Kallakurichi hooch tragedy: இன்னும் ஓயாத கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய ஓலம்! உயிரிழந்தோர் எண்ணிக்கை 67ஆக உயர்வு!
Jul 15, 2024, 09:49 PM IST
Kallakurichi hooch tragedy: அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த கண்ணனின் கணையம், சிறுநீரகம் உட்பட அனைத்து உறுப்புகளும் செயல் இழந்ததால் உயிரிழந்தார்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67ஆக உயர்ந்து உள்ளது.
கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த சாராயத்தை குடித்து பாதிக்கப்பட்டவர்கள் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மட்டும் 20 பேர் வரை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டவர்களில் 8 பேர் வரை உயிரிழந்து உள்ளனர். 10 பேர் வரை குணம் அடைந்து வீட்டுக்கு சென்று உள்ளனர்.
இந்த நிலையில் விஷ சாராயம் குடித்து ஜிப்மரில் தொடர்ந்து சிகிச்சையில் இருந்த, 72 வயது ஆகும் கண்ணன் என்பவர் உயிரிழந்து உள்ளார்.
அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த கண்ணனின் கணையம், சிறுநீரகம் உட்பட அனைத்து உறுப்புகளும் செயல் இழந்ததால் உயிரிழந்தார்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள்
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் ஜூன் 18ஆம் தேதி சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட கள்ளச்சாராயத்தை குடித்து பலர் பாதிக்கப்பட்டனர். இவர்களுக்கு கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம், பாண்டிச்சேரி ஜிப்மர் ஆகிய மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த விவகாரங்களில் உயிரிழந்த குடும்பங்களுக்கு தலா 10 லட்சமும், சிகிச்சை பெறும் குடும்பங்களுக்கு தலா 50 ஆயிரமும் நிவாரணமாக அளிக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது.
கைது செய்யப்பட்டோர் விவரம்
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் விற்பனை செய்த விவகாரம் தொடர்பாக கள்ளக்குறிச்சி காவல் ஆய்வாளர் ஆனந்தன் வழக்குப்பதிவு செய்து கண்ணுக்குட்டி என்கிற கோவிந்த ராஜ், தாமோதரன், கோவிந்தராஜ் மனைவி விஜயாவை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் இதுவரை 21க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கள்ளச்சாராயம் விற்பனைக்கு மெத்தனால் விற்பனை செய்த சின்னதுரை என்பவரும் கைது செய்யப்பட்டு உள்ளார். மேலும் தமிழ்நாடு முழுவதும் கள்ளச்சாராய புகாரில் குற்றப்பின்னணி உடையவர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி கைது செய்து வருகின்றனர்.
விசாரணை அதிகாரி நியமனம்
கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்க விசாரணை அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி. ஏ.டி.எஸ்.பி. கோமதி விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஒருநபர் விசாரணை ஆணையம் அமைப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள இந்தச் சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை மேற்கொண்டு, இது நிகழ்ந்ததற்கான அனைத்துக் காரணிகளைக் கண்டறியவும், எதிர்வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் தமிழ்நாட்டில் மீண்டும் நடைபெறாமல் இருக்க, மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு ஆலோசனைகளை வழங்கிடவும், ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் திரு.பி.கோகுல்தாஸ் அவர்கள் தலைமையில் ஒருநபர் ஆணையம் இந்த ஆணையம், சம்பவம் குறித்து முழுமையாக விசாரித்து தனது மாதங்களுக்குள் வழங்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி இருந்தார்.
சிபிஐ விசாரணை கோரும் எதிர்க்கட்சிகள்
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு அரசு சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளது. ஆனால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. அதிமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டு வழக்கு நடைபெற்று வருகின்றது.