Mamata Banerjee: ’ஐயய்யோ! மம்தாவுக்கு என்ன ஆச்சு?’ தலையில் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதி!
Mar 14, 2024, 09:19 PM IST
”மம்தா பானர்ஜி விபத்தில் பலத்த காயம் அடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கூறி உள்ளது”
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விபத்தில் பலத்த காயம் அடைந்ததாக அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் (ஏஐடிசி) கட்சி அறிவித்துள்ளது. செய்திகளின்படி, டிஎம்சி தலைவர் அபிஷேக் பானர்ஜி அவரை எஸ்எஸ்கேஎம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
மம்தா பானர்ஜியின் காயம் பற்றிய செய்தியை எக்ஸ் சமூகவலைத்தளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படத்தில் மம்தா பானர்ஜி நெற்றியில் இரத்தம் வழியும் அவரது படம் வெளியாகி உள்ளது.
“எங்கள் தலைவர் மம்தா பானர்ஜி பெரிய காயம் அடைந்தார். தயவுசெய்து பிரார்த்தனை செய்யுங்கள்” என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கேட்டுக் கொண்டுள்ளது.
மருத்துவமனை அதிகாரி ஒருவரின் கூற்றுப்படி, 69 வயதான மம்தா பானர்ஜி தெற்கு கொல்கத்தாவின் பாலிகங்கில் நடந்த ஒரு நிகழ்விலிருந்து திரும்பிய சிறிது நேரத்திலேயே தனது வீட்டில் வழுக்கி விழுந்து தலையில் அடிபட்டதாக கூறீ உள்ளார்.
இதற்கிடையில், மாநில பாஜக தலைவர் சுகந்தா மஜும்தார், முதல்வர் மம்தா பானர்ஜி விரைவாக குணமடைந்து இயல்பு நிலைக்கு திரும்ப கடவுளை பிரார்த்திக்கிறோம் என கூறி உள்ளார்.
தனது ’எக்ஸ்’ வலைத்தளத்தில், காயமடைந்த நிலையில் உள்ள மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் புகைப்படத்தை பகிர்ந்துள்ள தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் மம்தா பானர்ஜி விரைந்து குணமடைய வேண்டும் என பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், மாண்புமிகு மேற்கு வங்க முதல்வர் மம்தா சாலை விபத்து குறித்து அதிர்ச்சியும் ஆழ்ந்த கவலையும் அடைந்தேன். இந்த கடினமான நேரத்தில் என் எண்ணங்கள் அவரோடு உள்ளன, மம்தா பானர்ஜி விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன் என மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
திமுக துணைப்பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், மாண்புமிகு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் சாலை விபத்து பற்றிய செய்தி அதிர்ச்சியளிக்கிறது. என் எண்ணங்கள் அவரோடு உள்ளன. அவர் விரைவில் குணமடைவார் என்று நம்புகிறேன் என பதிவிட்டுள்ளார்.