IPL 2022: முதல் இடத்தை தக்க வைக்குமா கொல்கத்தா? டெல்லியுடன் இன்று பலப்பரீட்சை
Apr 10, 2022, 12:40 PM IST
மும்பை: ஐபிஎல் தொடரின் 19-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.
நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இதுவரை 18 லீக் ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ளன. 19-வது லீக் மேட்சில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டி மாலை 3.30 மணிக்கு மும்பை பிராபோர்ன் மைதானத்தில் நடைபெறுகிறது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs டெல்லி கேப்பிடல்ஸ்
கொல்கத்தா அணியை பொருத்தவரை 4 போட்டிகளில் விளையாடி மூன்றில் வெற்றியை பதிவு செய்து அதிக ரன் ரேட் அடிப்படையில் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. பேட்டிங்கில் வெங்கடேஷ் ஐயர், பேட் கம்மின்ஸ், ரஸல் அசத்தி வருவது அந்த அணிக்கு கூடுதல் பலம். தொடக்க வீரராக களமிறங்கும் ரகானே மட்டும் சொதப்புகிறார் அவர் ரன் குவிக்க வேண்டிய நெருக்கடியில் உள்ளார். பவுலிங்கை பொருத்த வரை வருண் சக்கரவர்த்தி, உமேஷ் யாதவ் போன்றோர் நல்ல பார்மில் உள்ளது கொல்கத்தாவுக்கு கூடுதல் சிறப்பு.
டெல்லியை பொருத்தவரை இதற்கு முந்தைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியிடம் தோல்வியைத் தழுவியது. எனவே இன்றைய போட்டியில் நிதானமாக விளையாட வேண்டிய கட்டாயத்தில் அந்த அணி களமிறங்குகிறது. டெல்லி அணி பேட்ஸ்மேன்கள், சுழற் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் டெல்லி பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழப்பது அந்த அணிக்கு சற்று பின்னடைவாக கருதப்படுகிறது. இதனால் வார்னர், ரிஷப் பண்ட், பொவேல் போன்ற வீரர்கள் பேட்டிங்கில் அதிக கவனம் செலுத்தினால் மட்டுமே வெற்றி பெற முடியும். அக்ஷர் படேல், குல்தீப் யாதவ் கூட்டணி பவலிங்கில் அசத்தி வருவது அந்த அணிக்கு கூடுதல் பலம்.
இவ்விரு அணிகளும் இதுவரை விளையாடிய 28 போட்டிகளில் கொல்கத்தா அணி 16 போட்டியிலும் , டெல்லி 12 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்
இதேபோல், ஐபிஎல் 20 வது லீக் ஆட்டம் மாலை 7.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. இதில், சமபலம் வாய்ந்த ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெய்ண்ட் அணிகள் மோதுகின்றன. ராஜஸ்தான் அணி மூன்றில் விளையாடி இரண்டு வெற்றியை பெற்றுள்ளது. லக்னோ அணியை பொருத்தவரை விளையாடி நான்கில் 3-ல் வெற்றியை ருசித்துள்ளது. இதனால் இரு அணிகளும் வெற்றி பெறும் முனைப்பில் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டாபிக்ஸ்