DMK VS ADMK: ’குற்ற வழக்கு தொடர்வுத் துறை இயக்குநராக ஜின்னா நியமனம்!’ விட்டு விளாசும் எடப்பாடி பழனிசாமி!
Jul 26, 2024, 01:51 PM IST
திமுக தனது இரட்டை வேடத்தை அரங்கேற்றியுள்ளது. ஏற்கெனவே, பல ஆண்டுகளாக இந்த இயக்குநரகத்தில் பணிபுரியும் மூத்த அலுவலர்களுடைய நியாயமான பணி உயர்வு இதனால் பாதிப்படைந்துள்ளது.
குற்ற வழக்கு தொடர்வுத் துறை இயக்குநராக ஹசன் முகமது ஜின்னாவை நியமித்து உள்ளதற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.
மாநில குற்றவியல் அரசு தலைமை வழக்கறிஞர்
இது தொடர்பாக ‘எக்ஸ்’ சமூகவலைத்தளத்தில் அவர் பதிவிட்டுள்ள இடுகையில், தமிழ்நாட்டின் குற்ற வழக்கு தொடர்வுத் துறை இயக்குநர் (Director of Prosecution) அவர்கள் 31.1.2024 அன்று சுய விருப்பின் அடிப்படையில் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின் தற்போது, மாநில குற்றவியல் அரசு தலைமை வழக்கறிஞர் (State Public Prosecutor) அவர்களை, குற்ற வழக்கு தொடர்வுத் துறை இயக்குநர் பதவியில் இந்த விடியா திமுக அரசு நியமித்துள்ளது.
பதவி உயர்வு மூலம் நியமனம் செய்யப்படுவது மரபு
பொதுவாக முந்தைய குற்றவியல் நடைமுறைச் சட்டங்களின்படி தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட Asst. Prosecutor-ஆக பணி நியமனம் செய்யப்பட்டவர்கள் பதவி உயர்வின் மூலம் Director of Prosecution ஆக நியமிக்கப்படுவது மரபு.
ஜின்னா நியமனம் விந்தையானது
மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்டங்களைக் கடுமையாக எதிர்ப்பதாக ஒருபுறம் கூறிவிட்டு, மத்திய அரசு கொண்டு வந்த புதிய குற்றவியல் சட்டப்பிரிவு 20(2)(a) Bharatiya Nagarik Suraksha Sanhita 2023ன் படி,ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்ட வழக்கறிஞர் திரு. ஹசன் முகமது ஜின்னா அவர்களை, குற்ற வழக்கு தொடர்வுத் துறை இயக்குநர் (பொறுப்பு)-ஆக (Director of Prosecution Incharge) நியமித்திருப்பது விந்தையானது. அரசு துறையின் தலைவராக அரசியல் சார்புள்ள ஒருவரை இந்த விடியா திமுக அரசு நியமித்து அரசாணை வெளியிட்டுள்ளது தவறான முன்னுதாரணமாகும்.
இரட்டை வேடம் போடும் திமுக
ஒருபுறம் மத்திய அரசு கொண்டு வந்த குற்றவியல் நடைமுறைச் சட்டத்தை எதிர்ப்பதும், ஆர்ப்பாட்டம் செய்வதும், உண்ணாவிரதம் இருப்பதும், மறுபுறம் தனக்குச் சாதகமான உட்பிரிவை பயன்படுத்திக்கொள்வதுமாக
திமுக தனது இரட்டை வேடத்தை அரங்கேற்றியுள்ளது. ஏற்கெனவே, பல ஆண்டுகளாக இந்த இயக்குநரகத்தில் பணிபுரியும் மூத்த அலுவலர்களுடைய நியாயமான பணி உயர்வு இதனால் பாதிப்படைந்துள்ளது. எனவே, அரசியல் சார்புள்ள வழக்கறிஞர் ஒருவரை குற்ற வழக்கு தொடர்வுத் துறை இயக்குநர் பதவிக்கு நியமிக்கக்கூடாது என்றும், வழக்கறிஞர் திரு. ஹசன் முகமது ஜின்னா அவர்களை அப்பதவியிலிருந்து திரும்பப் பெற வேண்டும் என்றும் விடியா தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன் என கூறி உள்ளார்.
பார்முலா ஒன் கார் பந்தயம் தொடர்பாக ட்வீட்
முன்னதாக சென்னையில் நடைபெற இருந்த கார் பந்தயம் தொடர்பாகவும் எடப்பாடி பழனிசாமி ட்வீட் செய்து இருந்தார். அதில், “இரண்டாண்டுகளுக்கு சென்னையில் ஃபார்முலா கார் பந்தயத்தை நடத்த மாட்டோம் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் உறுதி பத்திரம் எழுதித் தந்துவிட்டு, கடந்த வாரம் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை கூடுதல் தலைமைச்செயலாளர் தமிழகத்தில் உள்ள கார் நிறுவனங்களுக்கு ஃபார்முலா கார் பந்தயத்தை சென்னை மாநகரில் நடத்துவதற்காக 'ஸ்பான்சர்ஷிப்' வேண்டி நேர்முகக் கடிதம் எழுதியுள்ளார்.
மேலும், விளையாட்டுத்துறை அனைத்து தொழிற்சாலைகளுக்கும், கார் பந்தயம் நடத்துவதற்குத் தேவையான நிதியினை பந்தய சாலை அபிவிருத்திக்காகவோ, உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காகவோ, குறிப்பிட்ட நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான விளம்பரம் மூலமாகவோ ஸ்பான்சர் வழங்க கேட்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
விடியா திமுக அரசின் இந்த நிர்பந்தம்
விடியா திமுக அரசின் இந்த நிர்பந்தத்தால் பல்வேறு தொழில் அமைப்புகள் கொதிப்படைந்துள்ளன. ஏற்கனவே தமிழகத்தில் விடியா திமுக ஆட்சிப்பொறுப்பேற்றவுடன் மூன்று முறை உயர்த்தப்பட்ட மின் கட்டண அதிகரிப்பால் சிறு, குறு தொழிற்சாலைகள், பஞ்சாலைகள், நூற்பாலைகள் உள்ளிட்ட பிற தொழில்கள் கடுமையாக பாதிப்படைந்து தொழிற்துறை முடங்கியுள்ள நிலையில், விடியா திமுக அரசு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி பார்முலா கார் பந்தயத்தை நடத்திட ஸ்பான்சர்ஷிப் வழங்க வலியுறுத்துவது கண்டிக்கத்தக்கது.”