Senthil Balaji Vs ED: ’செந்தில் பாலாஜி வழக்கை தமிழ்நாடு அரசு தாமதப்படுத்துகிறது!’ அமலாக்கத்துறை சரமாரி குற்றச்சாட்டு!
Senthil Balaji Vs ED: அமலாக்கத்துறை வழக்கறிஞரின் வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் முந்தைய வழக்குகளை விசாரணைக்கு எடுக்கலாமா? அல்லது வேண்டாமா? என்பதே கேள்விக்கு உரியதாக உள்ளது என கூறி உள்ளனர்.
செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு விசாரணையை தமிழ்நாடு அரசு தாமதப்படுத்துவதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டி உள்ளது.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, ஜாமீன் கேட்டு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து உள்ளார்.
இந்த வழக்கு விசாரணை, ஆனது உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது. அமலாக்கத்துறை மற்றும் செந்தில் பாலாஜி தரப்பு வாதங்களை முன் வைத்து வருகின்றனர்.
நீதிபதிகள் சரமாரி கேள்வி
செந்தில் பாலாஜி மீதான வழக்கின் விசாரணை எப்போது நிறைவு அடையும், 500க்கும் மேற்பட்டோரிடம் இருந்து இன்னும் வாக்கு மூலங்கள் பதிவு செய்ய வேண்டி உள்ளது. வாக்கு மூலங்களை பதிவு செய்து விசாரணையை நடத்தி அதனை நிறைவு செய்வது எப்போது நடைபெறும் என எங்களுக்கு தெரியவில்லை என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
தமிழக அரசு மீது அமலாக்கத்துறை புகார்
இதற்கு பதில் அளித்த அமலாக்கத்துறை வழக்கறிஞர் துஷார் மேத்தா, வழக்கை 6 மாதத்தில் முடிவுக்கு கொண்டு வருவோம். தமிழ்நாடு அரசு விசாரணையை தாமதப்படுத்துகின்றது என்று கூறினார்.
ஆனால் அமலாக்கத்துறை வழக்கறிஞரின் வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் முந்தைய வழக்குகளை விசாரணைக்கு எடுக்கலாமா? அல்லது வேண்டாமா? என்பதே கேள்விக்கு உரியதாக உள்ளது. அமலாக்கத்துறை அதிகார வரம்பு எந்த அளவுக்கு செல்லும் என்பதை பார்க்க வேண்டும் என நீதிபதிகள் கூறினார்.
விசாரணை முடியும் வரை சிறையில் இருக்க வேண்டுமா?
செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, இது ஒரு ஜாமீன் கோரும் வழக்கு. ஜாமீன் கோரி ஒருவர் தாக்கல் செய்கிறார் என்றால் அதற்கான முகாந்திரங்களை பார்க்க வேண்டி உள்ளது. விசாரணை நிறைவு பெறும் வரை ஒருவரை சிறையில் வைத்து இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று உச்சநீதிமன்றம் பல வழக்குகளில் கூறி உள்ளது. அதை சுட்டிக்காட்டிதான் நான் பிணை கேட்கின்றேன். மற்றபடி வழக்கு விசாரணை நடைபெறுவதை வேறு ஒரு தனி வழக்காகதான் பார்க்க வேண்டும். செந்தில் பாலாஜி 300 நாட்களுக்கும் மேலாக சிறையில் உள்ளார், இதய அறுவை சிகிச்சை செய்து உள்ளார் என்பதையும் கவனித்தில் கொள்ள வேண்டும் என்று என வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்து உள்ளது.
ஓராண்டாக சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜி
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை கடந்த ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி கைது செய்தது. இதைத் தொடர்ந்து செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினா் 5 நாள்கள் காவலில் எடுத்து விசாரித்தனர். இந்த விசாரணை முடிந்த பிறகு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12-ஆம் தேதி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 3,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை மற்றும் ஆவணங்களை அமலாக்கத்துறை தாக்கல் செய்தது. இதனைத் தொடர்ந்து நீதிமன்றக் காவலில் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
அறுவை சிகிச்சை
கைதான சில நாட்களில் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிறையில் இருந்தபடியே இந்த வழக்கில் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் தள்ளுபடி செய்த நிலையில், நீதிமன்றக் காவலில் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டு வந்தார். அவரது நீதிமன்ற காவல் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது.
நடந்தது என்ன?
கடந்த 2014 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியின் போது போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் பணி நியமனத்தில் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து கடந்த 2015 ஆம் ஆண்டு தேவசகாயம் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால், அப்போது அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியின் பெயர் அதில் இடம் பெறவில்லை. 2016 ஆம் ஆண்டு பாதிக்கப்பட்டவர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததன் அடிப்படையில் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார் உள்ளிட்ட 40 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
மோசடி வழக்குப்பதிவு
தொடர்ந்து முறைகேட்டு புகாரின்படி, செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை பண மோசடி வழக்கு பதிவு செய்தது. தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு சம்மனும் அனுப்பியது. ஆனால், உயர் நீதிமன்றம் அதனை ரத்து செய்தது. இருப்பினும் வழக்கு விசாரணை தொடர்ந்து வந்தது. கடந்த 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார் செந்தில்பாலாஜி. அதே ஆண்டில் உச்ச நீதிமன்றத்தை நாடிய அமலாக்கத்துறை, சிறப்பு புலனாய்வு விசாரணை தேவை எனக் கோரிக்கை வைத்தது. 2022 ஆம் ஆண்டு, தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என செந்தில் பாலாஜியும் உச்ச நீதிமன்றத்தையும் நாடினார். இந்த வழக்குகளை 2 மாதத்திற்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என கடந்த ஆண்டு மே மாதம் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.