Karnataka Election Results: நொடிப் பொழுதில் மாறிய ரிசல்ட்.. முந்தும் காங்கிரஸ்.. பிந்தும் பாஜக!
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Karnataka Election Results: நொடிப் பொழுதில் மாறிய ரிசல்ட்.. முந்தும் காங்கிரஸ்.. பிந்தும் பாஜக!

Karnataka Election Results: நொடிப் பொழுதில் மாறிய ரிசல்ட்.. முந்தும் காங்கிரஸ்.. பிந்தும் பாஜக!

Karthikeyan S HT Tamil
May 13, 2023 09:53 AM IST

Congress vs BJP: கா்நாடக சட்டமன்றத் தோ்தலில் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து அக்கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

காங்கிரஸ்
காங்கிரஸ்

இந்நிலையில் சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி மாநிலம் முழுவதும் 36 மையங்களில் இன்று (மே 13) காலை 8 மணிக்குத் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 306 அறைகளில் 4,256 மேஜைகள் அமைக்கப்பட்டு வாக்குகள் எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணிக்கையையொட்டி, கர்நாடக மாநிலம் முழுவதும் உச்சகட்ட போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பெங்களூரு உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் 144 தடை உத்தரவும் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. மாநிலம் முழுவதும் சுமார் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

காலை 9 மணி வரை நிலவரப்படி காங்கிரஸ் 92 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. பாஜக 69 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. மதச்சார்பற்ற ஜனதா தளம் 24 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. இதனால் பாஜக, காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. அதேநேரத்தில், பாஜகவைவிட காங்கிரஸ் சற்று முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் தலைவர்கள் சித்தராமையா, டி.கே.சிவக்குமார், தினேஷ் குண்டுராவ் உள்ளிட்டோர் முன்னிலை வகிக்கின்றனர்.

காங்கிரஸ் கட்சி முன்னிலையில் இருப்பதைத் தொடர்ந்து அக்கட்சியினர் நடனமாடி தங்கள் மகிழ்ச்சி வெளிப்படுத்தி வருகின்றனர். டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்திலும் காங்கிரஸ் கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

முன்னதாக, கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பாஜக 224, எதிர்க்கட்சியான‌ காங்கிரஸ் 223 (ஒரு தொகுதி விவசாய சங்கம்), மதச்சார்பற்ற ஜனதா தளம் 207, ஆம் ஆத்மி 217, பகுஜன் சமாஜ் 133 தொகுதிகளில் போட்டியிட்டன. 918 சுயேச்சைகள் உட்பட மொத்தம் 2,613 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். 

மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் 113 தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் கர்நாடகாவில் ஆட்சி அமைக்கும். தேர்தலுக்குப் பிந்தைய பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் முடிவுகள்படி கர்நாடகாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட வாய்ப்பு அதிகம் இருப்பதாக கூறப்பட்டிருந்தது. கர்நாடகா தேர்தல் கருத்துக் கணிப்புகள் படி மாநிலத்தில் காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும் என கணிக்கப்பட்டிருந்தது. தற்போதைய நிலவரப்படி கிட்டத்தட்ட ஆட்சி அமைக்க தேவையான இடங்களை காங்கிரஸ் நெருங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Whats_app_banner
தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.