Top 10 News : சிலிண்டர் விலை உயர்வு.. 17 மாவட்டங்களில் கனமழை.. சென்னையில் மோசமான காற்றின் தரம்.. இன்றைய டாப் 10 நியூஸ்!
Nov 01, 2024, 07:28 AM IST
Top 10 News : வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு, 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு,சென்னையில் மோசமான காற்றின் தரம் என இன்றைய முக்கிய செய்திகளை பார்க்கலாம்.
மீண்டும் உயர்ந்த கேஸ் சிலிண்டர் விலை
சென்னையில் வர்த்தக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. குறிப்பாக சென்னையில் வர்த்தக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.1,855 ஆக இருந்த நிலையில், இன்று முதல் ரூ.61.50 பைசா உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் வர்த்தக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ.1,964.50 ரூபாய்க்கு விற்கப்படும் என பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளது. அதேபோல டெல்லியில் 1,802 ரூபாயாகவும், கொல்கத்தாவில் 1,911.50 ரூபாயாகவும், மும்பையில் 1,754.50 ரூபாயாகவும் வணிக சிலிண்டருக்கான விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் இன்று 17 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் எச்சரித்துள்ளது.
சென்னையில் மோசமான காற்றின் தரம்
தீபாவளியன்று பட்டாசு வெடித்தால், சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் காற்று மாசு அளவு கணிசமாக அதிகரித்துள்ளது. சென்னையில் தற்போது காற்றின் தரக்குறியீடு 200-ஐ கடந்துள்ளதால், ஆஸ்துமா போன்ற சுவாசக் கோளாறு உள்ளவர்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு!
தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. தெற்கு ஆந்திராவை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாகவும், இது நவம்பர் முதல்வார இறுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாகவும் வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதேநேரம், இன்று தமிழ்நாடு மற்றும் புதுவையில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ காப்பீட்டு திட்டம்: மூத்த குடிமக்களின் வயதை குறைக்க வேண்டும்- திருமாவளவன்
70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு 5 லட்ச ரூபாய் வரை மருத்துவக் காப்பீடு அளிக்கும் பி.எம்.ஜெய் திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். அந்தத் திட்டத்தின் வயது வரம்பை 60 ஆக குறைக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கடிதம் எழுதியுள்ளார்.
முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்
3300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் நீர்இருப்பு 2453 மில்லியன் கனஅடியாக உள்ளது. நீர்வரத்து 172 கனஅடியில் இருந்து 126 கன அடியாக சரிவு. சென்னை குடிநீருக்காக 184 கனஅடி நீர் வெளியேற்றம். 1081 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் நீர்இருப்பு 94 மில்லியன் கனஅடியாக உள்ளது.புழல் ஏரிக்கு 60 கன அடி நீர் அனுப்பப்பட்டு வருகிறது. 500 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரியில் நீர்இருப்பு 312 மில்லியன் கனஅடியாக உள்ளது.
தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து!
விருதுநகர் அல்லம்பட்டியில் ஹரிராம் என்பவருக்கு சொந்தமானது தீப்பெட்டி ஆலையில் பட்டாசு வெடித்த தீப்பொறி விழுந்ததில் தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஏற்பட்ட தீ விபத்தால் ரூ.15 லட்சம் மதிப்பிலான இயந்திரங்கள் மற்றும் தீக்குச்சிகள் எரிந்து சேதம் ஆகியுள்ளன.
மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த உதவி ஆய்வாளர் குடும்பத்திற்கு நிவாரண நிதி
ராமநாதபுரம் பரமக்குடி அருகே மின்சாரம் தாக்கி காவல் உதவி ஆய்வாளர் சரவணன் (36) உயிரிழந்துள்ளார். முத்துராமலிங்க தேவர் குருபூஜையை ஒட்டி பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பங்களை அகற்றும்போது, மின் கம்பியில் கொடிக்கம்பம் பட்டதில் மின்சாரம் பாய்ந்து பரமக்குடி எஸ்.ஐ சரவணன் உயிரிழந்துள்ளார். சரவணன் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரது குடும்பத்தினருக்கு ரூபாய் 25 லட்சம் நிவாரண நிதி அறிவித்துள்ளார்.
பட்டாசு விபத்தில் 82 பேருக்கு காயம் - தீயணைப்புத்துறை
தமிழகம் முழுவதும் பட்டாசு வெடித்ததில் இதுவரை 82 பேர் காயம் அடைந்துள்ளனர். இதுவரை ஏற்பட்ட தீ விபத்துகளில் ரூ. 5 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்துள்ளனர். அதேபோல் தமிழகம் முழுவதும் பட்டாசு அல்லாமல் 11 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தீயணைப்புத்துறை அறிவித்துள்ளது.
டாபிக்ஸ்