Top 10 News : சென்னையில் காற்றின் தரம் மோசமடைந்தது.. மின்சாரம் பாய்ந்து எஸ்.ஐ பலி.. இன்றைய முக்கிய செய்திகள்!
Top 10 Tamil Nadu : சென்னையில் காற்றின் தரம் மோசமடைந்தது, மின்சாரம் பாய்ந்து எஸ்.ஐ சரவணன் உயிரிழப்பு, சென்னை விமான நிலையத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் என இன்றைய டாப் 10 செய்திகளை பார்க்கலாம்.
அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மழை
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, ஆகிய 4 மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய லேசான மழையும் கடலூர், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ஆகிய ஐந்து மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு லேசான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
மின்சாரம் பாய்ந்து எஸ்.ஐ சரவணன் உயிரிழப்பு
ராமநாதபுரம் பரமக்குடி அருகே மின்சாரம் தாக்கி காவல் உதவி ஆய்வாளர் சரவணன் (36) உயிரிழந்துள்ளார். முத்துராமலிங்க தேவர் குருபூஜையை ஒட்டி பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பங்களை அகற்றும்போது, மின் கம்பியில் கொடிக்கம்பம் பட்டதில் மின்சாரம் பாய்ந்து பரமக்குடி எஸ்.ஐ சரவணன் உயிரிழந்துள்ளார்.
சென்னை விமான நிலையத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்
சென்னைக்கு வரும் 11 விமானங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக, சென்னை விமான நிலையத்துக்கு மீண்டும் இமெயில் வந்ததால் பரபரப்புஏற்பட்டது. சென்னை விமான நிலைய இயக்குநர் அலுவலகத்துக்கு வந்த இமெயிலில், ``சென்னைக்கு வரும் இலங்கை, மும்பை, பெங்களூர், சிலிகுரி, டெல்லி,கொல்கத்தா உள்ளிட்ட 8 ஏர் இந்தியாவிமானங்கள் மற்றும் கோவா, புனே, ஐதராபாத் ஆகிய 3 இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானங்கள் என மொத்தம்11 விமானங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
3 நாட்களில் 5.76 லட்சம் பேர் பயணம்
தீபாவளியை கொண்டாடுவதற்காக சென்னையில் இருந்து கடந்த 3 நாட்களில் 5.76 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளதாகவும், அவர்களுக்காக 10,784 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளதாகவும், போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.
சென்னையில் மோசமடைந்த காற்றின் தரம்
சென்னையில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளது.அதிகபட்சமாக ஆலந்தூரில் காற்று தரக் குறியீடு 248 ஆக பதிவு ஆகியுள்ளது. இன்று அதிகாலை 5 மணிக்கு சென்னையில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் காற்று தரக் குறியீடு சுவாசிக்க ஆபத்தான நிலைக்குச் சென்றுவிட்டது. கும்மிடிப்பூண்டி, அரும்பாக்கம் ஆகிய இடங்களிலும் காற்று தரக் குறியீடு 200க்கு மேல் பதிவாகியுள்ளது.
சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்
3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் நீரிருப்பு 2463 மில்லியன் கன அடியாக உள்ளது. 1081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் நீரிருப்பு 100 மில்லியன் கன அடியாக உள்ளது. 500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை – தேர்வாய்கண்டிகை ஏரியில் நீரிருப்பு 312 மில்லியன் கன அடியாக உள்ளது.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மரியாதை
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நினைவு தினத்தை ஒட்டி, அவரது நினைவிடத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மரியாதை செலுத்தினார்,
உதயநிதியை விமர்சித்த தமிழிசை
ராமநாதபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் ஆளுநர் தமிழிசை, "துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அஜித்துக்கு வாழ்த்து கூறியுள்ளார். அஜித்துக்கு வாழ்த்து கூறினால் விஜய்க்கு கோபம் வரும் என்பதற்காக உதயநிதி ஸ்டாலின் அஜித்திற்கு வாழ்த்து கூறியுள்ளாரா என்று எனக்கு தெரியவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.
தீபாவளி எதிரொலி - அதிகரித்த பூக்கள் விலை
தீபாவளி பண்டிகையை ஒட்டி பூசந்தைகளில் பூக்களின் விலை உச்சத்தை தொட்டுள்ளது. அதன்படி பிச்சிப்பூ கிலோ ரூ.1250க்கும், மல்லிகைப்பூ கிலோ ரூ.1500க்கும், அரளிப்பூ கிலோ ரூ.250க்கும், வாடாமல்லி கிலோ ரூ.20க்கும், கேந்தி பூக்கள் கிலோ ரூ.100க்கும், சம்பங்கி கிலோ ரூ.500க்கும், முல்லைப் பூ கிலோ ரூ.600க்கும், ரோஸ் கிலோ ரூ.250க்கும் விற்பனையாகிறது.
தமிழிசைக்கு உதயநிதி பதிலடி
உதயநிதி நடிகர் அஜித்தின் ரேஸ்கார் பந்தயத்திற்கு வாழ்த்து தெரிவித்து இருந்தார். இந்த வாழ்த்தை குறிப்பிட்டு தமிழிசை சௌந்தர்ராஜன் நடிகர் விஜயை கோபப்படுத்துவதற்காகவே உதயநிதி இந்த வாழ்த்தை தெரிவித்துள்ளதாக கூறியிருந்தார். இந்நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி தமிழிசை இவ்வாறு கூறினார் என்ற கேள்விக்கு அவர் போல் எனக்கும் வேலை இல்லை என்று நினைத்து உள்ளார்களா? எனக் கூறி தக்க பதிலடி கொடுத்துள்ளார்.
டாபிக்ஸ்