Uddhav Thackeray:'மகாராஷ்டிரா தேர்தலுக்குப் பின் தாராவி குடிசை மறுவடிவமைப்பு திட்ட டெண்டரை ரத்துசெய்வோம்':உத்தவ் தாக்கரே
Jul 20, 2024, 05:21 PM IST
Uddhav Thackeray: மகாராஷ்டிரா தேர்தலுக்குப் பின் தாராவி குடிசை மறுவடிவமைப்பு திட்ட டெண்டரை ரத்துசெய்வோம் என சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.
Uddhav Thackeray: மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தனது கட்சி ஆட்சிக்கு வந்தால் மும்பையில் உள்ள தாராவி குடிசை மறு மேம்பாட்டு திட்டத்தை தனது அரசாங்கம் ரத்து செய்யும் என்று சிவசேனா (யுபிடி) தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
தாராவி மறு அபிவிருத்தி திட்டம் குறித்துப் பேசிய உத்தவ் தாக்கரே:
தாராவி மறு அபிவிருத்தி திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்த உத்தவ் தாக்கரே, செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றியபோது, "நாங்கள் தாராவி மறு அபிவிருத்தி திட்டத்தை நடக்க விட மாட்டோம்.
தாராவி குடிசைப்பகுதியில், நாங்கள் கூடுதல் சலுகைகளை வழங்கமாட்டோம். தேவைப்பட்டால், ஆட்சிக்கு வந்த பிறகு புதிய டெண்டருக்கு அழைப்பு விடுக்கிறோம்’’என்று கூறினார்.
தாராவி சேரி பகுதி மறு அபிவிருத்தி திட்டத்தில் அதானி குழுமம் வீடுகளைக் கட்டும். அவை ஆசியாவின் மிகப்பெரிய சேரிகளில் வசிக்கும் மக்களுக்கு ஒப்படைக்கப்படும் என்று செய்தி நிறுவனமான பி.டி.ஐ முன்பு செய்தி வெளியிட்டது.
இந்நிலையில் இதுதொடர்பாக மேலும் பேசிய சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, ‘’மும்பையை அதானி நகரமாக மாற்றவிடமாட்டோம். தாராவி குடிசைப்பகுதி மறுசீரமைப்பு திட்ட டெண்டரை ஆட்சிக்கு வந்தவுடன் ரத்து செய்வோம். தாராவி குடிசைப்பகுதி மறுசீரமைப்பு திட்ட டெண்டரை ஏன் இப்போது மகாராஷ்டிர அரசு ரத்து செய்யக்கூடாது என்பதற்கு அரசு பதில் அளிக்க வேண்டும்’’ என்றார்.
மேலும் இதுதொடர்பாக பேசிய சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, ‘’தாராவி மறு அபிவிருத்தி திட்டத்திற்காக குர்லா பகுதியில் ஒரு பால் நிலத்தை சமீபத்தில் ஒப்படைத்தது அசல் டெண்டரில் குறிப்பிடப்பட்டுள்ளதா?. தாராவி மறுவளர்ச்சிக்கு எந்த அரசு நிலம் வழங்கப்படுகிறது என்பது பற்றி எந்த குறிப்பும் இல்லை. அது தியோனார், முலுண்ட், உப்பள நிலமாக இருந்தாலும் சரி.
அரசு வருவாய் இழப்பு எவ்வளவு உள்ளது என்பதை விசாரிக்க வேண்டும். அரசு நிலங்கள் தொழிலதிபர்களுக்கு மிகக் குறைந்த விலையில் வழங்கப்படுகிறது. அரசுக்கு கிடைக்க வேண்டிய அனைத்து வருவாயும் தள்ளுபடி செய்யப்படுகிறது’’ எனவும் அவர் கூறினார்.
’தாராவி குடிசைப்பகுதி மறு அபிவிருத்தி திட்டம் ஒரு பெரிய ஊழல்’: காங்கிரஸ் மூத்த தலைவர் பிருத்விராஜ் சவான்!
வருவாய்த் துறையின் பட்ஜெட் கோரிக்கைகள் குறித்து மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் பிருத்விராஜ் சவான், இந்த மாத தொடக்கத்தில் தாராவி சேரி மறு அபிவிருத்தி திட்டம் ஒரு "பெரிய ஊழல்" என்றும், இது குறித்து மகாராஷ்டிரா அரசிடமிருந்து வெள்ளை அறிக்கை கோரினார்.
அக்டோபரில் நடைபெறவுள்ள மாநில சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, அரசாங்கத்தில் மாற்றம் ஏற்பட்டவுடன் முழு திட்டமும் கைவிடப்படும் என்று சவான் கூறினார்.
தாராவி அபிவிருத்தி திட்டத்தை எதிர்க்கும் மகா விகாஸ் அகாதி:
தாராவி மும்பையின் மிகப்பெரிய குடிசைப் பகுதி ஆகும். எதிர்க்கட்சியான மகா விகாஸ் அகாதியின் ஒரு பகுதியான காங்கிரஸ் மற்றும் சிவசேனா (யுபிடி) ஆகியவை பல பில்லியன் டாலர் செலவில் அதானி குழுமத்தால் செயல்படுத்தப்படும் தாராவி மறு மேம்பாட்டு திட்டத்தை எதிர்த்து வருகின்றன.
இந்நிலையில் மகாராஷ்டிரா வருவாய்த்துறை அமைச்சர் ராதாகிருஷ்ண விகே பாட்டீல், தாராவி குடிசைப்பகுதி மறுசீரமைப்புத் திட்டம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று உறுதியளித்தார். வெள்ளை அறிக்கையில் டெண்டர் செயல்முறை விவரங்கள் இருக்கும் என்றும் அவர் கூறினார்.
டாபிக்ஸ்