Naveen Patnaik: ஒடிசா தேர்தல் தோல்வி எதிரொலி! வி.கே.பாண்டியன் தனது வாரிசு இல்லை என நவீன் பட்நாயக் அறிவிப்பு
Jun 08, 2024, 07:08 PM IST
வி.கே.பாண்டியன் கட்சியில் சேர்ந்தார். எந்தப் பதவியையும் வகிக்கவில்லை. அவர் தேர்தலில் போட்டியிடவில்லை. ஒரு அதிகாரியாக, கடந்த 10 ஆண்டுகளில், இரண்டு சூறாவளிகள், கோவிட்-19 காலத்தில் சிறப்பாக பணியாற்றினார். அவர் ஒரு நேர்மையான அதிகாரி என ஒடிசா முன்னாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக் கூறி உள்ளார்
ஒடிசா சட்டமன்றத் தேர்தலில் பிஜூ ஜனதா தளம் கட்சி தோல்வி அடைந்த நிலையில், வி.கே.பாண்டியன் தனது அரசியல் வாரிசு இல்லை என்று நவீன் பட்நாயக் அறிவித்து உள்ளார்.
ஒடிசா சட்டமன்றத் தேர்தல்
நாடாளுமன்றத் தேர்தல் உடன் சேர்த்து ஆந்திரப் பிரதேசம், அருணாச்சல பிரதேசம் மற்றும் சிக்கிம், ஒடிசா ஆகிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது.
147 உறுப்பினர்களைக் கொண்ட ஒடிசா சட்டபேரவையில், கடந்த 2000ஆம் ஆண்டு முதல் பிஜூ ஜனதாதளம் கட்சியின் நவீன் பட்நாயக் முதலமைச்சராக இருந்து வருகிறார்.
ஆட்சியை பிடித்த பாஜக
தற்போது நடைபெற்ற தேர்தலில் பாஜக 78 இடங்களிலும், பிஜூ ஜனதாதளம் கட்சி 51 இடங்களிலும் வெற்றி பெற்றது. மூன்றாவது இடத்தில் இருந்த காங்கிரஸ் 14 இடங்களை மட்டுமே கைப்பற்றியது.
ஒடிசாவில் இரண்டு இடங்களில் போட்டியிட்ட நவீன் பட்நாயக் ஹிஞ்சிலி தொகுதியில் வெற்றியும், காந்தபாஞ்சி தொகுதியில் தோல்வியையும் பெற்றார். இதுமட்டுமின்றி ஒடிசாவில் உள்ள 21 நாடாளுமன்றத் தொகுதிகளில் 20 இடங்களில் பாஜகவும், ஒரு இடங்களில் பிஜேடி கட்சியும் வெற்றி பெற்றது.
வி.கே.பாண்டியன் எனது வாரிசு இல்லை - நவீன் பட்நாயக்
ஒடிசா சட்டமன்றத் தேர்தலில் தோல்வியுற்ற பிறகு, தனது நெருங்கிய உதவியாளர் வி.கே. பாண்டியன் தனது வாரிசு இல்லை என்று அறிவித்து உள்ளார்.
இது தொடர்பாக பேசி உள்ள அவர், எனது வாரிசு யார் என்பதை ஒடிசா மக்கள் முடிவு செய்வார்கள் என பட்நாயக் செய்தி நிறுவனமான பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறி உள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசுகையில், “வி.கே.பாண்டியன் கட்சியில் சேர்ந்தார். எந்தப் பதவியையும் வகிக்கவில்லை. அவர் தேர்தலில் போட்டியிடவில்லை. ஒரு அதிகாரியாக, கடந்த 10 ஆண்டுகளில், இரண்டு சூறாவளிகள் மற்றும் கோவிட் 19 தொற்று காலத்தில் பல்வேறு துறைகளில் அவர் சிறப்பாக பணியாற்றினார். பின்னர் ஐஏஎஸ் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பின் பிஜேடி கட்சியில் சேர்ந்தார். ஒரு சிறந்த பணியைச் செய்வதன் மூலம் பெருமளவில் பங்களித்தார். அவர் நேர்மையான நபர், அதற்காக அவர் நினைவுகூரப்பட வேண்டும்” என்று அவர் கூறினார்.
வி.கே.பாண்டியனை சாடிய பாஜக
ஒடிசா சட்டமன்றத் தேர்தலின் போது, தமிழ்நாட்டை சேர்ந்த வி.கே.பாண்டியன் மீது பாஜக கடும் விமர்சனங்களை முன் வைத்தது. ஒடியா அல்லாத ஒருவரை இங்கு ஆளவைக்கும் வேளையை பிஜேடி கட்சி செய்வதாக பிரச்சாரம் மேற்கொண்டது.
பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “ஒடிசா மக்கள் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்து, மாமன்னர் அசோகருக்கு எதிராக வீரத்துடன் போராடினார்கள். ஆனால் இன்று நவீன்பாபு ஒரு தமிழ் முதலமைச்சரை மக்கள் மீது திணிக்க முயற்சிக்கிறார். மக்கள் நவீன் பாபுவை சகித்துக் கொண்டார்கள் ஆனால் உங்கள் பெயரில் இந்த தமிழ் பாபுவை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம் என அவர் கூறினார்.
திரை மறைவில் இருந்து ஆட்சி நடத்த திட்டம்
திரைமறைவில் இருந்து ஆட்சியை நடத்த ஒரு தமிழ் பாபுவை அனுமதிக்க தயாரா? என்று கேள்வி எழுப்பிய அவர், பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் ஒரு மக்கள் சேவையாளர் ஆட்சியை நடத்துவார் என்று அவர் கூறினார்.
ராமர் கோயில் உற்சவத்தில் கலந்து கொள்ள ஒடிசா மக்களை பாண்டியன் தடுத்து நிறுத்தியதாக ஷா குற்றம் சாட்டிய அவர், “பகவான் ஜெகநாதருக்கு அவமரியாதை செய்வதை மக்கள் பொறுத்துக் கொள்வார்களா என்று கேள்வி எழுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.
டாபிக்ஸ்