EPS: ’திமுகவில் வேறு அனுபவம் வாய்ந்த தலைவர்களே இல்லையா!’ உதயநிதி துணை முதல்வர் ஆவது குறித்த கேள்விக்கு ஈபிஎஸ் பதில்!
Jul 21, 2024, 03:22 PM IST
EPS: உதயநிதி ஸ்டாலினை நியமித்தால் எப்படி வரவேற்க முடியும். கருணாநிதியின் பேரன், ஸ்டாலின் உடைய மகன் என்பதற்காக துணை முதலமைச்சர் பதவி கொடுக்கலாமா?
உதயநிதி ஸ்டாலினை நியமித்தால் எப்படி வரவேற்க முடியும். கருணாநிதியின் பேரன், ஸ்டாலின் உடைய மகன் என்பதற்காக துணை முதலமைச்சர் பதவி கொடுக்கலாமா? என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.
சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அம்மா உணவகத்திற்கு மக்களிடம் மிகுந்த வரவேற்பு உள்ளதால் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் ஆய்வு நாடகத்தை அரங்கேற்றி உள்ளார்.
மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டு உள்ளது
அவருக்கு உண்மையில் அக்கறை இருந்தால், கடந்த மூன்று ஆண்டுகளில் ஆய்வு செய்து இருக்க வேண்டும். அம்மா உணவகம் என்பது மக்களுக்கு ஒரு வரப்பிரசாதம். அதை கவனிக்காததால் இந்த ஆட்சி மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டு உள்ளது. இதுவரை சென்னை மேயர் எத்தனை அம்மா உணவகங்களுக்கு சென்று ஆய்வு செய்து நிதி ஒதுக்கி உள்ளார். அதிமுக ஆட்சியில் அம்மா உணவகத்திற்கு தேவையான பொருட்கள் வழங்கப்பட்டது என கூறினார்.
உதய் மின் திட்டத்தில் கையெழுத்து போட்டது ஏன்?
அதிமுக ஆட்சியில் உதய் மின் திட்டத்தில் கையெழுத்து போட்டதால்தான் மின் கட்டணம் உயர்வு ஏற்பட்டதாக கூறுவது குறித்த கேள்விக்கு, உதய் திட்டத்தில் பல்வேறு நன்மைகள் உள்ளதால் அதிமுக ஆட்சியில் கையெழுத்து போடப்பட்டது. இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்கள் கையெழுத்து போட்டுவிட்டது, ஆனால் தமிழகம்தான் கையெழுத்து போடாமல் இருந்தது. என கூறினார்.
காவல்துறைக்கு முழு சுதந்திரம் இல்லை
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு வருவது குறித்த கேள்விக்கு, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டு விட்டது. எங்கே பார்த்தாலும், கொலை, கொள்ளை, திருட்டு உள்ளிட்ட பிரச்னைகள் நிலவி கொண்டு வருகின்றது. 200 நாட்களில் 695 கொலைகள் நடைபெற்று உள்ளது. காவல்துறைக்கு முழு சுதந்திரம் கிடைக்கவில்லை. அரசு நடவடிக்கை எடுக்காததால் கொலைகள் நடந்து கொண்டே இருக்கின்றன. அதிக கொலைகள் கஞ்சா போதை காரணமாக ஏற்படுகின்றது. பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் அதிக கஞ்சா புழக்கம் இருந்து வருகின்றது என கூறினார்.
அதிமுக ஆட்சியில் தோண்டி எடுக்கப்படும்
அதிமுகவில் ஓபிஎஸ் உள்ளிட்டோரை மீண்டும் இணைப்பது குறித்த கேள்விக்கு, ஏற்கெனவே நீக்கப்பட்டவர்கள் குறித்த கேள்வியை எழுப்ப வேண்டாம். ஓபிஎஸ் சொல்வதற்காக பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என கூறினார்.
ரவுடி திருவேங்கடம் என்கவுண்டர் குறித்து கருத்து கூறிய அவர், ரவுடி எண்கவுண்டரில் தானாக முன் வந்து சரண் அடைந்து உள்ளார். அவரை கைது செய்யவில்லை. தானாக சரண் அடைந்த ஒருவர் எப்படி தப்பிப்பார். கொலை குற்றவாளியை அழைத்து செல்லும்போது பின் கையில் விலக்கிட்டு அழைத்து சென்று இருக்க வேண்டும், இதை முறையாக காவல்துறை செயல்படுத்த வேண்டும். அதிமுக ஆட்சியில் இருந்து குறித்து தோண்டி எடுக்கப்படும் என்றார்.
23 நாடாளுமன்ற தொகுதிகளில் கலந்தாலோசனை கூட்டத்தில் அற்புதமான கருத்துகளை கூறி உள்ளனர். அடுத்து வரும் உள்ளாட்சி, சட்டமன்றத் தேர்தல்கள் குறித்து அரிய கருத்துகளை சொல்லி உள்ளனர். அதற்கு ஏற்றார் போல் நடக்கும்.
அதிமுகவில் வேறு அனுபவம் வாய்ந்த தலைவர்களே இல்லையா?
உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக உள்ளதாக வெளியாகும் செய்திகளுக்கு பதில் அளித்த அவர், அமைச்சரவையை மாற்றி அமைக்கும் அதிகாரம் திரு ஸ்டாலினிடம்தான் உள்ளது. துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலினை நியமித்தால் எப்படி வரவேற்க முடியும். கருணாநிதியின் பேரன், ஸ்டாலின் உடைய மகன் என்பதற்காக துணை முதலமைச்சர் பதவி கொடுக்கலாமா?, திமுகவில் எத்தனை அனுபவம் வாய்ந்த தலைவர்கள் இருக்கும் போது அவர்களுக்கு ஏன் துணை முதலமைச்சர் பதவி தரவில்லை.
மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்கள் உரிமைக்காக கேட்கின்றனர். அவர்களுக்கான மறுவாழ்வை அரசு உரிய முறையில் பரிசீலனை செய்து அவர்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.