கமகமக்கும் இஞ்சி ஊறுகாய்.. டேஸ்ட் நச்சுன்னு நாக்கில் ஒட்டிக்கொள்ளும்.. இட்லி, தோசை, வெரைட்டி ரைஸ்க்கு சரியான காமினேஷன்
Nov 16, 2024, 07:00 AM IST
பருப்பு சாதம், தயிர் சாதம், எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம் என வெரைட்டி ரைஸ்க்கு இந்த இஞ்சி ஊறுகாய் அட்டகாசமாக இருக்கும். அப்பறம் என்ன இன்னைக்கே செய்து விடுங்கள்.
இஞ்சி உடலுக்கு ஆரோக்கியம் தரும். செரிமானம் உள்ளிட்ட பல நன்மைகள் உள்ளது- ஆனால் இஞ்சியை சாப்பிட பலர் விரும்புவதில்லை. அப்படி இஞ்சியை பார்த்தாலே வெறுப்பவர்களுக்கு கூட இந்த மாதிரி ஒரு இஞ்சி ஊறுகாய் செய்து கொடுங்கள்.. ஆசையா சாப்பிடுவாங்க இதன் ருசி அருமையாக இருக்கும். இட்லி, தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமான காமினேஷன், பருப்பு சாதம், எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம் என வெரைட்டி ரைஸ்க்கு இந்த இஞ்சி ஊறுகாய் அட்டகாசமாக இருக்கும். அப்பறம் என்ன இன்னைக்கே செய்து விடுங்கள்.
தேவையான பொருட்கள்
இஞ்சி-2 கப்
வெந்தயம் -1 ஸ்பூன்
கடுகு - 3 ஸ்பூன்
நல்லெண்ணெய் - 200 Ml
புளி - 1 கப்
உப்பு - தேவைக்கு ஏற்ப
கறிவேப்பிலை - 2 கொத்து
பெருங்காயம் - 1 ஸ்பூன்
மிளகாய் தூள் 1 கப்
வெல்லம் - 1 கப்
செய்முறை
இஞ்சியை கழுவி தோல் சீவி 2 கப் அளவு எடுத்துக்கொள்ள வேண்டும்.
இப்போது ஒரு கடாயை சூடாக்கி அதில் 2 ஸ்பூன் கடுகு மற்றும் 1 ஸ்பூன் வெந்தயத்தை சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும். கடுகு வெடித்து நன்றாக சிவந்த பிறகு அதை நன்றாக ஆற வைத்து ஒரு மிக்ஸி ஜாரில் பொடிசெய்து எடுத்து கொள்ள வேண்டும்.
இப்போது ஒரு கடாயில் எண்ணெய் 100 ml எண்ணெய் விட்டு அதில் 2 கப் அளவு இஞ்சியை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். இஞ்சி நிறம் மாற ஆரம்பிக்கும் போது இஞ்சி எடுத்த அதே கப்பில் ஒரு கப் அளவு சுத்தம் செய்த புளியை சேர்த்து வதக்க வேண்டும். இஞ்சி சுத்தம் செய்த புளி இரண்டையும் நன்றாக வதக்கிய பின் அதை ஆற வைத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக பேஸ்ட்டாக அரைத்து கொள்ள வேண்டும். தேவை என்றால் லேசாக தண்ணீர் சேர்த்து கொள்ளலாம்.
பின்னர் இஞ்சி வதக்கிய அதே கடாயில் மீதம் இருக்கும் எண்ணெய்யுடம் மேலும் 100 ml எண்ணெய் விட்டு அதில் ஒரு ஸ்பூன் கடுகு சேர்க்க வேண்டும். கடுகு வெடித்த பிறகு அதில் ஒரு கொத்து கறிவேப்பிலை மற்றும் 2 ஸ்பூன் பெருங்காய தூளை சேர்க்க வேண்டும். இப்போது இஞ்சி எடுத்த அதே கப்பில் ஒரு கப் அளவில் மிளகாய் தூள் சேர்க்க வேண்டும். அடுப்பை மிதமான சூட்டில் வைத்து கலந்து விட வேண்டும்.
இப்போது அரைத்த இஞ்சி, புளி பேஸ்ட்டை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். அடுப்பை குறைந்த தீயில் வைத்து நன்றாக கலந்து விட வேண்டும். சிறிது நேரத்தில் எண்ணெய் பிரிய ஆராம்பிக்கும்போது முதலில் பொடி செய்த வைத்த கடுகு, வெந்தய பொடியை சேர்க்க வேண்டும். இதற்கு தேவையான உப்பையும் சேர்த்து நன்றாக கலுந்து விட வேண்டும். கடுகு வெந்தய பொடி சேர்த்த சிறிது நேரத்தில் அதே கப்பில் ஒரு சுத்தமான வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்து கலந்து விட வேண்டும். பின்னர் சிறிது நேரம் கிளறி விட வேண்டும்.
நன்றாக எண்ணெய் பிரிந்து வந்தவுடன் அடுப்பை அணைத்து விடலாம். அவ்வளவுதான் அசத்தலான சுவையில் இஞ்சி ஊறுகாய் ரெடி. ஆனால் ஊறுகாய் ரெடியான உடன் அதை மூடி போட்டு வைக்க கூடாது. அதை நன்றாக ஆற விட வேண்டும். பின்னர் நன்றாக உலர்ந்த கண்ணாடி அல்லது பீங்கான் ஜாடியில் போட்டு வைக்கலாம்.
வெளியில் வைத்தால் 2 மாதம் வரை கெட்டு போகாது. ஃப்ரிட்ஜில் வைத்தால் 6 மாதம் கூட கெட்டுப்போகாது. ஆனால் ஊறுகாயை பயன்படுத்தும்போது உங்கள் கையிலோ அல்லது ஸ்பூனிலோ தண்ணீர் இல்லாமல் மட்டும் பார்த்து கொள்ளுங்கள்.
டாபிக்ஸ்