Summer Tips: மக்களே வெயில் தாங்க முடியலையா? - அப்போ இதைத்தான் செய்யணும்..!
Apr 26, 2023, 09:05 AM IST
கோடைக் காலத்தில் மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய சில முக்கிய குறிப்புகள் குறித்து இங்கே காண்போம்.
கோடைக் காலத்தில் வெயிலில் தாக்கமானது உச்சத்தில் இருந்து வருகிறது. உலகில் உள்ள அனைத்து உயிர்களும் பல்வேறு விதமான சிக்கல்களை இந்த நேரத்தில் சந்தித்து வருகின்றன. பெரியவர்களுக்கே இந்த நேரத்தில் உடல் ரீதியான சிக்கல்கள் ஏற்படும். அப்போது மாணவர்களின் நிலைமையை யோசித்துப் பாருங்கள்.
கோடைக்காலத்தில் மாணவர்களுக்கு நோய் பரவுவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம். அம்மை போன்ற நோய் கோடைக்காலத்தில் தான் அதிக அளவில் பரவுகிறது. இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்பது மிகவும் அவசியமாகும். இது மட்டுமில்லாமல் தோல் வியாதிகள், உடலில் சூடு அதிகரித்து ஏற்படும் உபாதைகள் எனப் பலவிதமான நோய்கள் மாணவர்களை எளிதில் தாக்கி விடும்.
இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மாணவர்கள் கட்டாயம் மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்யும் பட்சத்தில் பெரிய சிக்கல்களிலிருந்து எளிதில் தப்பிக்கலாம். கோடைக் காலத்தில் மாணவர்கள் செய்ய வேண்டிய சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து இங்கே காண்போம்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
- கோடைக்காலத்தில் பொதுவாக அதிக அளவு நீர் அருந்த வேண்டும். இதன் மூலமாகவே பலவிதமான நோய்களைத் தடுத்து நிறுத்தி விடலாம்.
- இந்த நேரத்தில் எந்த ஆடைகளை அணிய வேண்டும் என்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பொதுவாகவே கோடைக் காலத்தில் பருத்தி ஆடுகள் அல்லது மெல்லிய ஆடைகள் அணிவது உடலுக்கு மிகவும் நல்லதாகும்.
- வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் பொழுது கருப்பு நிற ஆடைகளைத் தவிர்ப்பது மிகவும் நல்லது.
- வெயில் உச்ச நிலையில் இருக்கும் பொழுது மாணவர்கள் வெளியில் செல்வதைத் தவிர்த்து விட வேண்டும். பொதுவாகவே கோடைக் காலத்தில் வெளியே சென்று விளையாடுவதைக் குழந்தைகள் தவிர்ப்பது மிகவும் நல்லது.
- உடலில் வெயிலின் தாக்கம் அதிகரித்தால் தேவையில்லாத ஒவ்வாமை சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளன.
- பொதுவாகவே கோடைக்காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்கின்ற காரணத்தினால் சத்து நிறைந்த பழங்கள் காய்கறிகள் ஜூஸ் வகைகள், கரும்புச் சாறு, நுங்கு, தர்பூசணி, வெள்ளரிக்காய் போன்ற இயற்கை உணவுகளைச் சாப்பிடுவது மிகவும் நல்லது.
- பலரும் வெயிலிலிருந்து வரும் பொழுது உடனே குளிர்சாதனப் பெட்டியில் இருந்து குளிர்ந்த நீரைக் குளிக்கின்றனர். அது உடலுக்கு மிகவும் கேடு விளைவிக்கும். குளிர்சாதனப் பெட்டியில் இருக்கும் நீரைக் குடிப்பதை விட மண்பானையில் உள்ள நீரை அருந்துவது உடலுக்கு அதிக குளிர்ச்சி கொடுக்கும்.
- கோடைக்காலத்தில் கொடுக்கப்படும் விடுமுறை நாட்களை டிவி மற்றும் செல்போன் போன்றவற்றைப் பார்த்து நேரத்தை வீணடிக்காமல், பயிற்சி வகுப்புகள் நீச்சல் பயிற்சி கணினி வகுப்புகள் போன்றவற்றில் சேர்ந்து நேரத்தைப் பயனுள்ளதாக மாற்றிக் கொள்ளலாம்.
- பொதுவாகவே வெயிலின் மூலம் உடலில் வைட்டமின் டி அதிகரிக்கும். ஆனால் கோடைக் காலத்தில் அதிக வெயிலின் தாக்கம் இருக்கின்ற காரணத்தினால் அதுவே மிகவும் ஆபத்தாகிவிடும். எனவே காலை நேரத்தில் மெல்லிய சூரிய ஒளிக்கதிர்கள் படும் இடத்தில் நின்று கொண்டு உடலில் வைட்டமின் டி உற்பத்தியை அதிகரித்துக் கொள்ளலாம்.
- பொதுவாகவே உடற்பயிற்சிகள் செய்வது உடலுக்கும் மனதிற்கும் பலம் ஏற்படும். அதுமட்டுமல்லாமல் கோடைக்காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கின்ற காரணத்தினால் காலை மாலை என இருவேளைகளும் குளிப்பது மிகவும் நல்லது. இது உடலில் சுத்தமாக வைத்திருப்பது மட்டுமில்லாமல் புத்துணர்ச்சியையும் ஏற்படுத்துகிறது.
டாபிக்ஸ்