தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Ambati Rayudu: அரசியல் பயணம் எப்போது? - அம்பத்தி ராயுடு நச் பதில்

Ambati Rayudu: அரசியல் பயணம் எப்போது? - அம்பத்தி ராயுடு நச் பதில்

Karthikeyan S HT Tamil

Jun 30, 2023, 12:16 PM IST

google News
மக்களின் மனநிலையை அறிய தற்போது கிராமங்கள் தோறும் சுற்றுப்பயணம் செய்து வருவதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் அம்பத்தி ராயுடு தெரிவித்துள்ளார். (PTI)
மக்களின் மனநிலையை அறிய தற்போது கிராமங்கள் தோறும் சுற்றுப்பயணம் செய்து வருவதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் அம்பத்தி ராயுடு தெரிவித்துள்ளார்.

மக்களின் மனநிலையை அறிய தற்போது கிராமங்கள் தோறும் சுற்றுப்பயணம் செய்து வருவதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் அம்பத்தி ராயுடு தெரிவித்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரராக இருந்த அம்பதி ராயுடு சமீபத்தில் அனைத்து கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வை அறிவித்தார். இவரது ஐபிஎல் வாழ்க்கையில் 6-வது கோப்பையை சென்னை வென்ற திருப்தியுடன் ராயுடு நிறைவு செய்தார். 

சென்னை அணி ஐபிஎல் 2023 கோப்பையை வென்று ராயுடுவுக்கு ஒரு அருமையான பிரியாவிடை அளித்தது. அதிலும் வெற்றிக் கோப்பையை அம்பத்தி ராயுடு கைகளால் வாங்க வைத்து அழகு பார்த்தார் அணியின் கேப்டன் தோனி.

இதனை தொடர்ந்து கோப்பையுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் சீனிவாசன், மகள் ரூபா குருநாத், அம்பத்தி ராயுடு ஆகியோர் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அதன் பின் அம்பத்தி ராயுடுவின் ஆலோசனைப்படி ஆந்திராவில் பெரிய விளையாட்டு மைதானமும், விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்குத் தேவையான கட்டமைப்புகள் அமைக்க மாநில அரசு ஆர்வமுடன் இருப்பதாகத் முதல்வர் கூறியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து அம்பதி ராயுடு ஆந்திரப் பிரதேச அரசியலில் தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்குவதாக அறிவித்தார். இருப்பினும் எந்த கட்சியில் அவர் இணைவார் என்ற எதிர்பார்ப்பும் எகிறியது. இந்நிலையில், மக்களின் மனநிலையை அறிய தற்போது கிராமங்கள் தோறும் சுற்றுப்பயணம் செய்து வருவதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் அம்பத்தி ராயுடு தெரிவித்துள்ளார். 

ஆந்திர மாநிலம் வட்டிச்செருகூர் தொகுதியின் முட்லூர் கிராமத்திற்குச் சென்றபோது இந்த கருத்தை அவர் தெரிவித்தார். இது குறித்து செய்தியாளர்களிடம் அம்பத்தி ராயுடு மேலும் கூறுகையில்,  "முதல்வருடன் நடந்த சந்திப்பில் அரசியல் விவகாரங்கள் குறித்து எதுவும் பேசவில்லை. கிரிக்கெட் மற்றும் விளையாட்டு துறை குறித்து மட்டும் ஆலோசிக்கப்பட்டது. மக்களுக்கு சேவை செய்ய எனது அரசியல் பயணம் விரைவில் இருக்கும்.

அதற்கு முன்பு எனது சொந்த மாவட்டமான குண்டூரின் பல்வேறு பகுதிகளுக்குச் சுற்றுப்பயணம் செய்து மக்களின் அடிப்படை பிரச்னைகளை புரிந்து கொள்ள கொள்ள முடிவு செய்துள்ளேன். குண்டூரின் கிராமப் புறங்களில் சுற்றுப்பயணம் செய்து மக்களின் தேவைகளையும், அவற்றை நிறைவேற்ற என்னால் என்ன செய்ய முடியும் என்று முடிவு செய்த பிறகே அரசியலுக்கு வருவேன். அரசியலில் எப்படிச் செல்வது, எந்தத் தளத்தைத் தேர்ந்தெடுப்பது என்பது குறித்த உறுதியான செயல் திட்டத்துடன் விரைவில் வருவேன்." இவ்வாறு அவர் கூறினார்.

அம்பத்தி ராயுடு ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் இணையவே அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த மாதம் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை சந்தித்த ராயுடு, ட்விட்டரில் ஜெகன்மோகன் பேச்சை சிறந்த பேச்சு என்று குறிப்பிட்டு, "ஆந்திர மாநிலம் முழுவதும் உங்கள் மீது நம்பிக்கை கொண்டுள்ளது எங்கள் முதல்வர் அவர்களே" என்று பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி