Sattai Duraimurugan: முதுகில் அடி! என்னை கொல்ல பார்க்கிறார்கள் - அரசு மீது குற்றச்சாட்டை முன் வைத்த சாட்டை துரைமுருகன்
Jul 12, 2024, 05:00 PM IST
முழு போதையில் இருந்த ஓட்டுநர் விபத்தை ஏற்படுத்த முயன்றார். நான் சென்ற கார் பின்னால் லாரி மோதியதில் முதுகில் அடிபட்டது. இந்த அரசாங்கம் என்னை கொல்ல பார்க்கிறார்கள் என விடுவிப்புக்கு பின்னர் சாட்டை துரைமுருகன் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரையின் போது அவதூறாக பேசியதாக பதிவான வழக்கில் நாம் தமிழர் கட்சியின் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, கைதுக்கான முகாந்திரம் இல்லை எனக் கூறி நீதிபதி விடுவித்தார்.
மூன்று மணி நேரம் விசாரணை
கைது செய்யப்பட்ட சாட்டை துரைமுருகன் திருச்சி சைபர் க்ரைம் போலீஸ் அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்டார். அங்கு அவரிடம் போலீசார் 3 மணி நேரத்துக்கு மேலாக விசாரணை நடத்தினர். இதன் பின்னர் திருச்சி மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதன் முன்னிலையில் துரைமுருகன் ஆஜர்படுத்தப்பட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சாட்டை துரைமுருகனை கைது செய்ய எந்தவித முகாந்திரமும் இல்லை என்று தெரிவித்து விடுவித்தார்.
கொலை செய்ய முயற்சி
நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சாட்டை துரைமுருகன், "திமுக அரசு என் மீது பல்வேறு வழக்குகளைப் போட்டு என்னை முடக்க நினைத்தது. நீதிமன்றத்தில் எங்களுடைய வாதங்களை முன்வைத்தோம். இது அப்பட்டமான பொய் வழக்கு.
நான் வெளியிட்ட விடியோக்களில் 800க்கும் மேற்பட்டவை ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பேசியவைதான். குறிப்பாக வேங்கைவயல், மேல்பாதி, நாங்குநேரி உள்ளிட்ட சாதிய பிரச்சினைகளில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக நின்றிருக்கிறேன்.
பாஜகவை பாசிச கட்சி என்று சொல்லும் நீங்கள், இன்று எனக்கு செய்திருப்பதற்கு பெயர் என்ன? நான் குற்றாலத்தில் இருந்த நிலையில், தலைமுறைவாகியிருந்ததாக சொல்லி என்னை அங்கு வைத்து கைது செய்தனர். என்னுடைய காரிலேயே அழைத்து வந்தனர். அப்போது முழு போதையில் கார் ஓட்டுநர் எனது காரை ஓட்டிக் கொண்டு வந்தார். ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே வரும்போது வேண்டுமென்றே என் வாகனத்தை விபத்துக்குள்ளாக்க முயன்றனர்.
என்னை திட்டமிட்டு இந்த அரசு கொலை செய்யப் பார்க்கிறது. மதுரை அருகே விளாங்குளம் சுங்கச்சாவடி பக்கத்தில் பின்னால் நின்று கொண்டிருந்த லாரி என் கார் மீது மோதி என் முதுகில் அடிப்பட்டது. என்னுடைய ஓட்டுநருக்கு தலையில் அடிப்பட்டது.
அரசிடம் எனது உயிருக்கு பாதுகாப்பு இல்லை. நீதிமன்றம் எனக்கு பாதுகாப்புக் கொடுக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்"
இவ்வாறு சாட்டை துரைமுருகன் தெரிவித்தார்.
மூன்றாவது முறையாக கைது
திமுக ஆட்சி அமைந்த பிறகு ஏற்கெனவே இரண்டு முறை சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டார். திருச்சியில் திமுக நிர்வாகி ஒருவரை நேரில் மிரட்டிய புகாரில் கைது செய்யப்பட்ட சாட்டை துரைமுருகன் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதியப்பட்டு இருந்தன.
மேலும் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள தனியார் செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் ஆலையில் நடந்த பெண்கள் போராட்டம் குறித்து உண்மைக்கு புறம்பான செய்தியை வெளியிட்ட புகாரிலும் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டு இருந்தார்.
இதைத்தொடர்ந்து தற்போது விக்கிரவாண்டி இடைத்தேர்தலின் போது முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி மற்றும் தமிழ்நாடு அரசு குறித்து அவதூறாக பேசியதாக எழுந்த புகாரின் அடிப்படையில் மூன்றாவது முறையாக கைது செய்யப்பட்டார்.
இந்த முறை ஒரே நாளில் விடுவிக்கப்பட்ட சாட்டை துரைமுருகன், தன் மீது கொலை முயற்சி தமிழ்நாடு அரசு நடத்தியுள்ளதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
டாபிக்ஸ்