Electricity Bill Hike: மின் கட்டண உயர்வு எதிரொலி! திமுக அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் குதிக்கும் அதிமுக
கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் 82 மாவட்டங்களிலும், வருகின்ற 23.7.2024, செவ்வாய் கிழமை காலை 10.30 மணியளவில், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் மின் கட்டண உயர்வை எதிர்த்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் மின் கட்டண உயர்வு
தமிழ்நாட்டில் மின் கட்டணத்தை உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. ஜூலை 1ஆம் தேதி முதல் இந்த கட்டண உயர்வு கணக்கீடு செய்யப்படும் என தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நேற்று அறிவிப்பு வெளியிட்டது.
யூனிட் வாரியாக மின்கட்டண உயர்வு விவரம்
0 முதல் 400 யூனிட்டுகளுக்கு 4 ரூபாய் 60 காசுகளாக இருந்த கட்டணம் 4 ரூபாய் 80 காசுகளாக அதிகரிப்பு
401 முதல் 500 யூனிட்டுகளுக்கு 6 ரூபாய் 15 காசுகளாக இருந்த மின் கட்டணம் 30 காசுகள் உயர்ந்து 6 ரூபாய் 45 காசுகளாக அதிகரிப்பு.
600 முதல் 800 வரை ஒரு யூனிட்டுக்கு 9 ரூபாய் 20 காசுகளாக இருந்த மின் கட்டணம் 45 காசுகள் அதிகரித்து 9 ரூபாய் 65 காசுகளாக அதிகரிப்பு.
801 முதல் 1000 வரை ஒரு யூனிட்டுக்கு 10 ரூபாய் 20 காசுகளாக ஆக இருந்த மின் கட்டணம் 10 ரூபாய் 70 காசுகளாக அதிகரிப்பு.
1000 யூனிட்டுகளுக்கு மேல் 11 ரூபாய் 25 காசுகளாக ஆக இருந்த மின் கட்டணம் 11 ரூபாய் 80 காசுகளாக அதிகரிப்பு.
எடப்பாடி பழனிசாமி கண்டனம்
மின் கட்டண உயர்வுக்கு எதிராக கண்டனம் தெரிவித்து இருந்த அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, தமிழக மக்களை அனைத்து வகைகளிலும் வாட்டி வதைப்பதற்கென்றே ஒரு ஆட்சி தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக மக்கள் விரோத ஆட்சியாக நடந்து வருகின்றது. வரிக்குதிரை மேல் உள்ள வரிகளைக் கூட எண்ணிவிடலாம், எண்ண முடியாத அளவுக்கு வரிகளையும், கட்டண உயர்வுகளையும் மக்களின் மீது சுமத்தி சர்வாதிகார ஆட்சி நடத்தி வரும் திமுக ஆட்சியாளர்களால் தமிழக மக்கள் வேதனையில் துடிக்கின்றனர்.
திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் தமிழக மக்கள் கடுமையான மின்வெட்டாலோ, மின் கட்டண உயர்வாலோ பாதிக்கப்படுவது வாடிக்கை. 2011-ல் ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பேற்ற பின்பு, மின் பற்றாக்குறையாக இருந்த தமிழகத்தை மின்மிகை மாநிலமாக மாற்றிக் காட்டியதை அனைவரும் நன்கறிவார்கள்.
தமிழக மக்களின் சுமையைக் குறைக்க 100 யூனிட் விலையில்லா மின்சாரத்தை வழங்கியது ஜெயலலிதாவின் அரசு. இதன் பலனைக்கூட ஏழை, எளிய, நடுத்தர மக்கள் அனுபவிக்கக்கூடாது என்ற தீய எண்ணத்துடன் ஆண்டுதோறும் இந்த திமுக அரசு மின்கட்டணத்தை உயர்த்தி வருவது எவராலும் ஏற்க முடியாது என தெரிவித்து இருந்தார்.
அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு
இந்த நிலையில், மின் கட்டண உயர்வை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக அறிவித்து உள்ளது.
இது தொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் விடியா திமுக அரசு பதவியேற்ற கடந்த 3 ஆண்டுகளில், மூன்றாவது முறையாக மின்கட்டணத்தை உயர்த்தி மக்களை வாட்டி வதைக்கும் விடியா திமுக அரசைக் கண்டித்தும்; நியாய விலைக் கடைகளில் வழங்கப்பட்டு வரும் பருப்பு. பாமாயில் ஆகியவற்றை நிறுத்த முயற்சிக்கும் விடியா திமுக அரசைக் கண்டித்தும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் 82 மாவட்டங்களிலும், வருகின்ற 23.7.2024, செவ்வாய் கிழமை காலை 10.30 மணியளவில், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.