NTK Seeman Press Meet: ’ஆபாசமாக திட்டுவது நாம் தமிழர் பிள்ளைகளின் வேலை இல்லை' சீமான் நறுக் பதில்!
Aug 19, 2024, 02:25 PM IST
திமுகவை யார் எதிர்த்தாலும் சங்கி, பாஜகவின் பி டீம் என்று சொல்கிறீர்கள். ஆனால் இப்போது உங்களை என்ன டீம் என்று சொல்வது, ஏ முதல் இசட் வரை அனைத்து டீம் ஆகவும் திமுகவினர்தான் உள்ளனர்.
ஆபாசமாக திட்டுவது நாம் தமிழர் பிள்ளைகளின் வேலை இல்லை என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறி உள்ளார் .
விஜய் உடன் கூட்டணியா?
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும். தம்பி விஜய் அவர்கள் வரும் செப்டம்பர் மாதத்தில் புதிய கட்சியை தொடங்குகிறார். அவருடன் கூட்டணி வைப்பது குறித்து அந்த நேரத்தில் முடிவு செய்வோம். எங்களோடு கூட்டணி சேர்வது குறித்த முடிவை எனது தம்பிதான் எடுக்க வேண்டும் என கூறினார்.
எனக்கு இதுவா வேலை
காவல்துறை அதிகாரிகளை நாம் தமிழர் கட்சியினர் ஆபாசமாக பேசிய புகார் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், என்னை பலகாலமாக இழிவாக எழுதுகிறார்கள், அதையெல்லாம் யார் சொல்லி எழுதுகிறார்கள். அதை அவர்களின் தலைமைதான் சொல்லி செய்கிறார்கள் என்று நான் சொல்லவா?, எனது அம்மா, மனைவி, தங்கை, கட்சியில் உள்ள பெண்களை இழிவாக எழுதி வருகின்றனர். அதை நான் கடந்து சென்று கொண்டு இருக்கிறேன். திடீரென்று நான் சொல்லித்தான் எழுதுகிறார்கள் என்றால், எனக்கு இதுவா வேலை.
நடவடிக்கை எடுத்து உள்ளேன்!
பேக் ஐடிகளை நீங்களே உருவாக்கி, நீங்களே திட்டிக் கொண்டு இருக்கிறீர்கள். எனது பெயரிலேயே போலி அறிக்கைகளை வெளியிட்டு உள்ளனர். ஆபாசமாக திட்டுவது எங்கள் பிள்ளைகளுக்கு வேலை கிடையாது, அதை செய்யமாட்டார்கள், அப்படி செய்தவர்களை உடனுக்கு உடன் கட்சியை விட்டு நீக்கி உள்ளேன். தம்பி துரைமுருகனை கூட 2 முறை கட்சியில் இருந்து நீக்கி உள்ளேன் என கூறினார்.
செல்லாக்காசுக்காக சரண் அடைந்துவிட்டார்கள்
கலைஞர் கருணாநிதி நாணய வெளியீட்டு விழா குறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்த அவர், திமுகவை யார் எதிர்த்தாலும் சங்கி, பாஜகவின் பி டீம் என்று சொல்கிறீர்கள். ஆனால் இப்போது உங்களை என்ன டீம் என்று சொல்வது, ஏ முதல் இசட் வரை அனைத்து டீம் ஆகவும் திமுகவினர்தான் உள்ளனர். நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு பெயர் இல்லை என்றதும் நிதி ஆயோக் கூட்டத்தை முதலமைச்சர் புறக்கணித்தார். ஆனால் உங்கள் அப்பா பெயரில் நாணயம் வெளியிட்ட உடனே ஆளுநர் மாளிகைக்கு சென்று கைகுலுக்குகின்றனர். இது மிகப்பெரிய சந்தர்ப்பவாதம். இதை பற்றி ஒருத்தரும் பேசவில்லை. நூறு ரூபாய் செல்லாக்காசுக்காக சரண் அடைந்துவிட்டார்கள் என கூறினார்.
அவசியம் என்ன?
தொடர்ந்து பேசிய அவர், அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த முறைகேடுகளை அறப்போர் இயக்கம் வெளியில் கொண்டு வரவில்லை என்றால் இன்று வரை இந்த முறைகேடு நடந்து கொண்டுதான் இருக்கும். தமிழ்நாட்டில் தொல்லியல் துறையில் சேர்வதற்கு எதற்கு சமஸ்கிருதம் தெரிந்து இருக்க வேண்டும். அதற்கான அவசியம் என்ன? என்றும் கேள்வி எழுப்பினார்.
திருச்சி எஸ்.பி. வருண் குமாரின் ட்வீட்
முன்னதாக திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக உள்ள வருண் குமார் குறித்தும் அவரது குடும்பத்தினர் குறித்தும் அவதூறு கருத்துக்களை வெளியிட்ட புகாரில் நாம் தமிழர் கட்சியினர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்து இருந்த திருச்சி எஸ்.பி. வருண் குமார், “அரசியலுக்கும் இந்த விஷயத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனது வீட்டில் உள்ள பெண்களையும், எனது குழந்தைகளையும், எனது குடும்பத்தாரையும் அவதூறு பேசி, மிரட்டல் விடுத்த நபர்களை விடமாட்டேன். சட்டத்தின் முன்னால் கண்டிப்பாக கொண்டு வந்து நிறுத்துவேன். என் சட்டப் போராட்டம் தொடரும்.” என தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.