டும் என்பதால் கீழமை நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த வழக்கு இன்று நீதிபதி புகழேந்தி முன்பாக விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், "பட்டியல் இனத்தவருக்கு எதிராக பொது மேடையில் பேசிய சாட்டை துரைமுருகன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நிவாரணம் வழங்கக் கூடாது
மனுதாரர் இதேபோல் பொதுவெளியிலும், சமூக வலைத்தளங்களிலும் தொடர்ந்து அவதூறான கருத்துக்களை பேசி வருகிறார். ஏற்கனவே இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கில் ஜாமின் பெறும்போது இதுபோன்று அவதூறான கருத்துக்களை பேசமாட்டேன் என உயர்நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் வழங்கி ஜாமீன் பெற்றுள்ளார். தற்போது அதனை மீறி தொடர்ந்து பொதுவெளிகளிலும், பொது மேடைகளிலும் பட்டியலின மக்களுக்கு எதிராக பேசியுள்ளார். எனவே இவருக்கு இந்த வழக்கில் நிவாரணம் வழங்கக் கூடாது"என கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
மனுதாரருக்கு தெரியாதா?
இதனைத் தொடர்ந்து நீதிபதி, "மனுதாரர் ஏற்கனவே தமிழ்நாடு முதலமைச்சரை பற்றி அவதூறாக பேசி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு இருந்தார்.அந்த வழக்கில் இது போன்ற கருத்துக்களை பொதுவெளியில் தெரிவிக்க மாட்டேன் என உறுதி அளித்ததை ஏற்று நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியிருந்தது.
இந்நிலையில் மனுதாரர் மீண்டும் தேர்தல் பிரச்சாரத்தின் போது பட்டியல் இனத்தோருக்கு எதிரான கருத்துக்களை பேசி, தனது youtube சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
ஒரு அரசியல் கட்சியில் பொறுப்பில் உள்ளவர், இதுபோன்று பேசுவது மக்கள் மத்தியில் என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பது கூட மனுதாரருக்கு தெரியாதா?
பணமும் குவிக்கிறது
கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அதை நாகரீகமான முறையில் தான் வெளிப்படுத்த வேண்டும்.
சர்ச்சைக்குரிய வகையில் பேசி youtube இல் பதிவேற்றம் செய்தால், அதற்கு பார்வையாளரும் கூடுகிறது. பணமும் குவிக்கிறது.
யூடியூபில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக மக்களிடையே வெறுப்பை தூண்டும் விதமாக பதிவிட்டு உள்ளார். பேச்சு சுதந்திரம் என்பது அனைவருக்கும் பொதுவானது தான் ஆனால் அதனை வரம்பு மீறி பயன்படுத்தக் கூடாது. அதனை ஏற்றுக் கொள்ளவும் முடியாது. எனவே மனுதாரர் இனிமேல் எப்பொழுதும் சர்ச்சைக்குரிய வகையில் அவதூறான கருத்துக்களை தெரிவிக்க மாட்டேன் என்றும், அதை சமூக வலைதளங்களில் பதிவிட மாட்டேன் என்றும் மீண்டும் நீதிமன்றத்தில் உத்திரவாத பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும்" என நீதிபதி தெரிவித்தார்.
அதனை ஏற்று சாட்டை துரைமுருகன் தரப்பில் உத்திரவாத பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி பட்டியல் இனத்தவருக்கு எதிராக பேசிய வழக்கில் கீழமை நீதிமன்றத்தில் மனுதாரர் ஆஜராகி ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம்" என உத்தரவிட்டுள்ளார்.