By-Elections Results: ’நாட்டின் மாறிவரும் அரசியல் சூழல்!’ பாஜகவின் படுதோல்வியை விளாசும் ராகுல் காந்தி!
Jul 13, 2024, 08:47 PM IST
By-Elections Results: நாடு முழுவதும் 13 தொகுதிகளில் நடைபெற்ற இடைத் தேர்தல்களில் 12 தொகுதிகளை இந்தியா கூட்டணி கைப்பற்றி உள்ளது. இரண்டு இடங்களில் பாஜகவும், ஒரு இடத்தில் சுயேச்சையும் வெற்றி பெற்று உள்ளனர்.
நாடு முழுவதும் வெளி வந்துள்ள இடைத்தேர்தல் முடிவுகள் நாட்டின் மாறிவரும் அரசியல் சூழலை பிரதிபலிப்பதாக நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறி உள்ளார்.
13 தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தல்
நாடு முழுவதும் 13 தொகுதிகளில் நடைபெற்ற இடைத் தேர்தல்களில் 12 தொகுதிகளை இந்தியா கூட்டணி கைப்பற்றி உள்ளது. இரண்டு இடங்களில் பாஜகவும், ஒரு இடத்தில் சுயேச்சையும் வெற்றி பெற்று உள்ளனர்.
தமிழ்நாட்டின் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி, பீகாரின் ரூபளி தொகுதி, இமாச்சல பிரதேசத்தில் தேரா, ஹமீர்பூர், நலகர், மத்திய பிரதேசத்தின் அமர்வரா, பஞ்சாப்பின் ஜலந்தர் மேற்கு, உத்ரகண்டின் பத்ரிநாத், மங்களூர், மேற்கு வங்கத்தின் ராய்கஞ்ச், ரணாகத் தக்ஷின், பேக்டா, மணிக்தலா ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில், வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டு உள்ளன.
தமிழ்நாட்டின் விக்கிரவாண்டி தொகுதியை பொறுத்தவரை திமுக வேட்பாளராக களம் இறங்கிய அன்னியூர் சிவா, ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 53 வாக்குகளை பெற்று வெற்றி பெற்று உள்ளார்.
பீகாரில் வென்ற சுயேச்சை!
பீகார் மாநிலம் ரூபளியில் நடைபெற்ற சட்டமன்ற இடைத் தேர்தலில் 68 ஆயிரத்து 70 வாக்குகள் பெற்று சுயேச்சை வேட்பாளரான சங்கர் சிங் வெற்றி பெற்று உள்ளார்.
அவரை எதிர்த்து தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிட்ட ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் கலந்தர் பிரசாத் மண்டல் 59 ஆயிரத்து 824 வாக்குகளை பெற்று தோல்வி அடைந்தார்.
இந்தியா கூட்டணி சார்பில் ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சி சார்பில் போட்டியிட்ட பிமா பாரதி 30 ஆயிரத்து 619 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.
இமாச்சல பிரதேசத்தை வென்ற காங்கிரஸ்
இமாச்சல பிரதேசத்தின் தேரா மற்றும் நலகர் தொகுதிகளை காங்கிரஸ் கட்சி கைப்பற்றிய நிலையில், ஹமீர்பூர் தொகுதியில் பாஜக வெற்றி பெற்று உள்ளது. மேலும் மத்திய பிரதேசத்தின் அமர்வாரா தொகுதியில் நடந்த இடைத் தேர்தலிலும் பாஜக வெற்றி பெற்று உள்ளது.
பஞ்சாபில் வென்ற ஆம் ஆத்மி
பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மேற்கு தொகுதியில் நடைபெற்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் மொஹிந்தர் பகத் வெற்றி பெற்று உள்ளார். இந்த தொகுதியில் பாஜக இரண்டாம் இடமும், காங்கிரஸ் கட்சி மூன்றாம் இடமும் பிடித்தது.
உத்ரகண்ட் மாநிலத்தில் உள்ள பத்ரிநாத் மற்றும் மங்களூரு தொகுதிகளையும் காங்கிரஸ் கட்சியே கைப்பற்றி உள்ளது.
மேற்கு வங்கத்தை வென்ற மம்தா
மேற்கு வங்க மாநிலத்தை பொறுத்தவரை தனித்து போட்டியிட்ட திரிணாமும் காங்கிரஸ் கட்சி மொத்தம் உள்ள 4 தொகுதிகளிலும் வெற்றியை ருசித்து உள்ளது.
இதன்படி தனித்து போட்டியிட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 4 இடங்களையும், காங்கிரஸ் கட்சி 4 இடங்களையும், ஆம் ஆத்மி, திமுக ஒரு இடங்களையும் கைப்பற்றி உள்ளனர். 2 இடங்களில் பாஜகவும், ஒரு இடத்தில் சுயேச்சையும் வெற்றி பெற்று உள்ளனர்.
ராகுல் காந்தி ட்வீட்
இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “பா.ஜ.க.வினர் பின்னியிருந்த 'பயம் மற்றும் குழப்பம்' என்ற வலை உடைந்துவிட்டது என்பதை 7 மாநில இடைத்தேர்தல் முடிவுகள் உணர்த்தி உள்ளன. விவசாயிகள், இளைஞர்கள், தொழிலாளர்கள், தொழிலதிபர்கள், வேலை செய்பவர்கள் என ஒவ்வொரு வகுப்பினரும் சர்வாதிகாரத்தை முற்றிலுமாக அழித்து நீதியின் ஆட்சியை நிலைநாட்ட விரும்புகிறார்கள். பொதுமக்கள் தங்கள் வாழ்வின் மேம்பாட்டிற்காகவும், அரசியலமைப்பின் பாதுகாப்பிற்காகவும் இந்தியாவுடன் முழுமையாக நிற்கின்றனர். வாழ்க இந்தியா, வாழ்க அரசியலமைப்பு.” என கருத்து தெரிவித்து உள்ளார்.