தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Russia-ukraine War:உக்ரைன் அதிபருக்கு திடீர் அழைப்பு விடுத்த சீனா - காரணம் என்ன?

Russia-Ukraine War:உக்ரைன் அதிபருக்கு திடீர் அழைப்பு விடுத்த சீனா - காரணம் என்ன?

Karthikeyan S HT Tamil

Feb 25, 2023, 09:33 AM IST

google News
சீன அதிபர் ஷி ஜின்பிங்கை விரைவில் சந்திக்க திட்டமிட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அறிவித்துள்ளார். (AFP/AP)
சீன அதிபர் ஷி ஜின்பிங்கை விரைவில் சந்திக்க திட்டமிட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அறிவித்துள்ளார்.

சீன அதிபர் ஷி ஜின்பிங்கை விரைவில் சந்திக்க திட்டமிட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அறிவித்துள்ளார்.

போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யாவும், உக்ரைனும் விரைவாக பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் சீனா வலியுறுத்தியிருந்த நிலையில், சீன அதிபர் ஷி ஜின்பிங்கை விரைவில் சந்திக்க திட்டமிட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அறிவித்துள்ளார்.

உக்ரைனுக்குள் ரஷ்ய ராணுவ படைகள் நுழைந்து தாக்குதல் நடத்தத் தொடங்கி ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இந்தப் போரால் இரு தரப்பிலும் இதுவரை தலா ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கான மக்களும், குழந்தைகளும் உயிரிழந்துள்ளனர். பல லட்சம் பேர் வீடற்று அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சமடைந்து உள்ளனர்.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள 30 நாடுகளின் கூட்டமைப்பான நேட்டோவில் (NATO) உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடின் அறிவித்த போர் முடிவு எட்டப்படாமல் இன்றும் தொடர்ந்துகொண்டிருக்கிறது.

இருநாடுகளும் அமைதியற்று காணப்படும் இந்தச் சூழலில் இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யாவும், உக்ரைனும் விரைவாக பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்று சீனா வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக ஒரு செயல் திட்டத்தையும் சீனா முன்வைத்துள்ளது. அதன்படி, "ரஷ்யாவும் உக்ரைனும் விரைவில் அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும். அமைதியை ஏற்படுத்துவதற்கான ஒரே திசையில் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற வேண்டும். இந்தப் பேச்சுவார்த்தைக்கு அனைத்து நாடுகளும் ஆதரவு அளிக்க வேண்டும். பேச்சுவார்த்தையும் விட்டுக் கொடுத்தலுமே உக்ரைன் பிரச்சினைக்கு ஒரே தீர்வாக இருக்க முடியும். இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதற்கு சீனாவின் உறுதியான ஆதரவு தொடரும்." என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உக்ரைனில் போரை முடிவுக்கு கொண்டுவர சமதான பேச்சுவார்த்தை நடத்த சீனா வலியுறுத்தியிருந்த நிலையில், சீனா அதிபர் ஷி ஜின்பிங்கை விரைவில் சந்திக்க திட்டமிட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார். இது உலக பாதுகாப்புக்கு முக்கியமானதாக இருக்கும் என்றும் ஆனால் ரஷ்ய அதிபர் புடினுடன் எக்காரணம் கொண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்போவதில்லை எனவும் அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மூன்றாம் உலகப் போரின் அபாயத்தைத் தவிர்ப்பதற்காக ரஷ்யாவிற்கு சீனா ஆயுதப் பொருட்களை வழங்குவதை தடுக்க தன்னால் முடிந்ததைச் செய்வதாகவும் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். இருப்பினும் எப்போது இந்த சந்திப்பு நடைபெறும் என்ற தகவல் வெளியாகவில்லை.

ரஷ்யாவுக்கு தொடர்ந்து சீனா ஆதரவாக செயல்பட்டு வந்த நிலையில், அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் போரை முடிவுக்கு கொண்டு வர சீன அதிபர் வலியுறுத்தி இருப்பதை விமர்சித்துள்ள அமெரிக்கா, ''உக்ரைனுக்குள் ரஷ்யா நுழைந்ததற்கு மேற்கத்திய நாடுகளும் நேட்டோ அமைப்புமே மறைமுக காரணம் என்றும் அவைதான் போரை தூண்டிவிட்டன என மேற்கத்திய நாடுகளுக்கும் நேட்டோவுக்கும் எதிராக கருத்துக்களைக் கூறி வந்த நாடு சீனா என்று அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி
கவனம் பெற்றவை