Annamalai Vs Jayakumar: ’நான் லுங்கிதான் கட்டுறன்! உன்னை போல் நைட்டி போடல!’ அண்ணாமலையை விளாசிய ஜெயக்குமார்
Jul 11, 2024, 01:33 PM IST
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள், என்னை லுங்கி கட்டிக் கொண்டு பேட்டிக் கொடுப்பதாக கூறி உள்ளார். லுங்கி என்பது அவமதிக்க கூடிய ஆடையா? என ஜெயக்குமார் கேள்வி
சென்னை எழும்பூரில் உள்ள சுதந்திர போராட்ட வீரர் மாவீரன் அழகுமுத்துக்கோனின் சிலைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
டி.ஜெயக்குமார் பேட்டி
பின்னர் அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, வீரன் அழகு முத்துக்கோன் அவர்கள் இந்திய திருநாடு விடுதலை பெறக்கோரி வெள்ளையர்களுக்கு எதிராக குரல் கொடுத்தவர், வெள்ளையர்களுக்கு வரி கொடுக்கமாட்டேன் என்று சொல்லி, வெள்ளயனுக்கு அடிபணியாமல் வாழ்ந்த வீரன். வெள்ளைக்கார ஏகாதிபத்திய ஆதிக்க சக்திகள் அவரை சிறைப்பிடித்து, துன்புறுத்தியது. ஆனால் அவர் யாரையும் காட்டிக் கொடுக்க மறுத்துவிட்டார்.
அரசியலில் உண்ட வீட்டுக்கே துரோகம் செய்து கொழுத்த நண்டுகள் போல் இருப்பவர்கள் ஒரு பக்கம் இருக்கும் நிலையில், உயிரே போனாலும் காட்டிக்கொடுக்கமாடேன் என்று சொன்னவர் அழகுமுத்துக்கோன் அவர்கள். வீரனாக பிறந்து, வீரனாக வாழ்ந்து மறைந்தவர் அழகு முத்துக் கோன் அவர்கள். அழகு முத்துக்கோன் அவர்களின் சிறப்பினை அறிந்துதான் அம்மா அவர்கள் இந்த சிலையை நிருவி, அரசு விழாவாக கொண்டாட செய்தார்கள் என கூறினார்.
கேள்வி:- பிரிந்து சென்ற மீண்டும் அதிமுகவில் சேர்க்க மூத்த நிர்வாகிகள் ஈபிஎஸிடம் வலியுறுத்தியதாக கூறப்படுகிறதே?
ஏற்கெனவே இது குறித்து, கழக பொதுச்செயலாளர் அவர்கள் தெளிவான கருத்து சொல்லிவிட்டார். கட்சியை பொறுத்தவரை எழுர்ச்சியோடு சிறப்பாக வழிநடத்தப்படுகின்றது. இது சிலபேருக்கு புரியவில்லை, ஒன்றிணைந்தால்தான் வலு என்ற வகையில் ஒரு மாய கருத்து விதைக்கப்படுகின்றது.
திட்டமிட்டு திரைக்கதை வசனம் எழுதப்பட்டு ஒரு மாயை உருவாக்கப்படுகின்றது. அது எள் அளவும் உண்மை இல்லை. டிடிவி தினகரன், ஓபிஎஸ், சசிகலாவை தொண்டர்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். அதிமுகவின் ரத்தத்தை குடித்த அட்டைகள்.
கேள்வி:- அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும் என ஓபிஎஸ் கூறி உள்ளாரே?
ஓபிஎஸ் அம்மாவால் அரசியலுக்கு அறிமுகம் செய்யப்பட்டவரா?; இல்லை. அண்ணன் ஈபிஎஸ், நான் ஆகியோரெல்லாம் அம்மாவால் அறிமுகம் செய்யப்பட்டவர்கள். ஆனால் ஓபிஎஸ், டிடிவி தினகரனால் அறிமுகம் செய்யப்பட்டவர். டிடிவி தினகரன் இல்லை என்றால் ஓபிஎஸ் கிடையாது. 1989ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போடி சட்டமன்றத் தொகுதியில் அம்மாவுக்கு எதிராக போட்டியிட்ட வெண்ணிற ஆடை நிர்மலாவுக்கு ஆதரவாக ஏஜெண்டாக இருந்தவர் ஓ.பன்னீர் செல்வம்.
கட்சியால்தான் நாம் வளர்ந்தோம், ஆனால் கட்சி அலுவலகத்தை கொள்ளை அடித்து உடைத்து ஆதாரயம் தேட முயன்றவர் ஓ.பன்னீர் செல்வம். அவருக்கு கட்சி மீது விஸ்வாசம் கிடையாது. பொதுமக்களால் புறக்கணிக்கப்பட்டவர்
கேள்வி:- அதிமுகவை 90% இணைத்து விட்டதாக சசிகலா கூறி உள்ளாரே?
அவர்கள் கட்சியிலேயே இல்லை; கட்சியில் இல்லாத ஒருவர் எப்படி ஒருங்கிணைக்க முடியும். இந்த மூன்று பேரை தவிர யாரும் கட்சியில் இருந்து விலகி செல்லவில்லை. இவர்களை கட்சியில் இருந்து விலக்க வேண்டும் என்பது பொதுக்குழு எடுத்த முடிவு.
கேள்வி:- அனைத்து அணிகளையும் ஒன்று இணைக்க வேண்டும் என அதிமுகவுக்கு பாஜகவின் பியூஷ் கோயில் அழுத்தம் கொடுப்பதாக கூறப்படுகின்றதே?
பியூஸ் கோயல் யார் எங்கள் கட்சியில் தலையிடுவதற்கு, அவருக்கும் எங்கள் கட்சிக்கு என்ன சம்பந்தம். அவர்களுடன் இருந்த எங்கள் கட்சிக்கு கூட்டணி முடிந்துவிட்டது, எங்கள் கட்சியை பலவீனப்படுத்த வேண்டும் என்பதற்காக இந்து போன்ற கருத்துகள் திட்டமிட்டு பரப்பப்படுகின்றது.
கேள்வி:- தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறி உள்ளாரே?
செல்வப்பெருந்தகை இப்போதுதான் விழித்து இருக்கிறார். அவர் சொல்வது உண்மைதான், ஒரு மாதத்தில் நூற்றுக்கணக்கான கொலைகள் நடைபெறுகின்றது. ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்படும் போது உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் என கோருகிறோம். ஏன் சிபிஐ விசாரணைக்கு அரசு உத்தரவிடவில்லை.
அண்ணாமலை மீது விமர்சனம்
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள், என்னை லுங்கி கட்டிக் கொண்டு பேட்டிக் கொடுப்பதாக கூறி உள்ளார். லுங்கி என்பது அவமதிக்க கூடிய ஆடையா?, லுங்கியை இஸ்லாமியர்களுக்கும், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலும் கட்டுகின்றனர். தமிழ்நாட்டில் வீடுகளில் லுங்கி கட்டுவது மிகவும் இயல்பு, ஆனால் இதை அண்ணாமலை அவமரியாதை செய்கிறார். அண்ணாமலை என்ற வேதாளம் எங்களை விட்டுவிட்டு செல்வப்பெருந்தகை மீது ஏறிவிட்டது. பச்சையாக சொல்ல வேண்டும் என்றால் இஅவரை போல் நான் நைட்டி போட்டுக் கொண்டு சுற்றுவது கிடையாது.
டாபிக்ஸ்