Top 10 News: ஜிஎஸ்டி வசூல் அதிகரிப்பு முதல் வெள்ளத்தில் சிக்கி 150 பேர் பலி வரை - டாப் 10 நியூஸ்
Nov 01, 2024, 07:48 PM IST
Top 10 News: இந்தியா மற்றும் உலகம் முழுவதும் இன்று நிகழ்ந்த முக்கிய செய்திகளின் தொகுப்பு இங்கு தரப்பட்டுள்ளது. அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் சுருக்கமாக தெரிந்துகொள்ளலாம்.
Top 10 National-World News: தேசம் முதல் உலகம் வரை இன்று நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அரசியல் தொடர்பான செய்திகளை இந்த தொகுப்பில் சுருக்கமாக காணலாம்.
ஜிஎஸ்டி வசூல் அதிகரிப்பு
நாட்டில் அக்டோபர் மாதத்தில் ரூ.1.87 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலாகியுள்ளது. தமிழகத்தில் ரூ.11.188 கோடியும், புதுச்சேரியில் ரூ.252 கோடியும் ஜிஎஸ்டி வசூலாகியுள்ளது.
400 நிறுவனங்கள் மீது பொருளாதார தடை
உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யாவுக்கு உதவியதாக 19 இந்திய தனியார் நிறுவனங்கள் மற்றும் 2 இந்தியர்கள் மீது அமெரிக்க பொருளாதார தடை விதித்துள்ளது. உக்ரைனில் ரஷ்யாவின் போர் முயற்சிகளுக்கு உதவியதற்காக 10க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 19 இந்திய நிறுவனங்கள் உட்பட சுமார் 400 நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது.
அறங்காவலர்கள் நியமனம்
திருப்பதி திருமலை தேவஸ்தானத்தின் புதிய தலைவராக பொல்லினேனி ராஜகோபால் நாயுடுவை நியமித்து ஆந்திரப் பிரதேச அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கோயிலுக்கு 24 அறங்காவலர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
பொருளாதார நிபுணர் பிபேக் டெப்ராய் காலமானார்
பிரதமர் மோடியின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் தலைவரும், பொருளாதார நிபுணருமான பிபேக் டெப்ராய் (69) காலமானார். உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அவரது உயிர் பிரிந்தது. பத்ம ஸ்ரீ உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ள அவர், 2019 வரை NITI ஆயோக் குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார். அவரது சாதனைகளை நினைவுகூர்ந்து பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
ரவி சங்கர் பிரசாத் வலியுறுத்தல்
நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளைக் கொடுத்து மக்களை தவறாக வழிநடத்தியற்காக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவும், ராகுல் காந்தியும் நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் ரவி சங்கர் பிரசாத் வலியுறுத்தியுள்ளார்.
ரோந்து பணிகள் தொடக்கம்
கிழக்கு லடாக் எல்லையில் இந்தியா - சீனா படை விலகல் நிறைவடைந்துள்ள நிலையில், இரு நாட்டு வீரர்களின் ரோந்து பணிகள் தொடங்கியுள்ளதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பிரதமர் மோடி விமர்சனம்
தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பான மல்லிகார்ஜுன் கார்கேவின் ஆலோசனைகளை அடுத்து காங்கிரஸ் கட்சி மோசமாக அம்பலமாகிவிட்டதாக பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார்.
மாணவி உயிரிழப்பு
கேரள மாநிலம் கோட்டக்கல் பகுதியில் உள்ள கோட்டூரில் அமைந்துள்ள பள்ளி ஒன்றில் கிரிக்கெட் பயிற்சி மேற்கொண்டபோது பத்தாம் வகுப்பு படித்து வந்த மாணவியின் தலையில் பந்து தாக்கியதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கிரெடிட் கார்டு புதிய விதிகள் அமல்
புதிய கிரெடிட் கார்டு விதிகள் நவம்பர் 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளன. ஆன்லைன் பணப்பரிவர்த்தனை, கிரெடிட் கார்டு பயன்பாடு, நிரந்தர வைப்பு நிதி போன்றவை தொடர்பான ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகள் இன்று (நவ.01) முதல் அமலுக்கு வந்துள்ளன. ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகளின் படி எஸ்.பி.ஐ. வங்கியின் கிரெடிட் கார்டுகளுக்கான கட்டணம் மாதத்திற்கு 3.75 சதவீதமாக அதிகரிக்கப்படுகிறது. ஒருமாத பில்லிங் காலத்தில் மின்கட்டணம் உள்ளிட்ட சேவைகளுக்காக செலுத்தும் கட்டணம் ரூ.50,000க்கு மேல் இருந்தால் கூடுதலாக 1 சதவீதம் கட்டணம் விதிக்கப்படும்.
வெள்ளத்தில் சிக்கி 150 பேர் பலி
ஸ்பெயின் நாட்டில் பதிவான கனமழையை அடுத்து ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி சுமார் 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். சுனாமி பேரலைகள் ஏற்படுத்தும் பாதிப்பை காட்டிலும் இது அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாபிக்ஸ்