Top 10 News : பள்ளிகளுக்கு விடுமுறை.. மதுரையில் கொட்டித்தீர்த்த கனமழை.. முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்.. டாப் 10 செய்திகள்!
Oct 26, 2024, 07:24 AM IST
Top 10 News : இன்று பள்ளிகளுக்கு விடுமுறை, மதுரையில் கொட்டித்தீர்த்த கனமழை, முதல்வர் ஸ்டாலின் ஆவேசம் என இன்றைய டாப் 10 செய்திகள் குறித்து பார்க்கலாம்.
இன்று பள்ளி விடுமுறை
மதுரையில் மழை கொட்டித் தீர்த்த நிலையில், மதுரை கிழக்கு மற்றும் வடக்கு ஆகிய இரண்டு வருவாய் வட்டங்களுக்கு மட்டும் இன்று பள்ளி விடுமுறை அளிக்கப்படுவதாக மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவித்துள்ளார். இதேபோல் திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பள்ளிகளுக்கு ஏற்கனவே வார விடுமுறை விடப்பட்ட நிலையில், இன்று சிறப்பு வகுப்புகள் நடத்த உத்தேசித்திருந்தால் அதனை நடத்த வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வாயுக் கசிவு ஏற்பட்ட பள்ளிக்கு இன்று விடுமுறை!
சென்னை திருவொற்றியூரில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் நேற்று காலை வாயுக் கசிவு ஏற்பட்டதில் 30-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு மயக்கம் ஏற்பட்டது. தேசிய மீட்புக் குழுவினர் ஆய்வு செய்துவிட்டு தற்போது வாயுக் கசிவு ஏதுமில்லை என தெரிவித்துள்ளனர். இருப்பினும் மாணவ, மாணவிகளின் நலன் கருதி இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை பெய்ய வாய்ப்பு
தமிழகத்தில் இன்று தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
புறநகர் ரயில்கள் ரத்து
சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு மார்க்கத்தில், 27 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணி முதல் மாலை 5 மணி வரை புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. மாலை 5 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி ரயில்கள் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பூங்கா ரயில் நிலையம் முதல் தாம்பரம் - செங்கல்பட்டு இடையே பயணியர் சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கைது
விடுதலை கட்சி நடத்திய மது விலக்கு மாநாட்டில் கலந்து கொள்வோம் என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பெயரில் அறிக்கை ஒன்று வெளியானது. இது போலி எனவும் இந்த அறிக்கை மீது நடவடிக்க எடுக்க வேண்டும் எனவும் விழுப்புரம் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்து இருந்தார். இந்நிலையில் இந்த புகார் மீதி எந்த வித நடவடிக்கையும் எடுக்க வில்லை என இன்று விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் முன்பு சி.வி.சண்முகம் தரணாவில் ஈடுபட்டார். இதற்காக அவர் காவல் துறையால் கைது செய்யப்பட்டார்.
சிலருக்கு வாயும், வயிறும், மூளையும் எரிகிறது - மு.க.ஸ்டாலின்
அமைச்சர் பொன்முடி எழுதிய “திராவிட இயக்கமும்; கருப்பர் இயக்கமும்” என்ற நூல் வெளியீட்டு விழா அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய திராவிட முன்னேற்ற கழக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின்,திராவிட நல் திருநாடு என்று பாடுவதால் சிலருக்கு வாயும், வயிறும், மூளையும் எரிகிறது என்றால் இன்னும் அதிகமாய் பாடுவோம். திராவிடம் என்பது ஒரு இடப்பெயர். இனத்தின் பெயர். திராவிடம் என்பது ஆரியத்தை பதம் பார்க்கும் சொல் என்று கூறியுள்ளார்.
மதுரையில் கொட்டித்தீர்த்த கனமழை - மக்கள் அவதி
மதுரையில் கனமழை கொட்டியதால் சாலைகள் வெள்ளக் காடாகின. நகரின் பல இடங்களில் மழைநீர் வாய்க்கால்கள் உடைப்பெடுத்து குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்து மக்கள் தவித்தனர். மதுரை நகரில் நேற்று பிற்பகல் 2 மணிக்கு மழை பெய்யத் தொடங்கியது. சாலைகளில் தண்ணீர் ஆறாக ஓடியதால் ஒட்டுமொத்த போக்குவரத்தும் ஸ்தம்பித்தது. மாலை நேரம் என்பதால் பள்ளிக் குழந்தைகள் வீடு திரும்ப முடியாமல் தவித்தனர். அலுவலகப் பணி முடிந்து அலுவலர்கள், தொழிலாளர்கள் இருசக்கர வாகனங்களில் சிரமப்பட்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
திமுக தொகுதி பார்வையாளர்கள் கூட்டம்
சட்டப்பேரவை தேர்தலுக்கான பணிகளை மேற்கொள்வது குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக தொகுதி பார்வையாளர்கள் கூட்டம் வரும் 28-ம் தேதி நடைபெற உள்ளது.
குப்பையை கொட்டினால் AI கேமரா
சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில், பொது இடங்களில் குப்பைகளை கொட்டுபவது தொடர் கதையாக இருந்து வருகிறது. இதனை குறைக்க மாநாகரட்சி சார்பில் அபராதத் தொகை உயர்த்தி அறிவிக்கப்பட்டிருந்தாலும், குப்பை கொட்டுவதையும் எரிப்பதையும் தடுக்க முடியவில்லை. எனவே இதனை தடுக்கும் வகையில், சென்னை மாநகராட்சியில் குப்பை கொட்டுபவர்களை கண்காணிக்க ஏ.ஐ. (AI) தொழில்நுட்பத்துடன் கூடிய சிசிடிவி கேமராக்களை பொருத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதன் மூலம் குறிப்பிட்ட பகுதிகளில் யார் குப்பையை கொட்டினார்கள் என்பதை துல்லியமாக கணிக்கும் நோக்கில் இவ்வாறு செய்யப்பட்டுள்ளது.
பதவி விலகுவாரா உதயநிதி
அரசு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டதை அடுத்து தமிழகத்தை சேர்ந்த பாஜகவினர் இதற்கு கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். ஒன்றிய அமைச்சர் எல் முருகன் அவரது X பதிவில் ஆளுநர் ஆர்.என் ரவி நீ கலந்து கொண்ட நிகழ்ச்சிகள் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டதற்கு அவரையே குற்றம் சாட்டினார். தற்போது உதயநிதி கலந்து கொண்ட விழாவில் இவ்வாறு தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டுள்ளதால் உதயநிதி பதவி விலகுவாரா என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதியும் இந்த செயலுக்கு கண்டனங்களை தெரிவித்து உதயநிதி பதவி விலகுவாரா என தனது எக்ஸ் தள பதிவில் கேள்வி எழுப்பியுள்ளார்.
டாபிக்ஸ்