Kallakurichi: ’கள்ளக்குறிச்சி மரண ஓலம்! யார் பொறுப்பு?’ அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் எ.வ.வேலு கூட்டாக பேட்டி!
Jun 21, 2024, 11:24 AM IST
Kallakurichi Liquor Deaths: பாதிக்கப்பட்டவர்கள் உயிரை காப்பாற்ற வேண்டும் என்பதில் நூறு சதவீதம் முனைப்போடு செயல்பட்டு வருகின்றோம். இந்த சம்பவத்திற்கு காவல்துறை முறையாக பணியாற்றினால் இது நடந்து இருக்காது என்று எண்ணியதால், பல காவலர்கள் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என எ.வ.வேலு பேட்டி
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கும், சிகிச்சை பெற்று வருபவர்களுக்கும் அரசின் சார்பில் அறிவிக்கப்பட்ட நிவாரண நிதியை சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர் வழங்கினர்.
அமைச்சர் எ.வ.வேலு பேட்டி
பின்னர் அமைச்சர்கள் எ.வ.வேலு மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அமைச்சர் எ.வ.வேலு, முதலமைச்சர் சார்பாக சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வந்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களை மீட்பது குறித்து ஆலோசனைகளை வழங்கி உள்ளார்.
பாதிக்கப்பட்டவர்கள் உயிரை காப்பாற்ற வேண்டும் என்பதில் நூறு சதவீதம் முனைப்போடு செயல்பட்டு வருகின்றோம். இந்த சம்பவத்திற்கு இங்குள்ள காவல்துறை முறையாக பணியாற்றினால் இது நடந்து இருக்காது என்று எண்ணியதால், பல காவலர்கள் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட ஆட்சியர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.
இது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை தரவும், ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இறந்த குடும்பங்களுக்கு 10 லட்சம் ரூபாயும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் கொடுத்து உள்ளோம்.
132 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை 38 பேர் உயிரிழந்துள்ளனர். மீதம் உள்ளவர்களை காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது.
கேள்வி:- காவல்துறைக்கு தெரிந்தே கள்ளச்சாராய விற்பனை நடந்ததாக பொதுமக்கள் கூறுகின்றார்களே?
நீங்கள் சொல்வதை மறுக்கவிரும்பவில்லை. முதலமைச்சர் அவர்கள் மாதம்தோறும் காவல்துறையில் ஆய்வு நடத்தி வருகின்றார். அதுமீறி இந்த சம்பவம் நடைபெற்றதால், காவல் அதிகாரிகள் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். சிபிஐடி விசாரணைக்கு முதலமைச்சர் உத்தரவிட்டு உள்ளார். சிபிசிஐடி ஐஜி அன்பு தலைமையில் 5 குழுக்களை நியமித்துள்ளோம்.
கள்ளக்குறிச்சி சம்பவத்தை முன்னுதாரணமாக வைத்துக் கொண்டு தமிழ்நாடு முழுவதும் கடும் சட்டங்களை முதலமைச்சர் இயற்றுவார். கள்ளச்சாராய விஷத்தை முறிக்கும் மருந்துகள் அரசிடம் போதுமான அளவுக்கு உள்ளது. வேண்டும் என்றே இந்த அரசு மீது குறை சொல்ல வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் கூறி உள்ளார்.
கேள்வி:- கள்ளச்சாராய விற்பனையை தடுக்கத் தவறிய எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?
கட்சி, எம்.எல்.ஏக்கள் என யார் தவறு செய்து இருந்தாலும் முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார்.
கேள்வி:- காவல்துறையில் அரசியல் அழுத்தம் உள்ளதாக கூறப்படுகின்றதே?
பேச்சுவாக்கில் இதை சொல்ல முடியாது, ஆதாரத்துடம் புகார் அளித்தால் விசாரணை நடத்துவோம் என தெரிவித்து உள்ளார்.
ஒருநபர் விசாரணை ஆணையம் அமைப்பு
இந்த நிலையில் கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டு உள்ளார். அதில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள இந்தச் சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை மேற்கொண்டு, இது நிகழ்ந்ததற்கான அனைத்துக் காரணிகளைக் கண்டறியவும், எதிர்வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் தமிழ்நாட்டில் மீண்டும் நடைபெறாமல் இருக்க, மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு ஆலோசனைகளை வழங்கிடவும், ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் திரு.பி.கோகுல்தாஸ் அவர்கள் தலைமையில் ஒருநபர் ஆணையம் இந்த ஆணையம், சம்பவம் குறித்து முழுமையாக விசாரித்து தனது மாதங்களுக்குள் வழங்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.