Fact Check: நாம் தமிழர் கட்சி-5, பாஜக கூட்டணி-0; வைரலாகும் புதிய தலைமுறை கருத்துக்கணிப்பு.. இது உண்மையா?
Jun 03, 2024, 05:08 PM IST
Fact Check: நாம் தமிழர் கட்சி-5, பாஜக கூட்டணி-0; வைரலாகும் புதிய தலைமுறை கருத்துக்கணிப்பு.. இது உண்மையா? என நியூஸ் செக்கர் செய்தியாளர்கள் குழு கண்டறிந்துள்ளது. அதுகுறித்து பார்ப்போம்.
கூற்று: “நாதக 5 இடங்களில் வெற்றி பெறும்; பாஜக கூட்டணி பூஜ்ஜிய இடங்களையே பெறும்” என்று புதிய தலைமுறை கருத்துக்கணிப்பு வெளியிட்டது என கூறப்படுகிறது.
உண்மை: வைரலாகும் கருத்துக்கணிப்பு எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்டது என்பதே உண்மை. இதுகுறித்து பார்ப்போம்.
2024 பொதுத்தேர்தலின் கடைசி கட்ட வாக்குப்பதிவு நேற்றைய முன்தினம் (ஜூன் 01) முடிவுற்றது. இதனைத் தொடர்ந்து பல தனியார் அமைப்புகளும், ஊடகங்ளும் எந்தக் கட்சி எவ்வளவு இடங்களைப் பிடிக்கும் என கருத்துக்கணிப்புகள் வெளியிட்டு வருகின்றன.
இந்நிலையில் தமிழ்நாட்டில் நாதக 5 இடங்களில் வெற்றி பெறும் எனவும், பாஜக கூட்டணி ஓர் இடத்தில் கூட வெல்லாமல் பூஜ்ஜிய இடங்களையே பெறும் எனவும் புதிய தலைமுறை கருத்துக்கணிப்பு வெளியிட்டதாக புகைப்படம் ஒன்று வைரலாகி வருகின்றது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்து களத்தில் இறங்கியது.
ரிவர்ஸ் சர்ச்
“நாதக 5 இடங்களில் வெற்றி பெறும்; பாஜக கூட்டணி பூஜ்ஜிய இடங்களையே பெறும்” என்று புதிய தலைமுறை கருத்துக்கணிப்பு வெளியிட்டதாக புகைப்படம் ஒன்று வைரலானதை தொடர்ந்து அப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி அப்படம் குறித்து அந்தக் குழு தேடியது.
இத்தேடலில் புதிய தலைமுறையின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்ட உண்மையான கருத்துக்கணிப்பு படத்தை கண்டறிய முடிந்தது. அப்படத்தில் நாதக என்கிற வார்த்தையே இடம்பெற்றிருக்கவில்லை. ‘நாதக’ என்றிருக்கும் இடத்தில் ‘பிற’ என்றே குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் ‘பிற’ என்ற இடத்திற்கு நேராக பூஜ்ஜியம் என்றே இருந்ததேயொழிய, 5 என்று இல்லை. அதேபோல் பாஜக கூட்டணிக்கு நேராக 5 என்று இருந்தது. பூஜ்ஜியம் என்று இல்லை.
கருத்துக்கணிப்பு படம் எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்டது
இதனடிப்படையில் பார்க்கையில் வைரலாகும் கருத்துக்கணிப்பு படம் எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்டது என அறிய முடிகின்றது. வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான கருத்துக்கணிப்பு படத்தையும் எடிட் செய்யப்பட்ட கருத்துக்கணிப்பு படத்தையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.
இதனையடுத்து புதிய தலைமுறையின் டிஜிட்டல் தலைவர் இவானியை தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்டு குறித்து விசாரிக்கையில் வைரலாகும் நியூஸ்கார்ட் எடிட் செய்து மாற்றப்பட்டது என்பதை அவரும் உறுதி செய்தார்.
புதிய தலைமுறையின் இந்த நியூஸ்கார்டானது ‘ஜன் கி பாத்’ என்ற அமைப்பின் கருத்துக்கணிப்பை அடிப்படையாக வெளியிடப்பட்டிருந்ததால் அடுத்து அந்நிறுவனத்தின் சமூக ஊடகப் பக்கங்களை ஆய்வு செய்தோம். அதில் அந்நிறுவனம் தமிழ்நாடு குறித்து வெளியிட்டிருந்த கருத்துக்கணிப்பில் நாதகவின் பெயரே இடம்பெற்றிருக்கவில்லை என அறிய முடிந்தது.
“நாதக 5 இடங்களில் வெற்றி பெறும்; பாஜக கூட்டணி பூஜ்ஜிய இடங்களையே பெறும்” என்று புதிய தலைமுறை கருத்துக்கணிப்பு வெளியிட்டதாக வைரலாகும் படம் எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்ட போலி புகைப்படமாகும். உண்மையில் அந்த கருத்துக்கணிப்பில் நாதகவின் பெயரே இடம்பெற்றிருக்கவில்லை.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
பொறுப்புத் துறப்பு: இந்தச் செய்தி முதலில் நியூஸ்செக்கர் தமிழ்-இல் வெளியிடப்பட்டது, மேலும் சக்தி கலெக்டிவின் ஒரு பகுதியாக HT Digital ஆல் மறுபிரசுரம் செய்யப்பட்டது.
டாபிக்ஸ்