US Open: வெள்ளிப்பதக்கம் வென்ற வீராங்கனைக்கு அதிர்ச்சி! மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் நுழைந்த மாளவிகா
Jun 29, 2024, 05:08 PM IST
உலக அளவில் 49வது தரவரிசை பெற்றிருக்கும் இளம் இந்திய வீராங்கனையான மாளவிகா பன்சோத், காமென்வெல்த் விளையாட்டில் வெள்ளிப்பதக்கம் வென்ற ஸ்காலாந்து வீராங்கனை கிறிஸ்டி கில்மரை அதிர்ச்சி கொடுத்து மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் நுழைந்துள்ளார்.
யுஎஸ் ஓபன் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ல போர்ட் வொர்த்தில் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டின் 18வது பிடபிள்யூஎஃப் உலக டூர் போட்டியாக இது அமைந்திருக்கிறது.
இந்த தொடரில் இந்தியா சார்பில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் பிரியான்சு ராஜாவத், பெண்கள் ஒற்றையர் பிரிவில் மாளவிகா பன்சோத், ஆண்கள் இரட்டையர் பிரிவில் கிருஷ்ண பிரசாத் கரங்கா மற்றும் சாய் பிரதீக், மகளிர் இரட்டையர் பிரிவில் த்ரீசா ஜாலி மற்றும் காயத்ரி கோபிசந்த் ஆகியோர் விளையாடுகிறார்கள்.
அரையிறுதியில் மாளவிகா
22 வயதாகும் இளம் வீராங்கனையான மாளவிகா பன்சோத், 2014 காமன்வெல்த் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற ஸ்காட்லாந்து வீராங்கனையான கிறிஸ்டி கில்மரை எதிர்கொண்டார். மூன்று சுற்றுகள் வரை சென்ற இந்த போட்டியில் இந்திய வீராங்கனை 10-21 21-15 21-10 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றார்.
இந்த போட்டிக்கு முன்னர் இரண்டு முறை கிறிஸ்டியிடம் தோல்வியை கண்ட உலக அளவில் 49வது தரவரிசையில் இருந்து வந்த மாளவிகா, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதிலும் மூன்றாவது செட்டில் கம்பேக் கொடுத்து ஆதிக்கம் செலுத்தினார்.
இந்த ஆண்டில் அஜர்பைஜான் சர்வதேச சேலஞ்சில் வெற்றி பெற்ற மாளவிகா, தனது அரையிறுதி ஆட்டத்தில் ஆறாவது சீட் வீராங்கனையான ஜப்பான் நாட்டை சேர்ந்த நட்சுகி நைரா என்பவரை எதிர்கொள்ள இருக்கிறார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் தோல்வி
ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு போட்டியில் பிரியான்சு ராவத், சீனா வீரர் லீ லான் ஜி என்பவருக்கு எதிராக போராடி தோல்வியை தழுவினார். பரபரப்பான இந்த ஆட்டத்தில் 21-15 11-21 18-21 என்ற கணக்கில் பிரியான்சு வீழ்ந்தார். முதல் சுற்றை தன் வசம் ஆக்கிய பின்னர், இரண்டாவது சுற்று கை மீற போன நிலையில், மூன்றாவது சுற்று இருவரும் சமமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருப்பினும் சீன வீரர் மூன்று புள்ளிகளில் பிரியான்சுவை வீழ்த்தினார்.
இரட்டையர் பிரிவிலும் தோல்வி
இதேபோல் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி த்ரீசா ஜாலி மற்றும் காயத்ரி கோபிசந்த் ஜோடி, ஜப்பான் நாட்டின் ஆறாவது சீட் ஜோடியான ருய் ஹிரோகாமி, யுனா கட்டோ ஆகியோரை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த போட்டியில் 17-21 21-17 19-21 என்ற கணக்கில் இந்திய ஜோடி தோல்வியை தழுவியது. இதனால் காலிறுதி ஆட்டத்தில் இருந்தே இந்திய ஜோடி வெளியேறியது.
ஆண்களுக்கான இரட்டையர் சுற்று போட்டியில் கிருஷ்ண பிரசாத் கரங்கா மற்றும் சாய் பிரதீக் ஜோடி, இரண்டாவது சுற்றிலேயே வெளியேறினர்.
யுஎஸ் ஓபன் பேட்மிண்டன்
இந்த பேட்மிண்டன் தொடரானது 1954 முதல் நடைபெற்று வருகிறது. 2020 முதல் 2022 வரை இந்த போட்டிகள் கொரோனா தொற்று பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டது. சுமார் 70 ஆண்டு காலம் நடைபெற்று வரும் இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 2007ஆம் ஆண்டில் எச்.எஸ்.பிரனாய் பட்டம் வென்றார். இதுவே இந்த தொடரில் இந்தியா வென்றிருக்கும் ஒரே பட்டமாக உள்ளது.
தற்போது மாளவிகா வெற்றி பெறும்பட்சத்தில் அது சாதனையாக அமைவதோடு, 17 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவுக்கு மீண்டும் பட்டம் கிடைக்கலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
டாபிக்ஸ்