Lovlina Borgohain: ஆதிக்கம் மிக்க வெற்றி! காலிறுதிக்கு தகுதி - குத்துசண்டையில் பதக்கத்தை நெருங்கிய போர்கோஹெய்ன்
Jul 31, 2024, 07:23 PM IST
பாரிஸ் ஒலிம்பிக்கில் தனது முதல் போட்டியில் ஆதிக்கம் மிக்க வெற்றியுடன், போர்கோஹெய்ன் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். டோக்கியோ ஒலிம்பிக்கில் வென்ற வெண்கல பதக்கத்துடன், கூடுதல் பதக்கம் சேர்க்க அவருக்கு இன்னும் ஒரு வெற்றி மட்டுமே தேவைப்படுகிறது. அந்த வகையில் குத்துசண்டையில் பதக்கத்தை நெருங்கியுள்ளார்.
கடந்த 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் 75 கிலோ பிரிவில் வெண்கலம் வென்ற இந்தியாவின் இளம் குத்துச்சண்டை வீராங்கனை லோவ்லினா போர்கோஹெய்ன். இதைத்தொடர்ந்து பதக்க நம்பிக்கை நட்சத்திரமாக பாரிஸ் ஒலிம்பிக்கில் தனது முதல் போட்டியில் இன்று களமிறங்கினார்.
தனது தொடக்க ஆட்டத்தில் நார்வேயின் சன்னிவா ஹோஃப்ஸ்டாட்டை எதிர்கொண்டார். பரபரப்பாக சென்ற இந்த போட்டியில் வெற்றியை பதிவு செய்தார். இதன்மூலம் காலிறுதிக்கு தகுதி பெற்றதுடன் இரண்டாவது முறையாக தனது ஒலிம்பிக் பதக்கத்துக்கு தேடலை நோக்கியுள்ளார்.
பதக்கத்துக்கு தேவையாக இருக்கும் ஒரே வெற்றி
இந்த போட்டியில் போர்கோஹெய்ன், அத்தனை ரவுண்ட்களையும் தன்வசமாக்கியதுடன் 5-0 என்ற கணக்கில் வென்றார். 69 கிலோ எடைப்பிரிவில் வென்ற தனது டோக்கியோ வெண்கலத்துடன், கூடுதல் பதக்கத்தை சேர்க்க போர்கோஹெய்னுக்கு இன்னும் ஒரு வெற்றி மட்டுமே பாக்கி உள்ளது.
கடினமான போட்டி
வரும் ஆகஸ்ட் 4ஆம் தேதி நடைபெற இருக்கும் காலிறுதியில் பலம் மிக்க சீனா வீராங்கனையான சீன லி கியானை எதர்கொள்ள இருக்கிறார். இவர் டாப் 8 இடத்தில் தற்போது முதலிடத்தில் உள்ளார். அத்துடன், கடந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் மிடில் வெயிட் (75 கிலோ) பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றவராக உள்ளார்.
அதேபோல், 2016 ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கமும், 2022 சீனாவின் ஹாங்சோவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கமும் வென்றார்.
இதையடுத்து இவருடனான இந்த போட்டியை வென்றால் மட்டுமே போர்கோஹெய்ன் வெண்கல பதக்கத்தையாவது உறுதி செய்ய முடியும்.
எனவே போர்கோஹெய்ன் அடுத்த களமிறங்க இருக்கும் போட்டி கடினமானதாக அமையக்கூடும். இருப்பினும் அவர் தற்போது பெற்றிருக்கும் ஆதிக்கம்மிக்க வெற்றி நம்பிக்கையை தரும்.
அதுமட்டுமில்லாமல், போர்கோஹெய்னுக்கு இதேபோல் கடினமான ஆட்டத்தில் தான் கடந்த டோக்கியோ ஒலிம்பிக்கிலும் விளையாட நேர்ந்தது. கடந்த ஒலிம்பிக்கில் காலிறுதி போட்டியில் உலக சாம்பியன் சென் நியன்-சின்னை தோற்கடித்து வெண்கலப் பதக்கத்தை வென்றார். அதில் தனது முழு திறனை வெளிப்படுத்தி பதக்கமும் வென்றுள்ளார்.
சிறப்பான ஆட்டம்
நார்வேயின் சன்னிவா ஹோஃப்ஸ்டாட்டடைக்கு எதிரான முதல் போட்டியில், திறம்பட ஆட்டத்தை வெளிப்படுத்தினார் போர்கோஹெய்ன். இந்த போட்டியில் ஸ்லக்ஃபெஸ்டில் அவரை இழுக்க முயற்சித்தபோது, கிளியரான பஞ்ச்களால் எதிர் தாக்குதலில் ஈடுபட்டார்.
அத்துடன் நார்வே வீராங்கனை விரித்த வலையில் விழாமல், மிகவும் நிதானத்துடனும், துல்லியமாகவும் அவரை பதிலுக்கு தாக்கினார்.
பாரிஸ் ஒலிம்பிக்கில் குத்துசண்டை போட்டியில் இந்தியா நிலவரம்
பாரிஸ் ஒலிம்பிக்கில் குத்துச்சண்டை இதுவரை இந்தியா பயணமானது கலவையாக உள்ளது. மொத்தம் களமிறங்கிய ஆறு பேரில் மூன்று பேர் ஏற்கனவே பதக்க போட்டிக்கான ரவுண்டுகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.
முன்னாள் ஆசிய விளையாட்டு சாம்பியன் அமித் பங்கல் (51 கிலோ), ப்ரீத்தி பவார் (54 கிலோ), ஜெய்ஸ்மின் லம்போரியா (57 கிலோ) ஆகியோர் தங்களது ஆரம்ப போட்டிகளில் வெளியேற்றப்பட்டவர்களாக இருக்கிறார்கள்.
இருப்பினும் தற்போது நட்சத்திர வீராங்கனையும், ஒலிம்பிக் பதக்க வெற்றியாளருமான போர்கோஹெய்ன் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
இவரை தவிர அறிமுக ஒலிம்பிக்கில் களமிறங்கி இருக்கும் நிகாத் ஜரீன் (பெண்கள் 50 கிலோ பிரிவு), நிஷாந்த் தேவ் (ஆண்கள் 71 கிலோ பிரிவு) ஆகியோர் களத்தில் உள்ளனர்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
டாபிக்ஸ்