BSP Armstrong Murder: பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் ஓட ஓட வெட்டிக் கொலை! சென்னையில் பரபரப்பு!
Jul 05, 2024, 09:17 PM IST
BSP Armstrong Murder: பெரம்பூரில் அவரது வீட்டின் வெளியே இருந்த போது இருசக்கர வாகனத்தில் இருந்த மர்ம கும்பல் ஓட ஓட வெட்டிக் கொன்றுவிட்டு தப்பியோட்டம்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னையில் வெட்டிக் கொல்லப்பட்டார்.
இன்று இரவு 7.30 மணிக்கு பெரம்பூரில் அவரது வீட்டின் வெளியே இருந்த ஆம்ஸ்ட்ராங்கை மர்ம கும்பல் ஓட ஓட வெட்டிக் கொன்றது. கழுத்து தலை உள்ளிட்ட பகுதிகளில் 6 பேர் கொண்ட கும்பல் கடுமையாக வெட்டி உள்ளனர். பின்னர் தங்களது ஆயுதங்கள் முழுவதையும், ஆம்ஸ்ட்ராங்கின் வீட்டின் முன் போட்டுவிட்டு தப்பியோடி உள்ளனர்.
உடனடியாக ஆம்ஸ்ட்ராங் மீட்கப்பட்டு சென்னை ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். அவரது உடலை உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி காவல்துறையினர் குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவத்தை அடுத்து புளியந்தோப்பு, பெரம்பூர், செம்பியம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
குற்றவாளிகளை கண்டுபிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து உள்ளனர். க்மேலும் ஆம்ஸ்ட்ராங்க் கொலை சம்பவம் தொடர்பாக வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகின்றது.
யார் இந்த ஆம்ஸ்ட்ராங்க்
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு பிரிவு மாநிலத் தலைவராக ஆம்ஸ்ட்ராங் உள்ளார். இவர் மீது ஏற்கெனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. சில ரவுடி கும்பல் உடன் ஏற்கெனவே முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகின்றது.
சென்னை பெரம்பூரை சேர்ந்த ஆம்ஸ்ட்ராங் சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர் ஆவார். கடந்த 2008ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டக் கல்லூரி மோதலில், ஆம்ஸ்ட்ராங் இரண்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு இருந்தார். பின்னர் இந்த வழக்கில் இருந்து ஆம்ஸ்ட்ராங் விடுதலை செய்யப்பட்டார்.
கடந்த 2006ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் சென்னையில் சுயேச்சை கவுன்சிலராக ஆம்ஸ்ட்ராங் வெற்றி பெற்று இருந்தார். மேலும் தொடர்ந்து பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராகவும் பணியாற்றி வந்தார்.
எடப்பாடி பழனிசாமி கண்டனம்
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டதற்கு அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள ‘எக்ஸ்’ வலைத்தள பதிவில், ”பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் திரு. ஆம்ஸ்ட்ராங் அவர்கள் சென்னை பெரம்பூர் பகுதியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார் என்ற செய்திகேட்டு மிகுந்த அதிர்ச்சியும் துயருமுற்றேன்.
திரு. ஆர்ம்ஸ்ட்ராங் அவர்களை இழந்து வாடும் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசியத் தலைவர் செல்வி.மாயாவதி அவர்களுக்கும், பகுஜன் சமாஜ் கட்சித் தொண்டர்களுக்கும், மறைந்த அன்னாரது குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். மறைந்த திரு. ஆர்ம்ஸ்ட்ராங் அவர்களின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
ஒரு தேசிய கட்சியின் மாநிலத் தலைவர் பொறுப்பில் உள்ளவர் படுகொலை செய்யப்படுகிறார் எனில், இதற்கு மேல் இந்த விடியா திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கை என்னவென்று சொல்லி விமர்சிப்பது? கொலை செய்வதற்கான தைரியம் குற்றவாளிகளுக்கு எப்படி வருகிறது? காவல்துறை, அரசு, சட்டம் என எதன் மீதும் அச்சமற்ற நிலையில் தொடர்ச்சியாக குற்றங்கள் நடைபெறும் அளவிற்கு அவல நிலைக்கு சட்டம் ஒழுங்கைத் தள்ளிய விடியா திமுக முதல்வருக்கு எனது கடும் கண்டனம்.
திரு. ஆர்ம்ஸ்ட்ராங் அவர்களின் படுகொலையில் தொடர்புள்ள அனைவரையும் கைதுசெய்து கடும் சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், அன்னாரது இறுதி ஊர்வலம் எவ்வித இடையூறுமின்றி அமைதியான முறையில் நடைபெற்று அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படுவதை உறுதிசெய்யுமாறு திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.” என தெரிவித்து உள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/