தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ’Ht Flop Story: ’ஒரு வார்த்தையால் ஓராயிரம் கோடிகளை இழந்த டாடா!’ நானோ கார் தோற்ற கதை!

’HT Flop Story: ’ஒரு வார்த்தையால் ஓராயிரம் கோடிகளை இழந்த டாடா!’ நானோ கார் தோற்ற கதை!

Kathiravan V HT Tamil

Dec 06, 2023, 10:16 AM IST

google News
”வியாபாரம் என்று வந்தால் தோல்வி என்பது குப்பனுக்கும் சுப்பனுக்கும் மட்டுமல்ல, டாடாக்களுக்கும், பிர்லாக்களுக்கும் கூட பொதுவானதுதான”
”வியாபாரம் என்று வந்தால் தோல்வி என்பது குப்பனுக்கும் சுப்பனுக்கும் மட்டுமல்ல, டாடாக்களுக்கும், பிர்லாக்களுக்கும் கூட பொதுவானதுதான”

”வியாபாரம் என்று வந்தால் தோல்வி என்பது குப்பனுக்கும் சுப்பனுக்கும் மட்டுமல்ல, டாடாக்களுக்கும், பிர்லாக்களுக்கும் கூட பொதுவானதுதான”

உள்ளூர் முதல் உலகம் வரை தங்களின் வித்தியாசமான சந்தை யுக்திகள் மூலம் வணிகத்தில் வென்ற தொழில்முனைவோர்கள் குறித்தும், தொழில் நிறுவனங்கள் குறித்தும் 'HT Success story' என்ற தொடரில் பார்த்தோம். தொழில்முனைவோராக வேண்டும் என நினைப்பவர்கள் எந்த அளவுக்கு வெற்றி பெற்ற மனிதர்களின், பிராண்டுகளின் கதையை தெரிந்து கொள்ள வேண்டி உள்ளதோ, அதே அளவுக்கு தோல்வி அடைந்த பிராண்டுகளின், மனிதர்களின் கதையை தெரிந்து கொள்வது அவசியம்.

இன்று முதல் புதிய தொடர்!

அந்த அடிப்படையில் மக்களிடம் பெரும் எதிர்பார்ப்பில் இருந்து தோல்வி அடைந்த பிராண்டுகள் குறித்தும் தொழில்முனைவோர்கள் குறித்தும், தோல்விக்கான காரணங்கள் குறித்தும் ’HT Flop Story’ என்ற தொடரில் அறிந்து கொள்வோம்.

HT Flop Story’ தொடருக்கான முதல் அத்தியாயத்தை எங்கிருந்து தொடங்கலாம் என்று தேடியபோது சட்டென்று மனதில் பட்ட பெயர் ‘டாடா’; நீங்கள் யோசித்து வைத்துள்ள பிஸ்னஸ் ஐடியாக்கள் பற்றி கடந்த தலைமுறையை சேர்ந்த நபர்களிடம் உரையாடி இருந்தால், ‘சொந்தமாக தொழில் செய்ய நீ என்ன டாடாவா? பிர்லாவா?’ என்ற கேள்வியை யாரெனும் ஒருவராவது கேட்டிருப்பார்கள். 

டாடா பிர்லா

இந்திய நிலப்பரப்பில் டாடாக்களாலும், பிர்லாக்களாலும் மட்டுமே தொழில் செய்து ஜெயிக்க முடியும் என்பது அவர்கள் நினைப்பு. ஆனால் இந்திய தொழில் வரலாற்றில் டாடா குழுமம் பல தோல்விகளையும் சந்தித்து இருக்கிறது ஆனால் இன்று வரை சறுக்கவில்லை. 

”தோல்வி என்பது குப்பனுக்கும் சுப்பனுக்கும் மட்டுமல்ல”

நேற்றைய தினம் வந்த வணிக செய்திகளை நீங்கள் உற்று நோக்கி இருந்தால் உங்கள் கண்களுக்கு இந்த செய்தி நிச்சயம் புலப்பட்டு இருக்கும். “பங்கு சந்தையில் பட்டியல் இடப்பட்ட நாள் அன்றே டாடா டெக்னாலஜிஸ் நிறுவனம் 162 சதவீத லாபத்தை கொடுத்தது” என்று, ஆம் வெறும் 500 ரூபாய் கொடுத்து ஒரு வாங்கிய ஒரு ஷேர் 1313 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது. இதற்கெல்லாம் அடிப்படை காரணம் டாடா குழுமத்தின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை.

ஆம் வியாபாரம் என்று வந்தால் தோல்வி என்பது குப்பன்களுக்கும், சுப்பன்களுக்குமானது மட்டுமல்ல, டாடாக்களுக்கும், பிர்லாக்களுக்கும் கூட பொதுதான். ஆனால் அந்த தோல்வியை தாங்க கூடிய சக்தி யாரிடம் உள்ளது என்பதை பொறுத்தே அடுத்த வெற்றி என்பது தீர்மானிக்கப்படும்.

நெரிசல் மிகுந்த மும்பை சாலைகள் 

நடுத்தர மக்கள் நிறைந்த இந்திய வாகன சந்தை விற்பனை சந்தையில் இருசக்கர வாகனங்கள்தான் இன்று வரை ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. ஒரு இருசக்கர வாகனத்தில் கணவன் மனைவி சகிதம், தங்களின் குழந்தைகளையும் அமர வைத்து ஹெல்மெட் ஏதும் இல்லாமல் மும்பை சாலைகளில் பாதுகாப்பற்ற முறையில் செல்லும் ஆயிரக்கணக்கான சாமானியர்களை பார்த்துக் கொண்டிருந்த ரத்தன் டாடாவுக்கு மனதில் உதித்தது அந்த யோசனை. 4 குடும்ப உறுப்பினர்கள் செல்லும் வகையில், நடுத்தரக் குடும்பத்தினர் பயணம் செய்ய ஏதுவாக பைக், ஸ்கூட்டர்களுக்கு மாற்றாக மலிவு விலையில் பாதுகாப்பான காரை கொடுக்கலாமே என்பதுதான் அது. 

”நம்பிக்கை தந்த சின்ன யானை”

அதற்கு முன்னதாக கடந்த 2005ஆம் ஆண்டுதான் “சின்ன யானை” என்ற ஸ்லோகன்கள் உடன் சந்தையில் அறிமுகம் ஆன ‘டாடா ஏஸ்’ என்ற மினி ட்ரக் சக்கை போடு போடத் தொடங்கி இருந்தது.  இது ரத்தன் டாடாவுக்கு பெரும் நம்பிக்கையை தந்து இருந்தது. 

இரு சக்கர வாகனங்களை ஓட்டும் இந்தியர்களுக்கு பாதுகாப்பான கார் பயணத்தை தர ஒரு லட்சம் ரூபாயில் மலிவு விலை காரை டாடா குழுமம் தயாரிக்கும் என்ற அறிவிப்பு, இந்திய வாகன சந்தையை மட்டுமல்ல; இந்த செய்தியை கேட்ட மக்களையும் ஆச்சர்யத்தில் சற்று கலங்கடிக்கவே செய்திருந்தது. ’தி பீப்பிள்ஸ் கார்" என்று செல்ல பெயரிட்டு இந்த அறிவிப்பை ஊடகங்களும் கொண்டாடித் தீர்த்தன.

செலவு குறைப்பு 

கார்களில் உள்ள ஆடம்பர அம்சங்களை நீக்கிவிட்டு அத்தியாவசிய அம்சங்களில் மட்டும் கவனம் செலுத்தும் போது குறைந்த விலையில் கார்களை தர முடியும் என்பதுதான் டாடாவின் திட்டம். இதற்கு ஏற்றார் போல் காரின் நீளம், அலகம், உயரங்களை குறைப்பது, காரை கட்டமைக்க அதிகம் பயன்படுத்தப்படும், ஸ்டீலின் தேவையை குறைத்து காம்போசிட் மெட்டிரீயல்களை பயன்படுத்துவது, ஒரு வைப்பர் பிளேடு, ஒரு சக்கரத்திற்கு மூன்று லக் நட்டுகளை வைப்பது, சிங்கிள் பேலன்சர் ஷாஃப்ட் கொண்ட காரில் 2-சிலிண்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்படுவது என அனைத்திலும் சிக்கனம் காட்டி புதிய ரக காரின் டிசைனை வடிவமைத்தனர் டாடா குழும பொறியாளர்கள். டாடா அறிவித்த ஒரு லட்சம் ரூபாய் காருக்கு மூன்று சக்கரம் வேண்டுமா? அல்லது நான்கு சக்கரங்கள் வேண்டுமா? என்பது வரை காரின் வடிவமைப்பு குறித்த விவாதங்கள் நீண்டனவாம்.

”ஆலை அமையும் போதே தலைவலி”

இந்த காரை தயாரிப்பதற்காகவே மேற்கு வங்க மாநிலம் சிங்கூரில் கார் தொழிற்சாலை அமைக்கப்படும் என டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 2006ஆம் ஆண்டு அறிவித்தது. ஆனால் நிலம் கையகப்படுத்துவதற்கு உள்ளூர் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராடியது டாடா நானோ கார் வெளியீட்டை மேலும் தாமதப்படுத்தியது. இதன் விளைவாக குஜராத் மாநிலத்தில் புதிய தொழிற்சாலை அமைத்து காரை உற்பத்தி முடிவு செய்து 2008ஆம் ஆண்டு முதல் டாடா நானோ காரின் விற்பனை தொடங்கியது.

”என்ன பிரச்னை?”

அப்போது டாடா நானோ காரின் பேசிக் மாடலின் விலை ஒரு லட்சத்து 47ஆயிரம் ஆகவும், Tata Nano LX ரக மாடலின் விலை இரண்டு லட்சத்து ஐந்தாயிரம் ஆகவும் இருந்தது. அறிமுகம் ஆவதற்கு முன்பு வரை ஒரு லட்சம் ரூபாய் கார் என்றே மக்கள் அழைத்து வந்த நிலையில், இந்த விலை ஏற்றம் காரின் மீதான எதிர்பார்ப்பை சற்று குறைத்திருந்தது. உலகின் மிக மலிவான கார் என்ற பெயருடன் வெளிவந்த டாடா நானோ காருக்கு ஆரம்பத்தில் விற்பனை நன்றாகத்தான் இருந்தது. ஆனால் நாட்கள் செல்ல செல்ல அக்காரின் செயல்பாடுகள் குறித்த புகார்கள் எழுந்தன. நானோ கார்கள் தீப்பிடிப்பதாக புகார்கள் வந்தன.

”விற்பனையை சிதைத்த ஒற்றை வார்த்தை”

எல்லாவற்றுக்கும் மேலாக ‘ஒரு லட்சம் ரூபாய்’ மலிவு விலை கார் என்ற பெயரை டாடா நானோவுக்கு நெகட்டீவ் ஆக அமைந்தன. ’முதலில் பைக், அடுத்ததுதான் கார்’ என்பதுதான் சாதாரண சைக்களில் வாழ்கையை தொடங்கும் ஒரு சராசரி இந்திய நடுத்தர குடும்பங்களின் மைண்ட் செட்.

அத்தியாவசியமா? ஆடம்பரமா?

இந்த இடத்தில் ’பைக் என்பது அத்தியவசியம், கார் என்பது ஆடம்பரம்’ என்பதுதான் மக்களின் எண்ணம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அப்படி ஆடம்பர பொருளாக இருக்கும் காரை ’ஒரு லட்ச ரூபாய் கார்’ என்ற பெயருடன் மலிவு விலையில் தரும்போது அந்த காருக்கும் மதிப்பு இல்லை, அதில் பயணிக்கும் நமக்கும் பெரிய மதிப்பில்லை என்ற மைண்ட் செட் டாடா நானோவின் தோல்விக்கு முக்கிய காரணமாக இருந்தது.

இதையும் தாண்டி காலங்கள் செல்ல செல்ல காரின் விலையும் கூடி கொண்டே சென்றது. கடந்த 2018ஆம் ஆண்டு டாடா நானோவின் மிகக் குறைந்த ஆன்-ரோடு விலை ரூ.2.59 லட்சமாக இருந்த நிலையில் அதன் சக போட்டியாளரான மாருதி ஆல்டோ 800 ரக காரின் விலை 2.88 லட்சமாக இருந்தது.

ஆட்டத்தை கலைத்த ஆல்டோ 800

டாடா நானோ காரை விட கூடுதல் அம்சங்களை கொண்டிருந்ததும், மலிவு விலை கார் என்ற பிராண்டிங்கில் சிக்காததும் அல்டோ 800 ரக கார்களின் பலமாக மாறியது. முதல் முதலில் கார் வாங்க வேண்டும் என்று முடிவு செய்பவர்களின் தேர்வு நானோ காரின் விலை கூடுதலாக சில ஆயிரங்களை கொடுத்தால் அதைவிட அதிக அம்சங்களை கொண்ட ஆல்டோ 800 கிடைக்கும் என்ற சூழல் சந்தை போக்கை மாற்றி அமைத்தது. விளைவு சந்தைக்கு வந்த 10ஆவது ஆண்டான 2018ஆம் ஆண்டு ஜூலையில் டாடா நானோ கார் உற்பத்தியை நிறுத்துவதாக டாடா மோட்டார் அறிவித்தது, அதற்கு முந்தைய மாதமான ஜூனில் ஒரே ஒரு நானோ கார் மட்டுமே தயாரித்ததாகவும் அந்நிறுவனம் கூறியது.

நஷ்டம்

டாடா நானோ திட்டத்தால் ஏற்பட்ட இழப்புகளின் சரியான அளவை டாடா மோட்டார்ஸ் பகிரங்கமாக வெளியிடவில்லை. இருப்பினும், காரின் வாழ்நாளில் நிறுவனம் பல பில்லியன் ரூபாய்களை இழந்திருக்கலாம் என்று பல்வேறு மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி, நானோ காரின் மதிப்பு தொடர்ந்து குறைந்து வருவதாகவும், அதன் மதிப்பு ரூபாய் 1,000 கோடி இழப்பை எட்டியிருப்பதாகவும் கூறி இருந்தார். கூடுதலாக, டாடா மோட்டார்ஸ் சிங்கூரில் நானோ ஆலையால் ஏற்பட்ட நஷ்டத்திற்காக மேற்கு வங்க அரசாங்கத்திடம் இருந்து  ரூபாய் 766 கோடி இழப்பீடு பெற்றது.

தோல்வியில் இருந்து பாடம் 

இந்திய சந்தையில் நூற்றாண்டுகளை கடந்து உப்பு முதல் வானூர்தி சேவைகள் வரை விற்றுக் கொண்டிருக்கும் டாடா நிறுவனம், ”இந்தியர்களின் மனதில் அத்தியாவசியம் எது? ஆடம்பரம் எது?”  என்ற பாடத்தை கொள்ள டாடா குழுமம் பல்லாயிரம் கோடி செலவு செய்துவிட்டது. 

ஆனால் அதே வேளையில் தோல்வி அடைந்த நானோ கார் டிசைன்களை மின்சார வாகனங்களாக மாற்றி மீண்டும் சந்தைக்கு கொண்டு வந்துள்ளது டாடா குழுமம்.

”முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்!” 

தோல்விகள் மேலும் தொடரும்…!

டாபிக்ஸ்

அடுத்த செய்தி