அரசு அலுவலகங்களில் சோதனை.. 200 ரயில்கள் ரத்து.. நாளை கரையைக் கடக்கிறது டாணா புயல்.. இன்றைய டாப் 10 செய்திகள்!
Oct 24, 2024, 07:08 AM IST
தீபாவளி எதிரொலியாக அரசு அலுவலகங்களில் சோதனை, புயல் காரணமாக 200 ரயில்கள் ரத்து, நாளை கரையைக் கடக்கிறது டாணா புயல் என இன்றைய டாப் 10 செய்திகள் குறித்து பார்க்கலாம்.
அரசு அலுவலகங்களில் சோதனை
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு சோதனையாக தமிழ்நாடு முழுவதும் சார் பதிவாளர் அலுவலகங்கள் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் உள்பட 37 அரசு அலுவலங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ. 33.50 லட்சம் மற்றும் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டு தோறும் பத்திரப்பதிவு அலுவலகங்கள், வட்டார போக்குவரத்து அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள், சுற்றுசுழல் மற்றும் மாசுகட்டுப்பாட்டு அலுவலகங்கள், தொழிலாளர் நல வாரிய அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்துவது வழக்கம்.
முன்னாள் அதிமுக அமைச்சர் வைத்திலிங்கம்
அதிமுக ஆட்சிக் காலத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட திட்ட அனுமதி வழங்குவதற்கு ரூ.27.90 கோடி லஞ்சம் பெற்றதாக லஞ்ச ஒழிப்புத் துறை பதிவு செய்த வழக்கின் அடிப்படையில், முன்னாள் அதிமுக அமைச்சர் வைத்திலிங்கம் தொடர்புடைய 13 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
தொப்புள் கொடியை யூடியூபர் இர்ஃபான் வெட்டிய விவகாரம்
பிரசவத்தின் போது குழந்தையின் தொப்புள் கொடியை யூடியூபர் இர்ஃபான் வெட்டிய விவகாரத்தில் சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனை 10 நாட்களுக்கு மருத்துவம் செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே உள் நோயாளிகளாக இருப்பவர்களுக்கு சிகிச்சை அளிக்கலாம்; புதிதாக நோயாளிகளை அனுமதிக்கக்கூடாது. மருத்துவமனைக்கு முதல்கட்டமாக ரூ.50,000 அபராதம் விதித்து மருத்துவ ஊரக நலப்பணிகள் இயக்குநர் ராஜமூர்த்தி உத்தவிட்டார்.
9 மாவட்டங்களில் கனமழை
ராமநாதபுரம், ஈரோடு, தஞ்சை. தென்காசி மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளை கரையைக் கடக்கிறது டாணா புயல்
வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள டாணா புயல் தீவிர புயலாக வலுப்பெற்றது. நாளை அதிகாலை ஒடிசா, மேற்கு வங்கம் இடையே கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
200 ரயில்கள் ரத்து
டாணா புயல் பாதிப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படும் 14 மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்றும், நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கிழக்கு கடற்கரை வழியாக பயணிக்கும் கிட்டத்தட்ட 200 ரயில்களை ரயில்வே நிர்வாகம் ரத்து செய்துள்ளது.
ராமேஸ்வரம் மீனவர்கள் கைது
ராமேஸ்வரம் மீனவர்களின் 2 விசைப்படகுகளை இலங்கை கடற்படை திடீரென சுற்றிவளைத்து சிறை பிடித்தது. இரண்டு படகை பறிமுதல் செய்து, அதிலிருந்து 16 மீனவர்களையும் இலங்கை கடற்படை கைது செய்து, காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றனர். இலங்கை கடற்படையின் இந்த கைது நடவடிக்கை, ராமேஸ்வரம் தீவு மீனவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி
பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க ரஷ்யா சென்ற பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை அங்கு சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்துப் பேசினார். இந்தப் பேச்சுவார்த்தையின்போது, இந்தியா - சீனா எல்லைப் பிரச்சினைக்கான சிறப்புப் பிரதிநிதிகள் விரைவில் சந்திப்பது என்று இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.
சல்மான் கானுக்கு கொலை மிரட்டல்
சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்த ஜார்க்கண்டைச் சேர்ந்த காய்கறி வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்
பெங்களூரில் நடந்த முதல் டெஸ்டில் முதல் நாளில் மழையால் டாஸ் கூட போடாமல் ரத்து செய்யப்பட்டது. 2வது நாள் டாஸ் போடப்பட்டு மேட்ச் நடந்தது. அவ்வப்போது மழை இடையூறு இருந்தது. முதல் டெஸ்டில் இந்தியா தோல்வியைத் தழுவியது. இந்நிலையில், 2வது டெஸ்ட் மேட்ச் இன்று மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் நடக்கவுள்ளது.
டாபிக்ஸ்