Jaffar Sadiq: சென்னை அழைத்து வரப்பட்டார் ஜாபர் சாதிக்! இனி ஆட்டம் ஆரம்பம்! 7 செல்போன்களில் உள்ள ரகசியம் அம்பலம் ஆகுமா?
Mar 18, 2024, 10:05 AM IST
“Jaffar Sadiq Case: அவருக்கு 7 நாட்கள் காவல் திக்கப்பட்ட நிலையில் நேற்றைய தினம் ஜாபர் சாதிக்கை விசாரிக்க மேலும் 3 நாட்கள் அனுமதி அளித்து பட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டது”
போதை பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக் சென்னை அழைத்து வரப்பட்டுள்ளார். அயப்பாக்கம் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் அவரிடம் விசாரணை நடத்தப்படுகிறது.
அவருக்கு 7 நாட்கள் காவல் திக்கப்பட்ட நிலையில் நேற்றைய தினம் ஜாபர் சாதிக்கை விசாரிக்க மேலும் 3 நாட்கள் அனுமதி அளித்து பட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை பெருங்குடி பகுதியில் சத்துமாவு பாக்கெட் செய்து விற்பனை செய்வதாக கூறி ஜாபர் சாதிக் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்துள்ளார். கடந்த மார்ச் 14ஆம் தேதி அன்று இந்த வீட்டில் நடந்த சோதனையில் ஒரு பை மற்றும் ஒரு பெட்டி நிறைய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கூறி இருந்தனர்.
மேலும் ஜாபர் சாதிக்கிற்கு அந்த வீட்டை வாடகைக்கு விட்ட வீட்டின் உரிமையாளர் குறித்தும் அவரது பின்னணி குறித்தும் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் அந்த வீட்டிற்கு வந்து சென்றவர்கள் யார் என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
போதைப் பொருள் கடத்தல் வழக்கின் பின்னணி என்ன?
இந்தியாவில் இருந்து தேங்காய் பவுடர், திராட்சை, உலர் பழங்கள் மற்றும் ஹெல்த் மிக்ஸ் பாக்கெட்டுகளில் மறைத்து வைத்து மெதம்பெடமைன் எனும் போதைப்பொருள் தயாரிக்கப் பயன்படும் முக்கிய வேதிப்பொருளான சூடோபெட்ரின் சர்வதேச நாடுகளுக்கு கடத்தப்படுவதாக, டெல்லியில் உள்ள மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து மேற்கு டெல்லியின் கைலாஷ் பார்க் பகுதியில் உள்ள குடோனில் கடந்த 15ஆம் தேதி போதைப் பொருள் தடுப்பு பிரிவினரும் டெல்லி போலீசாரும் சோதனை செய்தனர். இதில் அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 50 கிலோ வேதிப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து அங்கிருந்த சென்னையைச் சேர்ந்த முகேஷ், முஜிபுர், விழுப்புரத்தைச் சேர்ந்த அசோக்குமார் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த கடத்தலில் மூளையாக செயல்பட்டு வந்தவர் தமிழகத்தைச் சேர்ந்த ஜாபர் சாதிக் என்பது அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்தது.
திமுக அயலக அணி நிர்வாகியாக இருந்த ஜாபர் சாதிக்கை அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து திமுக நீக்கியது.
ஜாபர் சாதிக்கை விசாரணைக்கு ஆஜராகுமாறு சென்னை சாந்தோமில் உள்ள அவரது வீட்டில் கடந்த மாதம் 23-ம் தேதி சம்மன் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. ஆனால், அவர் தலைமறைவானார். இதையடுத்து அவரது வீட்டில் சோதனை நடத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் முக்கிய ஆவணங்களை கைப்பற்றி வீட்டுக்கு சீல் வைத்தனர். மேலும் ஜாபர் சாதிக், வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க, விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸும் அனுப்பப்பட்டது. இதற்கிடையில், தலைமறைவாக இருந்து வந்த ஜாபர் சாதிக் கடந்த மார்ச் 9 ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
7 செல்போன்களை வைத்து விசாரணை
ஜாபர் சாதிக்கிடம் இருந்து 7 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், அவரோடு தொடர்பில் இருந்தவர்கள் யார், ஜாபர் சாதிக் உடன் பேசியது யார் என்பது குறித்து மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஜாபர் சாதிக் பயன்படுத்திய மெயில் ஐடியை கைப்பற்றியும் விசாரணை நடந்து வருகிறது.