Mettur Dam : சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து 10 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் - ராமதாஸ்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Mettur Dam : சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து 10 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் - ராமதாஸ்!

Mettur Dam : சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து 10 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் - ராமதாஸ்!

Divya Sekar HT Tamil
Dec 30, 2023 11:45 AM IST

காவிரி பாசன மாவட்டங்களில் சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து 10 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

மேட்டூர் அணை
மேட்டூர் அணை (Vertigo_Warrior (Twitter))

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, அரியலூர் உள்ளிட்ட காவிரி பாசன மாவட்டங்களில் நிலத்தடி நீரையும், மழையையும் நம்பி சாகுபடி செய்யப்பட்ட சம்பா மற்றும் தாளடி பருவ நெற்பயிர்கள் போதிய நீர் இல்லாமல் வாடத் தொடங்கியுள்ளன. இதே நிலை நீடித்தால் கதிர் வைக்கும் நிலையில் உள்ள நெற்பயிர்கள் கருகிவிடும் ஆபத்து உள்ளது.

காவிரி பாசன மாவட்டங்களில் வழக்கமாக 15 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சம்பா மற்றும் தாளடி பயிர்கள் சாகுபடி செய்யப்படுவது வழக்கம். அதற்காக மேட்டூர் அணையிலிருந்து ஜனவரி 28-ஆம் நாள் வரை தண்ணீர் திறக்கப்படும். ஆனால், மேட்டூர் அணையில் தண்ணீர் இல்லாததால் சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து ஒரு நாள் கூட தண்ணீர் திறக்கப்படவில்லை. வடகிழக்கு பருவமழை ஓரளவு பெய்ததாலும், ஏரி, குளங்களில் நீர் நிரம்பியிருந்ததால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்ததாலும் அதைக் கொண்டு வழக்கத்தை விட பாதிக்கும் குறைவான பரப்பளவில் சம்பா - தாளடி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த இரு வாரங்களாக வடகிழக்கு பருவமழை பெய்யவில்லை என்பதால் கதிர் வைக்கும் நிலையில் உள்ள நெற்பயிர்கள் வாடத் தொடங்கியுள்ளன.

காவிரியில் போதிய அளவு தண்ணீர் திறந்து விடப்படாததால் குறுவை நெற்பயிர்கள் சுமார் 2 லட்சம் ஏக்கர் பரப்பளவில் கருகி விட்டன. அதனால் உழவர்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது. இப்போது சம்பா பயிருக்கும் அதேநிலை ஏற்பட்டால் உழவர்களுக்கு ஈடு செய்ய முடியாத அளவுக்கு இழப்பும், அதனால் கடன்சுமையும் ஏற்படும். அத்தகைய நெருக்கடியிலிருந்து காவிரி பாசன மாவட்ட உழவர்களை காப்பாற்ற வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழக அரசுக்கு உண்டு.

மேட்டூர் அணையில் இன்று காலை நிலவரப்படி 72 அடி, அதாவது 34 டி.எம்.சி தண்ணீர் உள்ளது. அதைக் கொண்டு வினாடிக்கு 6000 கன அடி வீதம் 10 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டால், அதனால் நேரடிப் பாசனம், நீர்நிலைகளை நிரப்புவதன் மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு ஆகியவற்றின் மூலம் சம்பா மற்றும் தாளடி பயிர்களைக் காப்பாற்றி விட முடியும். 

அதற்காக 5 டி.எம்.சி அளவுக்கு மட்டும் தான் தண்ணீர் செலவாகும். அதை சமாளிக்கும் அளவுக்கு மேட்டூர் அணையில் தண்ணீர் இருப்பதால் சம்பா மற்றும் தாளடி பயிர்களைக் காப்பாற்றுவதற்காக உடனடியாக மேட்டூர் அணையிலிருந்து காவிரியில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்”என தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.