Karnataka Election Results: பாஜக பின்னடைவு.. 5-வது முறையாக வாகை சூடுவாரா சி.டி.ரவி? - கள நிலவரம் என்ன?
May 13, 2023, 11:45 AM IST
CT Ravi: கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் சிக்மகளூரு தொகுதியில் களம் கண்டுள்ள பாஜக முக்கிய பிரமுகரும், தமிழக பாஜக மேலிடப் பொறுப்பாளருமான சி.டி. ரவி 5வது முறையாக வெற்றி அடைவாரா ? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் சிக்மகளூரு தொகுதியில் களம் கண்டுள்ள பாஜக முக்கிய பிரமுகரும், தமிழக பாஜக மேலிடப் பொறுப்பாளருமான சி.டி. ரவி தற்போதைய நிலவரப்படி 802 வாக்குகள் பின்தங்கி உள்ளார்.
224 இடங்களைக் கொண்ட கர்நாடகா சட்டமன்றத்துக்கான தோ்தல் மே 10-ஆம் தேதி நடந்து முடிந்தது. சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி மாநிலம் முழுவதும் 36 மையங்களில் இன்று (மே 13) காலை 8 மணிக்குத் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஆளும் பாஜக தொடக்கத்தில் முன்னிலை வகித்தாலும் தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் 118 தொகுதிகளிலும், பாஜக 71 தொகுதிகளிலும் ஜனதா தளம் கட்சி 28 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன. மற்றவர்கள் 6 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறார்கள்.
இத்தேர்தலில், தமிழக பாஜக மேலிட பொறுப்பாளரும், தேசிய பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.டி. ரவி கர்நாடகா மாநிலம் சிக்மகளூர் சட்டமன்றத் தொகுதியில் களம் கண்டிருந்தார். ஏற்கனவே சிக்மகளூர் தொகுதி எம்எல்ஏவாக உள்ளார்.
சிக்மகளூர் சட்டமன்ற தொகுதி சி.டி.ரவியின் பாரம்பரிய தொகுதியாக கருதப்படுகிறது. கடந்த 2004ஆம் ஆண்டு முதல் இந்த தொகுதியில் இருந்து தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறார். இம்முறை நாங்கள் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையுடன் எச்.டி.தம்மையாவை காங்கிரஸ் கட்சி களமிறக்கியுள்ளது. அதேபோல் மஜத சார்பில் வேட்பாளராக பி.எம். திம்மா ஷெட்டியை நிறுத்தியுள்ளது.
இந்நிலையில், சிக்மகளூர் தொகுதி வாக்கு எண்ணிக்கையின் தற்போதைய நிலவரப்படி சி.டி.ரவி பின்னடைவை சந்தித்து வருகிறார். அங்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தம்மையா முன்னிலை வகித்து வருகிறார்.
தற்போதைய நிலவரப்படி சி.டி.ரவி 11, 953 வாக்குகள் பெற்றிருக்கிறார். இவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் தம்மையா 12,765 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். சி.டி.ரவியை விட 802 வாக்குகள் அதிகம் பெற்று முதலிடத்தில் உள்ளார் தம்மையா. காங்கிரஸ் வேட்பாளரான தம்மையா, சி.டி.ரவிக்கு முன்னாள் உதவியாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2018 தேர்தலில் சிக்மகளூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் சி.டி.ரவி வெற்றி பெற்றார். சி.டி.ரவி 70,863 வாக்குகள் பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் பி.எல்.சங்கர் 44,549 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தில் இருந்தார்.