Pritivi Shaw: ப்ருத்வி ஷா மீது தவறு இல்லை! நடிகை கில் குற்றச்சாட்டு பொய்யானவை - போலீசார் நீதிமன்றத்தில் வாதம்
Jun 28, 2023, 03:22 PM IST
கிரிக்கெட் வீரர் ப்ருத்வி ஷா மீது சமூக வலைத்தள இன்ப்ளூயன்சர், நடிகை சப்னா கில் முன் வைத்திருக்கும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை மற்றும் ஆதரமற்றவை என மும்பை போலீசார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கில் பப்பில் பதிவான சிசிடிவி காட்சிகளை வைத்து பார்க்கையில், சப்னா கில் மற்றும் அவரது நண்பர் ஷோபித் தாக்கூர் ஆகியோர் மது அருந்திவிட்டு போதையில் நடனமாடியிருப்பதும், தாக்கூர் தனது மொபைலில் கிரிக்கெட் வீரர் ப்ருத்வி ஷாவை விடியோவாக பதிவு செய்த முயற்சித்தபோது அதை அவர் தடுத்ததும் தெரியவந்துள்ளது என மும்பை போலீசார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
கடந்த பிப்ரவரி மாதம் மும்பை புறநகர் பகுதியான அந்தேரியில் உள்ள பப் ஒன்றில், கிரிக்கெட் வீரர் ப்ருத்வி ஷாவிடம் செஃல்பி எடுப்பது தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக சமூக வலைத்தள இன்ப்ளூயன்சரும், நடிகையுமான சப்னா கில் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் ஜாமினில் வெளியே வந்த கில், ப்ருத்வி ஷா மற்றும் அவரது நண்பர் ஆஷிஷ் யாதவ் ஆகியோர் தன்னை துன்புறுத்தியதாகவும், மூர்க்கதனமான நடந்துகொண்டதாகவும் புகார் அளித்தார்.
ஆனால், இந்த புகார் தொடர்பாக ப்ருத்வி ஷா மீது போலீசார் எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை. இதனால், ஐபிசி பிரிவு 354, 509, 324 ஆகிவற்றின் கீழ் ப்ருத்வி ஷா மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என மும்பை அந்தேரி பகுதியில் உள்ள மாஜிஸ்த்ரேட் நீதிமன்றத்தை நாடினார் சப்னா கில்.
இதையடுத்து இந்த வழக்கை விசாரித்து வந்த விசாரணை அதிகாரி, வழக்கு தொடர்பான அறிக்கையை கடந்த திங்கள்கிழமை நீதிமன்றத்தில் சமர்பித்தார். அதில் முக்கிய அம்சமாக, சம்பவத்தின்போது அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், கிரிக்கெட் வீரர் ப்ருத்வி ஷா மற்றும் அவருடன் இருந்தவர்கள் சப்னா கில்லை துன்புறுத்தியாதற்கான எந்த ஆதாரமும் இல்லை. எனவே ப்ருத்வி ஷா மீது கில் சுமத்தியுள்ள குற்றச்சாட்டு பொய்யானவை.
அத்துடன் சம்பவத்தின் போது பப்பில் இருந்த சாட்சிகளிடம் உரிய விசாரணை செய்து வாக்குமூலமும் பெறப்பட்டது. அவர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில் சப்னா கில் மீது யாரும் தவறான நோக்கத்தில் நடந்துகொள்ளவில்லை என தெரியவந்துள்ளது.
இதன் பின்னர், கிரிக்கெட் வீரர் ப்ருத்வி ஷா காரை, தனது கையில் பேஸ்பால் மட்டையை வைத்துக்கொண்டு கில் விரட்டியதும், ப்ருத்வி ஷா காரின் விண்ட்ஷில்டில் மட்டையை வைத்து தாக்கியதும் சம்பவம் நிகழ்ந்த சாலையில் இருந்த விமான போக்குவரத்து கட்டுப்பாடு கோபரத்தின் சிசிடிவி காட்சிகளின் மூலம் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையை சேர்ந்த அதிகாரிகளிடமும் வாக்குமூலம் பெறப்பட்டது. போலீசாரை கண்டதும் பேஸ்பால் மட்டையை பெண் ஒருவர் தூக்கி வீசியதை பார்த்ததாக அவர்கள் தெரிவித்தனர் என போலீசார் தங்களது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
இதற்கிடையே சப்னா கில் தரப்பு வழக்கறிஞர், சமூக வலைத்தளங்களில் வைரலான இந்த சம்பவத்தின் விடியோ காட்சிகளையும், பப் பகுதியில் வெளியே பதிவான சிசிடிவி காட்சிகளையும் பார்க்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மும்பை போலீசார் மொத்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளையும் கில் தரப்பிடம் சமர்பிக்குமாறு உத்தரவிட்டார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்