NIRF Ranking: ’அண்ணா யூனிவர்சிட்டிக்கு அடித்தது ஜாக்பாட்!’ நாட்டிலேயே சிறந்த மாநில பல்கலைக்கழகமாக தேர்வு!
நாட்டிலேயே சிறந்த கல்வி நிறுவனமாக மெட்ராஸ் ஐஐடியும், சிறந்த மாநில பல்கலைக்கழகமாக அண்ணா பல்கலைக்கழகமும் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.
நாட்டிலேயே சிறந்த கல்வி நிறுவனமாக மெட்ராஸ் ஐஐடியும், சிறந்த மாநில பல்கலைக்கழகமாக அண்ணா பல்கலைக்கழகமும் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.
மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் NIRF அமைப்பு 2024 ஆம் ஆண்டுக்கான புதிய தரவரிசை பட்டியல்களை வெளியிட்டு உள்ளது. ஒட்டுமொத்த பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள், பொறியியல், மேலாண்மை, மருந்தகம், மருத்துவம், பல் மருத்துவம், சட்டம், கட்டிடக்கலை மற்றும் திட்டமிடல், விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகள், புதுமை, மாநில பல்கலைக்கழகம், திறன் பல்கலைக்கழகம் மற்றும் திறந்த நிலை பல்கலைக்கழகம் உள்ளிட்ட 16 வெவ்வேறு பிரிவுகளுக்கான தரவரிசைகள் இதில் அடங்கும்.
புது டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இந்த தரவரிசை பட்டியலை வெளியிட்டார்.
இந்த ஆண்டு, ஒட்டுமொத்தப் பிரிவில் நாட்டிலேயே சிறந்த கல்வி நிறுவனமாக தொடர்ந்து 6ஆவது ஆண்டாக ஐஐடி மெட்ராஸ் முதலிடத்தை தக்கவைத்து உள்ளது. ஐஐஎஸ்சி பெங்களூர் இரண்டாவது இடத்தையும், ஐஐடி பாம்பே மூன்றாவது இடத்தையும் பிடித்து உள்ளது. கடந்த ஆண்டு மூன்றாவது இடத்தில் இருந்த ஐஐடி டெல்லி நான்காவது இடத்திற்குச் சரிந்துள்ளது. அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம், புது தில்லி மற்றும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் தவிர எட்டு ஐஐடிகள் முதல் பத்து இடங்களில் இடம்பெற்றுள்ளன. பல்கலைக்கழகங்களில், ஐஐஎஸ்சி பெங்களூருக்கு அடுத்தபடியாக ஜேஎன்யு மற்றும் ஜாமியா மில்லியா இஸ்லாமியா ஆகிய கல்வி நிறுவனங்கள் உள்ளன.
நாட்டிலேயே சிறந்த கல்வி நிறுவனங்கள்:-
- ஐஐடி மெட்ராஸ்
- ஐஐஎஸ்சி பெங்களூரு
- ஐஐடி டெல்லி
- ஐஐடி கான்பூர்
- ஐஐடி காரக்பூர்
- எய்ம்ஸ், புது தில்லி
- ஐஐடி ரூர்க்கி
- ஐஐடி குவஹாத்தி
- ஜேஎன்யு, புதுடெல்லி
பொறியியல் தரவரிசைகளிலும் ஐஐடிக்கள் சாதனை
பொறியியல் கல்லூரிகளுக்கான முதல் பத்து பட்டியலில் ஒன்பது ஐஐடிகள் உள்ளன, மேலும் இந்த பிரிவில் தொடர்ந்து ஒன்பதாவது ஆண்டாக ஐஐடி மெட்ராஸ் முதலிடத்தில் உள்ளது. ஐஐடி டெல்லி மற்றும் ஐஐடி பாம்பே ஆகியவை முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தைத் தக்கவைத்துள்ளன. நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, திருச்சிராப்பள்ளி மட்டுமே முதல் 10 இடங்களில் ஐஐடி நிறுவனங்களை சாராத கல்வி நிறுவனமாக உள்ளது.
மேலாண்மை கல்லூரிகளில் தரவரிசை பட்டியல்
மேலாண்மைக் கல்லூரிகளில், ஐஐஎம் அகமாதாபாத் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டு உள்ளது. ஐஐஎம் பெங்களூரு மற்றும் ஐஐஎம் கோழிக்கோடு ஆகியவை அடுத்தடுத்த இடங்களை பெற்று உள்ளன. ஐஐடி பம்பாய் மற்றும் ஐஐடி டெல்லி ஆகியவை மேலாண்மை படிப்புகளுக்கான சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான முதல் பத்து இடங்களில் உள்ளன.
அண்ணா பல்கலைக்கழகம்
மாநில பொதுப் பல்கலைக்கழக தரவரிசை பட்டியல் என்ற புதிய பிரிவும் இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதில் சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் முதலிடத்தையும், கொல்கத்தாவில் உள்ள ஜாதவ்பூர் பல்கலைக்கழகம் மற்றும் புனேவில் உள்ள சாவித்ரிபாய் பூலே பல்கலைக்கழகம் இரண்டாவது இடத்தையும் பிடித்து உள்ளன.
பல் மருத்துவம்
பல் மருத்துவக் கல்லூரிகளில், சென்னையில் உள்ள சவீதா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் அண்ட் டெக்னிக்கல் சயின்சஸ் கல்லூரி முதல் இடத்தை தக்க வைத்துக் கொண்டு உள்ளது. மணிப்பால் பல் மருத்துவ அறிவியல் கல்லூரி இரண்டாம் இடத்திலும், புது தில்லியின் மௌலானா ஆசாத் இன்ஸ்டிடியூட் ஆப் டென்டல் சயின்சஸ் மூன்றாம் இடத்திலும் உள்ளது.
டாபிக்ஸ்