கோயில்களில் இலவச திருமணம்: புதிய அரசாணை வெளியீடு - விபரம் இதோ!
Feb 16, 2023, 07:28 PM IST
Government Order: தமிழக அரசின் சார்பில் திருக்கோயில்களில் நடத்தப்படும் இலவச திருமணத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ள திட்டச் செலவினத் தொகையை உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக அரசின் சார்பில் திருக்கோயில்களில் நடத்தப்படும் இலவச திருமணத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ள திட்டச் செலவினத் தொகையை ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரமாக உயர்த்தி புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் ஏழை, எளிய இந்து மக்கள் பயன்பெறும் வகையில் திருக்கோயில்களில் திருமணம் நடத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்படி ஏழை மக்களுக்கு ரூ.20,000 செலவில் அரசின் சார்பில் திருமணம் நடத்தி வைக்கப்படும். இதற்காக மணமக்களுக்கு 2 கிராம் திருமாங்கல்யம், மணமகன் ஆடை, மணமகள் ஆடை, மணமகன், மணமகள் வீட்டாா்களுக்கு 20 நபா்களுக்கு விருந்து, மாலைகள், சீா்வரிசை பாத்திரங்கள் உள்பட ஒவ்வொரு ஜோடிக்கும் தலா ரூ.20 ஆயிரம் வரை செலவு செய்யப்படும்.
இத்திட்டத்தின் கீழ் திருமணம் செய்து கொள்ள விரும்பும் ஜோடிகள் அந்தந்த பகுதியில் உள்ள கோயில்களில் விண்ணப்பங்கள் பெற்று பூா்த்தி செய்து உரிய ஆவணங்களோடு சமா்ப்பிக்க வேண்டும். இத்திட்டத்தின் கீழ் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ள ஜோடிகள் இந்து என்பதற்காக சான்று, வயது சான்று, திருமணப் பத்திரிகை, ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களுடன் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை வழங்க வேண்டும்.
இந்தநிலையில், திருக்கோயில்களில் நடத்தப்படும் இலவச திருமணத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ள திட்டச் செலவினத் தொகையை ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரமாக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, மணமக்களுக்கு 4 கிராம் திருமாங்கல்யம், மணமகன் ஆடை, மணமகள் ஆடை, மணமகன், மணமகள் வீட்டாா்களுக்கு 20 நபா்களுக்கு விருந்து, மாலைகள், பீரோ -1, கட்டில்-1, மெத்தை, கைக்கடிகாரம் - 2, மிக்ஸி-1 உள்ளிட்ட சீா்வரிசை பாத்திரங்கள் உள்பட ஒவ்வொரு ஜோடிக்கும் தலா ரூ.50 ஆயிரம் வரை செலவு செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்