IPL 2022: நைட் ரைடர்ஸை 75 ரன்களில் வீழ்த்தி லக்நெள அபார வெற்றி!
May 07, 2022, 11:59 PM IST
கொல்கத்தா பேட்ஸ்மேன்களை தொடக்கத்திலிருந்தே அச்சுறுத்திய லக்நெள பெளலர்கள் எந்த இடத்திலும் அவர்கள் வாய்ப்பை உருவாக்க விடாமல் நெருக்கடி அளித்தனர் லக்நெள பெளலர்கள்.
புணே எம்சிஏ மைதானத்தில் இரண்டாவது சேஸ் செய்வது என்பது சற்று கடினமாகவே இருந்து வருகிறது. 170 ரன்களுக்கு மேல் அங்கு சேஸ் செய்ய வேண்டுமானல் ரன்குவிப்பில் மட்டும் கவனம் செலுத்தாமல், விக்கெட் வீழ்ச்சி அடைவதையும் தவிர்த்து மிகவும் கவனமாக ஆட வேண்டும். ஆனால் இவை இரண்டையும் சரிவர செய்யாமல் தவித்தனர் கொல்கத்தா பேட்ஸ்மேன்கள்.
இரண்டாவதாக பெளலிங் செய்யும் அணி பவர்ப்ளே ஓவர்களில் அதிக ரன்கள் கொடுப்பதை தவிர்க்க வேண்டும் என தாராக மந்திரத்தை சரியாக கடைப்பிடித்த லக்நெள பெளலர்கள் கூடுதல் அம்சமாக கொல்கத்தாவின் டாப் ஆர்டரை காலி செய்து நெருக்கடி அளித்தனர். பவர்ப்ளே முடிவதற்குள் பாபா இந்திரஜித், ஆரோன் பின்ச், ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோரின் விக்கெட்டுகள் வீழ்ந்த நிலையில் பார்ட்னர்ஷிப் அமையாமல் கொல்கத்தா பேட்ஸ்மேன்கள் தவித்தனர்.
இவர்களுக்கு அடுத்தபடியாக களமிறங்கிய ராணா, ரிங்கு சிங் ஆகியோரும் ஒற்றை இலக்க ரன்னில் வெளியேற முக்கிய பேட்ஸ்மேன்கள் அனைவரின் விக்கெட்டைும் இழந்தது கொல்கத்தா அணி. பின்னர் ஆல்ரவுண்டர் ஆண்ட்ரே ரசல் மற்றும் சுனில் நரேன் ஆகியோர் தங்களது பாணி அதிரடியை வெளிப்படுத்தினர்.
ஆனால் தேவைப்படும் ரன்ரேட் ஒவருக்கு 11 ரன்கள் வரை இருந்த நிலையில், இவர்கள் இருவராலும் நீண்ட நேரம் நிலைத்து நின்று ஆட முடியவில்லை. 19 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து ரசலும், 12 பந்துகளில் 22 ரன்களில் சுனில் நரேனும் எடுத்தனர். இவர்கள் இருவரின் விக்கெட்டும் காலியான பிறகு அடுத்த வந்த கொல்கத்தா பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்கத்தில் அடுத்துடுத்து வெளியேறினர்.
14.3 ஓவரில் 101 ரன்களுக்கு கொல்கத்தா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த நிலையில், 75 ரன்கள் வித்தியாசத்தில் லக்நெள அணி வெற்றி பெற்றுள்ளது.