ED chief Rahul Navin: அமலாக்கத்துறையில் அதிரடி மாற்றம்! புதிய இயக்குநர் ஆக ராகுல் நவீன் நியமனம்!
Aug 15, 2024, 02:21 PM IST
சஞ்சய் குமார் மிஸ்ராவுக்கு நெருக்கமானவராகக் கருதப்படும் ராகுல் நவீன் அமலாக்கத்துறை செயல் தலைவராக இருந்த காலத்தில்தான், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் ஆகியோர் பணமோசடி வழக்குகளில் கைது செய்யப்பட்டு இருந்தனர்.
அமலாக்க இயக்குநரகத்தின் (ED) முழு நேர இயக்குநராக அதன் செயல் தலைவர் ராகுல் நவின் நியமனம் செய்யப்பட்டு உள்ளர்.
அடுத்த 2 ஆண்டுகளுக்கு பொறுப்பில் இருப்பார்
மத்திய அமைச்சரவையின் நியமனக் குழு (ஏசிசி) வெளியிட்டுள்ள உத்தரவில், 1993-ஆம் ஆண்டு இந்திய வருவாய் அலுவலரும் (ஐஆர்எஸ் அலுவர்), வருமான வரித்துறை அதிகாரியுமான ராகுல் நவின் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். அடுத்த 2 ஆண்டுகளுக்கு இந்த பொறுப்பில் இவர் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அமலாக்க துறை இயக்குனர் என்பது மத்திய அரசின் கூடுதல் செயலாளர் (AS) அந்தஸ்துக்கு நிகரான பதவி ஆகும். ராகுல் நவின் கடந்த ஆண்டு டிசம்பரில் கூடுதல் செயலாளர் அந்தஸ்தை பெற்று இருந்தார்.
யார் இந்த ராகுல் நவின்?
57 வயதாகும் ராகுல் நவின் கடந்த 2019ஆம் ஆண்உ அமலாக்கத்துறையில் சிறப்பு இயக்குனராக (OSD) சேர்ந்தார். பணமோசடிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் உலகளாவிய அமைப்பான Financial Action Task Force (FATF) மூலம் இந்தியாவின் பரஸ்பர மதிப்பீடு தொடர்பான ஏஜென்சியின் பணிகளுக்கு அவர் தலைமை தாங்கினார்.
ஐஐடி கான்பூரில் பி.டெக் மற்றும் எம்.டெக் மற்றும் மெல்போர்னில் உள்ள ஸ்வின்பர்ன் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டம் பெற்ற நவீன், அவருக்கு முன்னோடியாக இருந்த சஞ்சய் குமார் மிஸ்ராவின் பதவிக்காலம் செப்டம்பர் 15ம் தேதியுடன் முடிவடைந்ததையடுத்து அமலாக்கத்துறையின் செயல் இயக்குநராக கடந்த ஆண்டில் நியமிக்கப்பட்டார்.
சஞ்சய் குமார் மிஸ்ராவுக்கு நெருக்கமானவராகக் கருதப்படும் ராகுல் நவீன் அமலாக்கத்துறை செயல் தலைவராக இருந்த காலத்தில்தான், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் ஆகியோர் பணமோசடி வழக்குகளில் கைது செய்யப்பட்டு இருந்தனர்.
சர்வதேச வரி விதிப்பு விவகாரங்களில் நிபுணரான நவின், பீகார் மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர் ஆவார். 30 ஆண்டுகளாக வருமான வரித்துறையில் அவர் பணியாற்றி உள்ளார். 2004-08 ஆம் ஆண்டு சர்வதேச வரிவிதிப்பு பிரிவில் அவர் பணியாற்றிய போது, வோடபோன் வழக்கு உட்பட பல வெளிநாட்டு பரிவர்த்தனைகள் மீதான வழக்குகளை கையாண்ட அனுபவம் அவருக்கு உள்ளது.
அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறுவது என்ன?
சந்தேஷ்காலியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் குழு தாக்கப்பட்ட பின்னர் நவீன் மேற்கு வங்காளத்திற்கு விரைந்தார், மேலும் அவரது புலனாய்வாளர்களை "பயமின்றி பணியாற்றவும்" அவர் கேட்டுக் கொண்டு இருந்தார்.
அமலாக்கத்துறை மூத்த அதிகாரி ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தும் போது ஆயுதம் ஏந்திய முழுமையான பாதுகாப்பைப் பெறுவதையும், அதன் அலுவலகங்களும் துணை ராணுவப் படைகளிடமிருந்து பாதுகாப்பைப் பெறுவதையும் முன்னின்று நவின் ராகுல் செய்திருந்தார் என்று கூறினார்.
"பணமோசடி தடுப்புச் சட்டம் மற்றும் பிறவற்றின் கீழ் விசாரிக்கப்படும் அனைத்து வழக்குகளிலும் குற்றப்பத்திரிகையை சரியான நேரத்தில் தாக்கல் செய்வதை உறுதி செய்யுமாறு ஏஜென்சிக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். கடந்த ஒரு மாதத்தில் குற்றம் சாட்டப்பட்ட 24 பேருக்கு எதிராக அமாலாக்கத்துறை மூன்று தண்டனை உத்தரவுகளைப் பெற்றுள்ளது," என்று அவர் கூறினார்.
அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் (FEMA) சிவில் விதிகளைத் தவிர்த்து சட்டவிரோத பணமோசடி தடுப்புச் சட்டம் (PMLA) மற்றும் தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள் சட்டம் (FEOA) ஆகிய இரண்டு குற்றவியல் சட்டங்களின் கீழ் நிதிக் குற்றங்களை அமலாக்கத்துறை விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
டாபிக்ஸ்