Coimbatore Mayor: கோயம்புத்தூர் மாநகராட்சி மேயர் ஆனார் ரங்கநாயகி! போட்டி ஏதுமின்றி அன்னப்போஸ்ட் ஆக தேர்வு
Aug 06, 2024, 11:40 AM IST
கோவை மாநகராட்சி மேயர் ஆக இருந்த கல்பனா ஆனந்த குமார் கடந்த மாதம் ஜூலை 3ஆம் தேதி அன்று தனது மேயர் பதவியை ராஜினாமா செய்து இருந்தார். இதனால் கோவை மேயர் பதவி காலியானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
கோவை மாநகராட்சியின் 2ஆவது மேயராக திமுகவை சேர்ந்த ரங்கநாயகி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
கோவை மாநகராட்சி மேயர் ஆக இருந்த கல்பனா ஆனந்த குமார் கடந்த மாதம் ஜூலை 3ஆம் தேதி அன்று தனது மேயர் பதவியை ராஜினாமா செய்து இருந்தார். இதனால் கோவை மேயர் பதவி காலியானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
ஆகஸ்ட் 6ஆம் தேதியான இன்றைய தினம் காலியாக உள்ள மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.
கோவை மாநகராட்சி
கோவை மாநகராட்சியில் மொத்தம் நூறு கவுன்சிலர்கள் உள்ளனர். இதில் 97 பேர் திமுக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர். மேலும் மூன்று பேர் அதிமுக கவுன்சிலர்கள். கோவை மாநகராட்சி மேயராக திமுகவைச் சேர்ந்த கல்பனா ஆனந்தகுமார் இருந்து வந்தார். இவர் மாநகராட்சி தேர்தலில் கோவையில் 19ஆவது வார்டில் வெற்றி பெற்று கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கோவை மாநகரின் முதல் பெண் மேயர்
நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிறகு கோவை மாநகராட்சி மேயர் ஆக இருந்த கல்பனா தனது பதவியை ராஜிமானா செய்து இருந்தார். உள்ளாட்சித் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வென்ற கல்பனா கோவை மாநகரின் முதல் பெண் மேயர் ஆவார்.
இது தொடர்பாக கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் நிருபர்களிடம் கூறுகையில், கல்பனா தனிப்பட்ட காரணங்களுக்காக ராஜினாமா செய்தார். "உடல்நலம் மற்றும் குடும்ப சூழ்நிலை காரணமாக இந்த முடிவு எடுத்ததாக குறிப்பிட்டு உள்ளார்” என அவர் கூறி இருந்தார். இந்த ராஜினாமா ஏற்கப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்தனர்.
உட்கட்சி பூசல்
கோவை மேயர் ஆக இருந்த கல்பனாவின் கணவர் ஆனந்தகுமார் திமுகவில் பொறுப்புக் குழு உறுப்பினராக உள்ளார். இந்நிலையில் மேயர் கல்பனா பொறுப்பேற்றது முதல் அவர் மீது பல புகார்கள் எழுந்தது. இதற்கு அவரது கணவர் ஆனந்த குமாரின் தலையீடு மிக முக்கிய காரணம் என்று திமுக வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டது.
மேயர் செயல்பாட்டில் திருப்தி இல்லை
இதனால் திமுக கவுன்சிலர்கள் மட்டத்திலும் நிர்வாகிகள் மத்தியிலும் பெரிதாக நம்பிக்கை பெறவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் திமுக கட்சி கவுன்சிலர்களுக்கும் இவருக்கும் இடையில் உட்கட்சி பூசல் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் கோவை மேயர் கல்பனாவின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை என்றும் கூறப்படுகின்றது.
கண்ணீருடன் வெளியேறிய மீனா லோகு
இந்த நிலையில் புதிய மேயர் பதவிக்கான போட்டியில் கோவை மாநகராட்சி கவுன்சிலர் மீனா லோகுவின் பெயரும் பரிசீலனை செய்யப்பட்டது. இந்த நிலையில் அவருக்கு பதிலாக புதிய வேட்பாளராக ரங்கநாயகி அறிவிக்கப்பட்டு உள்ளார். இதனால் அவர் கண்ணீர் உடன் வெளியேறினார்.
கோவை மேயர் ஆக ரங்கநாயகி தேர்வு
இந்த நிலையில் கோவை மேயர் பதவிக்கு திமுக கவுன்சிலர் ரங்கநாயகியை தவிர வேறு யாரும் வேட்புமனுத்தாக்கல் செய்யாத காரணத்தால் போட்டி ஏதுமின்றி ஒருமனதாக ரங்கநாயகி தேர்வு செய்யப்பட்டார்.
25 மாநகராட்சிகள்
தமிழ்நாட்டை பொறுத்தவரை சென்னை, கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, மதுரை, சேலம், திருப்பூர், திருநெல்வேலி, ஈரோடு, வேலூர், கடலூர், கரூர், ஒசூர், தூத்துக்குடி, நாகர்கோயில், காஞ்சிபுரம், சிவகாசி, தஞ்சாவூர், கும்பகோணம், திண்டுக்கல், தாம்பரம், ஆவடி ஆகிய மாநகராட்சிகள் உள்ளன. புதுக்கோட்டை, காரைக்குடி, திருவண்ணாமலை, நாமக்கல் ஆகிய நகராட்சிகள் புதிய மாநகராட்சிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளன.
டாபிக்ஸ்