முன்னாள் அமைச்சர் வீட்டில் அமலாக்கதுறை சோதனை..காவலாளியை தாக்கியவர்களுக்கு சிறை - டாப் 10 செய்திகள் இன்று
Oct 23, 2024, 10:05 AM IST
முன்னாள் அமைச்சர் வீட்டில் அமலாக்கதுறை சோதனை, வங்கக்கடலில் உருவான டாணா புயல், மாமல்லபுரத்தில் காவலாளியை தாக்கியவர்களுக்கு நீதிமன்ற காவல் உள்பட இன்றைய டாப் 10 செய்திகளை பார்க்கலாம்
தமிழ்நாடு அரசியல், குற்றம், வானிலை நிலவரம், பொதுமக்களுக்கான் அப்டேட் உள்பட தமிழ்நாட்டின் இன்றைய நாளில் டாப் 10 செய்திகள் பற்றி பார்க்கலாம்
உருவானது டாணா புயல்
மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயலுக்கு டாணா (DANA) புயல் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்த புயல் அக்டோபர் 25ஆம் தேதி அதிகாலை ஒடிசாவின் பூரி - சாகர் தீவுகளுக்கு இடையே தீவிர புயலாக கரையை கடக்க கூடும். இதன் காரணமாக ஒடிசா, மேற்கு வங்கத்துக்கு 24, 25 ஆகிய 2 நாட்கள் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எம்எல்ஏ ஹாஸ்டலில் அமலாக்கதுறை சோதனை
சென்னையில் இருக்கும் எம்எல்ஏ ஹாஸ்டலில் அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் அறையில் அமலாக்கதுறை சோதனை மேற்கொண்டுள்ளனர். அவரது வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தியுள்ளனர்.
அடுக்குமாடி குடியிருப்பு கட்ட ரூ. 27 கோடி லஞ்சம் பெற்றதாக வைத்தியலிங்கம் உள்ளிட்ட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புதுறை வழக்குப்பதிவு செய்திருந்த நிலையில், தற்போது அமலாக்கதுறையினர் சோதனை நடத்தியுள்ளனர்.
கைதி தாக்கப்பட்ட சம்பவத்தில் 3 பேர் சஸ்பெண்ட்
வேலூர் சிறையில் கைதி தாக்கப்பட்டதாக எழுந்த புகாரில் சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி, சிறை கண்காணிப்பாளர் அப்துல் ரகுமான், ஜெயிலர் அருள்குமரன் என மூன்று பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
டிஐஜி ராஜலட்சுமி வீட்டில் நகை, பணம் திருடியதாக கைதி சிவக்குமார் என்பவர் தாக்கப்பட்டதாக, அவரது தாயார் கலாவதி தொடர்ந்த வழக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
100 அடியை தாண்டிய மேட்டூர் அணை நீர்மட்டம்
மேட்டூர் அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 100.01 அடியை எட்டியுள்ளது. இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக அணை 100 அடியை எட்டியுள்ளது.
தற்போது அணைக்கு வரும் நீர் அளவு வினாடிக்கு 28,850 கனஅடியாக உள்ளது. இதையடுத்து டெல்டா பாசனத்துக்காக 7,500 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது
காவலாளியை தாக்கிய குடும்பத்தை சேர்ந்த மூன்று பேருக்கு நீதிமன்ற காவல்
மாமல்லபுரம் ஐந்துரதம் புராதன சின்னம் அருகில் நோ பார்க்கிங் வழியாக செல்ல முயன்ற காரை தடுத்து நிறுத்திய காவலாளி மீது, காரில் பயணித்த இரு பெண்கள் உள்பட நான்கு பேர் சராமாரி தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து போலீசார் தாக்குதலில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர். இதையடுத்து இவர்கள் திருப்போரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், 3 பேருக்கும் 15 நாள்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டத நிலையில், மூவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்
சென்னையில் 500 தாழ்தள மின்சார பேருந்துகள்
சென்னையில் 500 தாழ்தள மின்சார பேருந்துகள் அடுத்த ஆண்டு ஏப்ரலில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும். நவீன வசதிகளுடன் கூடிய தாழ்தள மின்சாரப் பேருந்துகள் ஒருமுறை மின்னேற்றம் (Charging) செய்தால் சராசரியாக 180 கி.மீ. இயக்க இயலும். நாளொன்றுக்கு சராசரியாக 200 கி.மீ. வரை இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்
தொழிலாளர்கள் போராட்டத்தால் ரூ. 840 கோடி இழப்பு
தொழிலாளர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தால் ரூ.840 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக சாம்சங் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அத்துடன், தங்கள் நிறுவன பெயரை பயன்படுத்தாமல் தொழிற்சங்கத்தை தொடங்கிக் கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது
விரைவில் முடிச்சூர் ஆம்னி பேருந்து நிலையம் திறப்பு
முடிச்சூரில் 5 ஏக்கர் பரப்பளவில் ரூ.42 கோடியே 70 லட்சம் செலவில் அமைக்கப்பட்டு முடியும் தருவாயில் உள்ள ஆம்னி பஸ் நிலையத்தை அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், சேகர்பாபு ஆய்வு செய்தனர். "முடிச்சூர் ஆம்னி பஸ் நிலைத்தையும் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பார். இந்த பேருந்து நிலையம் விரைவில் பயன்பாட்டுக்கு வரும். ஒரே நேரத்தில் 150 பஸ்கள் நிற்க கூடிய அளவுக்கு ஆம்னி பஸ் நிலையம் அமைக்கப்பட உள்ளது" என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.
ரூ. 499க்கு 15 மளிகை பொருள்கள் விற்பனை தொடக்கம்
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் அமுதம் மக்கள் அங்காடிகள் மூலம் ரூ.499க்கு 15 மளிகைப் பொருட்கள் அடங்கிய அமுதம் பிளஸ் மளிகை தொகுப்பு விற்பனை திட்டத்தை அமைச்சர் சக்கரபாணி தொடங்கி வைத்தார்.
இந்த திட்டத்தில், 499 ரூபாய்க்கு கடுகு, சீரகம், வெந்தயம், சோம்பு, மிளகு, மிளகாய், தனியா, புலி, உப்பு, உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு, பாசிப்பருப்பு, வறுகடலை, பெருங்காயத்தூள் என 3.840 கிலோ எடை அளவில் 15 பொருட்கள் இந்த அமுதம் பிளஸ் மளிகை தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. இந்த தொகுப் தீபாவளி வரை மட்டுமே விற்பனையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிங்க் ஆட்டோ ஓட்டுவதற்கு தகுதியான பெண்களுக்கு அழைப்பு
சென்னையில் வசிக்கும் பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடும் வகையில் பிங்க் ஆட்டோக்கள் திட்டத்துக்கு தகுதியான பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு அழைப்பு விடுத்துள்ளது.