EPS vs Annamalai: அண்ணாமலை ஒரு பச்சோந்தி! அடிக்கடி கலர் மாறிக் கொண்டே இருப்பார்! விளாசிய ஈபிஎஸ்!
Jul 07, 2024, 04:53 PM IST
EPS vs Annamalai: எங்களை எல்லாம் ஆளாக்கி, உங்கள் முன் நிறுத்திய எங்கள் தலைவர்களை பற்றி பேசினால் எங்களுக்கு உள்ளக் குமுறல் வரும். நாங்களும் உணர்ச்சி உள்ள மனிதர்கள்தான், யாருக்கும் அடிமை கிடையாது என அண்ணாமலைக்கு ஈபிஎஸ் பதில்!
அண்ணாமலை ஒரு அடிக்கடி கலர் மாறும் பச்சோந்தி என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி உள்ளார்.
மதுரையில் ஈபிஎஸ் பேட்டி
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நான் ஊடகம், பத்திரிக்கை, சட்டமன்றங்களில் சட்டம் ஒழுங்கு குறித்து பேசி வருகின்றேன். விடியா திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தமிழகம் முழுவதும் கொலை, கொள்ளை, திருட்டு, பாலியல் வன்கொடுமை நடந்த வண்ணம் இருக்கின்றது. பல அரசியல் கட்சித் தலைவர்கள் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு உள்ளனர்.
திருநெல்வேலி காங்கிரஸ் மாவட்ட தலைவர் கொலை செய்யப்பட்டு உள்ளார். விடியா திமுக அரசு விசாரணை செய்வதாக கூறுகிறதே தவிர, யார் குற்றவாளி என விசாரணையில் கண்டுபிடிக்க முடியவில்லை.
சேலம் கொண்டலாம்பட்டி அதிமுக நிர்வாகி சண்முகத்தை திமுக நிர்வாகிகள் கொலை செய்து உள்ளனர். நேற்று முன் தினம் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டு உள்ளார். முதலமைச்சர் தொகுதியில், அவரது பகுதியிலேயே தேசிய கட்சியின் மாநிலத் தலைவராக உள்ள ஒருவர் கொலை செய்யப்பட்டு உள்ளார். சட்டம் ஒழுங்கு படுபாதாளத்திற்கு சென்றுவிட்டது.
இது போன்ற சம்பவங்கள் நடைபெறும்போது, விடியா திமுக முதலமைச்சர் வீரவசனம் பேசுவதோடு நிறுத்திக் கொள்கிறார்.
விக்கிரவாண்டியில் போட்டியிடாதது ஏன்?
விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடக்கூடாது என்பது எங்கள் கட்சியின் நிலைப்பாடு, அம்மா இருக்கும் போதே திமுக ஆட்சியில் நடக்கும் இடைத்தேர்தல்களை புறக்கணித்தோம். திமுகவும் புதுக்கோட்டை, ஆர்.கே.நகர் இடைத் தேர்தல்களை புறக்கணித்து உள்ளது. ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் வாக்காளர்களை பட்டியில் அடைக்கும் முறை இருந்தது.
ஓபிஎஸ் குறித்து விமர்சனம்
பொதுக்குழு உறுப்பினர்களால் தீர்மானம் கொண்டுவரப்பட்டு, ஓபிஎஸ் அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு விட்டார். அவர் எப்போதுமே இயக்கத்திற்கு விஸ்வாசமாக இருந்த வரலாறே கிடையாது. ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்ட வெண்ணிற ஆடை நிர்மலாவுக்கு ‘சிப் ஏஜெண்ட்’ ஆக இருந்தவர்தான் ஓ.பன்னீர் செல்வம் அவர்கள். அதிமுகவில் ஓபிஎஸை இணைக்கும் பேச்சுக்கே இடம் இல்லை. ஒரு சாதாரண தொண்டன் தவறு செய்தால் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்குகிறோம். ஆனால் இந்த முடிவு நான் எடுத்த முடிவு இல்லை. பொதுக்குழு உறுப்பினர்கள் எடுத்த முடிவு.
அண்ணாமலை ஒரு பச்சோந்தி
அண்ணாமலை பச்சோந்தி போல, அடிக்கடி கலர் மாறுவார். என்னை அவர் துரோகி என்று சொல்லி உள்ளார். நான் துரோகி இல்லை, துரோகத்தின் மொத்த உருவமே அண்ணாமலைதான்.
பிரதமர் பக்கத்தில் அமர்ந்து துரோகம் இழைத்ததாக கூறுகிறார்கள், ஆனால் அதற்கு பிறகு நடந்தது என்ன?, எங்கள் கட்சியின் பெயரே அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்தான், அப்படிப்பட்ட எங்கள் தலைவர்களை கீழ்த் தரமாக விமர்சித்தால் நாங்கள் எப்படி பொறுத்துக் கொள்வோம்.
எங்களை எல்லாம் ஆளாக்கி, உங்கள் முன் நிறுத்திய எங்கள் தலைவர்களை பற்றி பேசினால் எங்களுக்கு உள்ளக் குமுறல் வரும். நாங்களும் உணர்ச்சி உள்ள மனிதர்கள்தான், யாருக்கும் அடிமை கிடையாது.
கட்சித் தலைவருக்கே பொறுத்தம் இல்லாதவர் அண்ணாமலை, நாங்கள் 50 ஆண்டுகாலம் உழைத்துதான் இந்த பொறுப்புக்கு வந்து உள்ளோம். அவரை போல் அப்பாயிண்மண்ட் பதவி கிடையாது.
கட்சியில் கிளைச் செயலாளராக தொடங்கி, ஒன்றிய பொறுப்பு, மாவட்ட பொறுப்பு, மாநில பொறுப்பு, எம்.எல்.ஏ, எம்.பி, அமைச்சர், முதலமைச்சர் என்றுதான் படிப்படியாக வந்து உள்ளேன். அனுபவமே இல்லாத ஒரு மனிதர் அவர், நான் அதிமுகவில் தேர்ந்து எடுக்கப்பட்ட பொதுச்செயலாளர் என அவர் கூறினார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:-
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/