கனமழை எதிரொலி.. மீனவர்களே மறு அறிவிப்பு வரும் வரை கடலில் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் - மீன்வளத்துறை எச்சரிக்கை!
Oct 15, 2024, 08:04 AM IST
நாகை மாவட்டத்தில் உள்ள மீன்பிடி விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலில் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுவடைந்து, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக நாகை உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாகை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் 3500க்கும் மேற்பட்ட ஃபைபர் படகுகள் கரையோரம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
மீன்வளத் துறையினரின் உத்தரவின் பெயரில் ஏற்கனவே கடலுக்குச் சென்ற மீனவர்கள் கரைத் திரும்பி வருகின்றனர். காற்றின் வேகமானது 35 கி.மீ - 65 கி.மீ வரை வீசக்கூடும். மேலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாகை மாவட்டத்தில் உள்ள மீன்பிடி விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலில் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி, அடுத்த 48 மணிநேரத்தில் மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுபெறும். இவை தொடர்ந்து, வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை நோக்கி நகரக் கூடும் என கணிக்கப்படுகிறது.
தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
தென்மேற்கு பருவமழை இந்திய பகுதிகளிலிருந்து அடுத்த நான்கு தினங்களில் விலகக்கூடிய நிலையில் கிழக்கு மற்றும் வடகிழக்கு காற்று தென்னிந்திய பகுதிகளில் வீசும் நிலையில், 16, 17 ஆம் தேதி வாக்கில் வடகிழக்கு பருவமழை தென்னிந்திய பகுதிகளில் துவங்கக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.
மிக கனமழை எச்சரிக்கை
இன்று தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் திருவள்ளூர், இராணிப்பேட்டை சென்னை செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர் மாவட்டங்கள், புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர் திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருச்சிராப்பள்ளி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
உதவி எண்கள் அறிவிப்பு
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் மழை தொடர்பான புகார்கள் மற்றும் மீட்புப் பணிகள் தொடர்பாக மாநகராட்சியின் 150 இணைப்புகளுடன் கூடிய 1913 என்ற உதவி எண்ணிலும், கட்டுப்பாட்டு அறையில் உள்ள 044 2561 9204, 044 25619206 மற்றும் 044 2561 9207 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
மேலும், மாநகராட்சியின் chennaicorporation.gov.in என்ற இணையதளம், நம்ம சென்னை செயலி, Greater Chennai Corporation Facebook. @chennaicorp என்ற Instagram-லும்,@chennaicorp என்ற Thread-லும், @chennaicorp என்ற X App ஆகிய சமூக வலைதளங்களின் வாயிலாகவும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.