Tamil Fishermen Arrested: நெடுந்தீவு அருகே மீன்பிடித்த தமிழக மீனவர்கள் 22 பேரை கைதுசெய்து இலங்கை கடற்படை அட்டூழியம்!
Jun 23, 2024, 05:49 PM IST
Tamil Fishermen Arrested: நெடுந்தீவு அருகே மீன்பிடித்த தமிழக மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படை கைதுசெய்து அட்டூழியம் செய்துள்ளது.
Tamil Fishermen Arrested: நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளதாக ராமேஸ்வரம் மீனவர் சங்கம் தெரிவித்துள்ளது.
22 தமிழக மீனவர்களைக் கைது செய்த இலங்கை கடற்படை:
தமிழகத்தில் இருந்து படகுகளில் மீனவர்கள் பலர் சனிக்கிழமை கடலுக்கு சென்றனர். பாக் ஜலசந்தி கடல் பகுதிக்குட்பட்ட நெடுந்தீவு அருகே மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இன்று அதிகாலை அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தங்கச்சிமடம் மீனவர்களின் 3 படகுகளை பறிமுதல் செய்ததோடு, 22 பேரை கைது செய்தனர்.
இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை புறப்பட்ட தங்களது பகுதியைச் சேர்ந்த நான்கு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதை முதலமைச்சர் ஸ்டாலின் அதில் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
வங்கக்கடலில் மீன் பிடிப்பதற்கான இரு மாத தடைக்காலம் கடந்த 15-ஆம் தேதி தான் முடிவுக்கு வந்தது. அதன்பின் மீண்டும் மீன்பிடிக்கச் சென்ற இரண்டாவது நாளிலேயே தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படை கைது செய்திருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் 15-ஆம் நாள் மீன்பிடி தடைக்காலம் முடிவடைவதற்கு முன்பாகவும் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டனர்.
இதுபோன்ற சம்பவங்கள் மீனவர்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைப்பதாகவும், ஒட்டுமொத்த மீனவ சமூகத்தின் மத்தியில் "பயம்" மற்றும் "நிச்சயமற்ற உணர்வை" ஏற்படுத்துவதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் அதில் கூறியுள்ளார்.
தொடரும் இலங்கை கடற்படையினரின் அட்டூழியம்:
கடந்த ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி எல்லைதாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 19 பேர் ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மயிலாடுதுறையைச் சேர்ந்த 9 மீனவர்கள், புதுக்கோட்டையைச் சேர்ந்த 4 பேர், காரைக்காலைச் சேர்ந்த 6 பேர் அதில் அடங்குவர். இவர்கள் அனைவரும் கடந்த 6ஆம் தேதி 2 படகுகளில் கடலில் மீன்பிடிக்க சென்றனர்.
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் மீனவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்களின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்தாண்டு டிசம்பர் 18ல் 500க்கும் மேற்பட்ட படகுகளில் புறப்பட்டு கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது 43 தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களின் 6 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
முன்னதாக, 2021 ஆம் ஆண்டில் மட்டும் தமிழக மீனவர்கள் மீது 19 மீனவர்கள் கைது மற்றும் தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளன. மீனவர்கள் விடுவிக்கப்பட்டாலும், அவர்களின் வாழ்வாதாரமான மீன்பிடி படகுகள் இன்னும் இலங்கை அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக பாமக தலைவர் அன்புமணி கூறியிருப்பதாவது, ‘’தமிழக மீனவர்கள் பாரம்பரியமாக மீன் பிடித்து வரும் பகுதிகளில் மீன் பிடிப்பது அவர்களின் உரிமை. அதற்காக அவர்களை கைது இலங்கை அரசுக்கு எந்த உரிமையும் இல்லை. அதையும் மீறி தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை தொடர்ந்து கைது செய்வது இந்திய இறையாண்மைக்கு விடப்பட்ட சவால் ஆகும். இலங்கை கடற்படையின் இந்த அத்துமீறலை இந்தியா அனுமதிக்கக் கூடாது’’ என்றார்.
டாபிக்ஸ்