HT Flop Story: ‘Pug Dog விற்ற அளவுக்கு Sim Card விற்காதது ஏன்?’ Hutch Telecom தோற்ற கதை!
Dec 13, 2023, 07:00 AM IST
“HT Flop Story: பட்டித்தொட்டி எங்கும் பிரபலம் அடைந்த இந்த விளம்பரம் 2003ஆம் ஆண்டில் சிறந்த விளம்பரத்திற்கான விருதை பிஸ்னஸ் டுடே நிறுவனத்திடம் இருந்து பெற்று இருந்தது”
தோல்வி அடைந்த பிராண்டுகள் குறித்தும் தொழில்முனைவோர்கள் குறித்தும், தோல்விக்கான காரணங்கள் குறித்தும் விளக்கும் வணிகத் தொடர் HT Flop Story
காலையில் கண் விழித்ததும் வீட்டை விட்டு வெளியே செல்லும் சிறுவன் ஒருவனைநாய் ஒன்று பின் தொடர்ந்து செல்லும். மழை ஓய்ந்த பின் ஈரம் காயாமல் இருந்த சாலைகள், ஆள் அரவம் அற்ற நடைபாதைகள், பாசைகள் நிறைந்த படிக்கட்டுகள், பச்சை வயல்கள், நீர்த் தடாகங்களை தாண்டி ஒய்யாரமாக அந்த சிறுவன் நடக்க அவனை விடாமல் பின் தொடரும் நாயின் விளம்பரத்தை 90 கிட்ஸ்களால் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது.
'Wherever You Go Our Network Follows' என்ற விளம்பர ஸ்லோகன் உடன் புகழ் பெற்ற விளம்பர நிறுவனமான Ogilvy & Mather (O&M) நிறுவனம் Hutch நிறுவனத்திற்காக இந்த விளம்பரத்தை தயாரித்து இருந்தது. பார்க்கத் தூண்டும், மனதிற்கு இதமான இந்த ஒரு நிமிட விளம்பரம், ‘நீங்கள் எங்கு சென்றாலும் எங்கள் நெட் ஒர்க் உங்களை பின் தொடரும்’ என்பதை சீக்கா என்ற பக் ரக நாய் மூலம் சூசகமாக சொல்லி இருந்தது.
பட்டித்தொட்டி எங்கும் பிரபலம் அடைந்த இந்த விளம்பரம் 2003ஆம் ஆண்டில் சிறந்த விளம்பரத்திற்கான விருதை பிஸ்னஸ் டுடே நிறுவனத்திடம் இருந்து பெற்று இருந்தது.
பின்னர் ஹட்ச் சிம் கார்டு விற்பனை அதிகரித்ததோ இல்லையோ பக் ரக நாய்களின் விலை அதிகரித்தது. இந்த ரக நாய்களுக்கு கிடைத்த வரவேற்பால் இதன் விலைகள் மும்மடங்கிற்கு மேல் உயர்ந்தது. இது மட்டுமின்றி இந்த ரக நாய்களை சட்டவிரோதமாக இந்தியாவிற்கு கடத்தும் சம்பவங்களும் நடைபெற்றன.
எல்லாவற்றுக்கும் உச்சமாக பீட்டா நிறுவனம் பக் ரக நாய்களை கொண்டு தயாரிக்கப்படும் விளம்பரங்களை ஒளிபரப்ப கூடாது என எதிர்ப்பு தெரிவித்தது. இந்திய கால சூழலுக்கு பக் ரக நாய்கல் ஏற்றது இல்லை என்பது பீட்டா நிறுவனத்தின் கருத்தாக இருந்தது.
ஒரு வணிகத்திற்கு விளம்பரம் மட்டும் நன்றாக அமைந்துவிட்டால் வெற்றி வசப்படும் என்று சொல்பவர்கள் Hutch நிறுவனத்தின் வீழ்ச்சியை பற்றி அறிவது முக்கியம்.
தொடக்கம்
ஹட்ச் என அறியப்படும் ஹட்சிசன் டெலிகம்யூனிகேஷன்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் இந்திய வருகை, வளர்ச்சி, வீழ்ச்சி ஆகியவை இந்தியாவின் தொலைத்தொடர்பு துறையில் குறிப்பிடத்தக்க முத்திரையைப் பதித்துள்ளது. இந்திய தொலைத்தொடர்பு சந்தையில் நுழைய Hutch நிறுவனம் 1994 ஆம் ஆண்டில் Hutchison Max Telecom நிறுவனத்தின் பங்குகளை வாங்கியது. 2000 ஆம் ஆண்டில், நிறுவனத்தை Hutchison Essar Limited என மறுபெயரிட்டது. இந்த நடவடிக்கை இந்தியாவின் வளர்ந்து வரும் தொலைத்தொடர்பு துறையில் அதன் பயணத்தின் தொடக்கத்தை குறிப்பதாக இருந்தது.
சந்தை உத்தி
சிறந்த வாடிக்கையாளர் சேவை, போட்டி கட்டணங்கள் நிர்ணயம் மற்றும் நெட்வொர்க் தரத்தை வழங்குவதில் Hutch கவனம் செலுத்தியது. "நீங்கள் எங்கு சென்றாலும், எங்கள் நெட்வொர்க் பின்தொடரும்" என்ற Hutch நிறுவனத்தில் விளம்பர பரப்புரை நாடு முழுவதும் தடையற்ற இணைப்பை தரும் என்பதை மக்களுக்கு கூறுவதாக இருந்தது.
தொழில்நுட்பம்
நிறுவனம் அதன் நெட்வொர்க் கவரேஜை விரிவுபடுத்துவதிலும் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதிலும் கணிசமான அளவு முதலீடு செய்தது. இது GSM தொழில்நுட்பத்தை ஆரம்பத்தில் ஏற்றுக்கொண்ட நிறுவனங்களில் ஒன்றாகும், இது சிறந்த சேவைகளை வழங்குவதற்கும் பெரிய சந்தைப் பங்கைப் பெறுவதற்கும் வழிவகை செய்தது.
நிதி சிக்கல்களும் வீழ்ச்சியும்!
அதன் ஆரம்ப வெற்றி இருந்தபோதிலும், 2000ஆம் ஆண்டுகளின் நடுப்பகுதியில் Hutch நிறுவனம் நிதி சிக்கல்களை எதிர்கொள்ளத் தொடங்கியது. இந்திய தொலைத்தொடர்பு சந்தையில் ஏற்பட்ட கடுமையான போட்டி, அதிக ஸ்பெக்ட்ரம் செலவுகள் மற்றும் ஒழுங்குமுறை நிச்சயமற்ற தன்மை ஆகியவற்றுடன், விளிம்புகள் மற்றும் லாபம் குறைவதற்கு வழிவகுத்தது. கூடுதலாக, நிறுவனம் 2005 ஆம் ஆண்டில் BBL மொபைலை கையகப்படுத்தியது ஒரு பெரும் தவறாக மாறியதுடன் அதன் நிதிநிலையை கடுமையாக பாதித்தது.
இந்தியாவில் இருந்து வெளியேற்றம்
2007ஆம் ஆண்டில், பார்தி ஏர்டெல் மற்றும் வோடபோன் போன்ற ஆக்ரோஷமான போட்டியாளர்களுடன் போட்டியிட Hutch போராடியது. இது இறுதியில் இந்திய சந்தையில் இருந்து வெளியேற வழிவகுத்தது. 2007 ஆம் ஆண்டில், Hutch அதன் இந்திய செயல்பாடுகளை Vodafone நிறுவனத்திற்கு $11.1 பில்லியன் டாலர்களுக்கு விற்றது, இந்தியாவில் இருந்து வெளியேறியது.
என்னத்தான் விளம்பரம் மக்களை ஈர்த்தாலும் அதன் பிறகு மக்களுக்கு கிடைக்கும் வாடிக்கையாளர் சேவையே என்றும் மனதில் நிலைத்து நிற்கும் என்பதற்கு Hutch டெலிகாம் உதாரணம்.
டாபிக்ஸ்