By-Elections: நாடு முழுவதும் நடந்த இடைத்தேர்தல்கள்! வெற்றிக் கொடி நாட்டிய இந்தியா கூட்டணி! மண்ணை கவ்விய பாஜக!
By-Elections: தனித்து போட்டியிட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 4 இடங்களையும், காங்கிரஸ் கட்சி 4 இடங்களையும், ஆம் ஆத்மி, திமுக ஒரு இடங்களையும் கைப்பற்றி உள்ளனர். 2 இடங்களில் பாஜகவும், ஒரு இடத்தில் சுயேச்சையும் வெற்றி பெற்று உள்ளனர்.
நாடு முழுவதும் 13 தொகுதிகளில் நடைபெற்ற இடைத் தேர்தல்களில் 12 தொகுதிகளை இந்தியா கூட்டணி கைப்பற்றி உள்ளது. இரண்டு இடங்களில் பாஜகவும், ஒரு இடத்தில் சுயேச்சையும் வெற்றி பெற்று உள்ளனர்.
தமிழ்நாட்டின் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி, பீகாரின் ரூபளி தொகுதி, இமாச்சல பிரதேசத்தில் தேரா, ஹமீர்பூர், நலகர், மத்திய பிரதேசத்தின் அமர்வரா, பஞ்சாப்பின் ஜலந்தர் மேற்கு, உத்ரகண்டின் பத்ரிநாத், மங்களூர், மேற்கு வங்கத்தின் ராய்கஞ்ச், ரணாகத் தக்ஷின், பேக்டா, மணிக்தலா ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில், வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டு உள்ளன.
விக்கிரவாண்டியில் வெற்றியை குவித்த திமுக
தமிழ்நாட்டின் விக்கிரவாண்டி தொகுதியை பொறுத்தவரை திமுக வேட்பாளராக களம் இறங்கிய அன்னியூர் சிவா, ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 53 வாக்குகளை பெற்று வெற்றி பெற்று உள்ளார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிட்ட சி.அன்புமணி 56 ஆயிரத்து 296 வாக்குகளை பெற்று 68 ஆயிரத்து 757 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட அபிநயா 10 ஆயிரத்து 602 வாக்குகள் மட்டுமே பெற்று டெபாசிட் இழந்தார். இவருக்கும் திமுக வேட்பாளருக்கும் இடையேயான வாக்குகள் வித்தியாசம் மட்டும் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 451 வாக்குகள் ஆகும்.
பீகாரில் வென்ற சுயேச்சை!
பீகார் மாநிலம் ரூபளியில் நடைபெற்ற சட்டமன்ற இடைத் தேர்தலில் 68 ஆயிரத்து 70 வாக்குகள் பெற்று சுயேச்சை வேட்பாளரான சங்கர் சிங் வெற்றி பெற்று உள்ளார்.
அவரை எதிர்த்து தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிட்ட ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் கலந்தர் பிரசாத் மண்டல் 59 ஆயிரத்து 824 வாக்குகளை பெற்று தோல்வி அடைந்தார்.
இந்தியா கூட்டணி சார்பில் ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சி சார்பில் போட்டியிட்ட பிமா பாரதி 30 ஆயிரத்து 619 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.
இமாச்சல பிரதேசத்தை வென்ற காங்கிரஸ்
இமாச்சல பிரதேசத்தின் தேரா மற்றும் நலகர் தொகுதிகளை காங்கிரஸ் கட்சி கைப்பற்றிய நிலையில், ஹமீர்பூர் தொகுதியில் பாஜக வெற்றி பெற்று உள்ளது. மேலும் மத்திய பிரதேசத்தின் அமர்வாரா தொகுதியில் நடந்த இடைத் தேர்தலிலும் பாஜக வெற்றி பெற்று உள்ளது.
பஞ்சாபில் வென்ற ஆம் ஆத்மி
பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மேற்கு தொகுதியில் நடைபெற்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் மொஹிந்தர் பகத் வெற்றி பெற்று உள்ளார். இந்த தொகுதியில் பாஜக இரண்டாம் இடமும், காங்கிரஸ் கட்சி மூன்றாம் இடமும் பிடித்தது.
உத்ரகண்ட் மாநிலத்தில் உள்ள பத்ரிநாத் மற்றும் மங்களூரு தொகுதிகளையும் காங்கிரஸ் கட்சியே கைப்பற்றி உள்ளது.
மேற்கு வங்கத்தை வென்ற மம்தா
மேற்கு வங்க மாநிலத்தை பொறுத்தவரை தனித்து போட்டியிட்ட திரிணாமும் காங்கிரஸ் கட்சி மொத்தம் உள்ள 4 தொகுதிகளிலும் வெற்றியை ருசித்து உள்ளது.
இதன்படி தனித்து போட்டியிட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 4 இடங்களையும், காங்கிரஸ் கட்சி 4 இடங்களையும், ஆம் ஆத்மி, திமுக ஒரு இடங்களையும் கைப்பற்றி உள்ளனர். 2 இடங்களில் பாஜகவும், ஒரு இடத்தில் சுயேச்சையும் வெற்றி பெற்று உள்ளனர்.
டாபிக்ஸ்