Pongal Special: சைவப் பிரியர்களின் வரப்பிரசாதம் .. சுண்டி இழுக்கும் தென் மாவட்ட சுண்டக்கறி சமையல்!
Jan 16, 2024, 08:22 PM IST
விளைவித்த பொருட்களை சமைத்து அதை வீணக்காமல், ஒரு கலவையாக மதிப்புக்கூட்டி சுண்டக்கறி என இரண்டு நாட்களுக்கு பயன்படுத்துவது என்பது பொங்கலின் மற்றொரு சிறப்பு.
தைப்பொங்கல் அன்று காலையில் சர்க்கரை பொங்கல், வெண் பொங்கல், பச்சரிசி சாதம் என சமையல் முடித்து காய்கறிகள், கரும்பு, மஞ்சள் குழையுடன் சூரிய வழிபாடு நடக்கும். காலை உணவு சர்க்கரை பொங்கலுடன் இனிப்பு நிறைந்ததாக அமையும்.
இதனைத் தொடர்ந்து படையலில் வைத்த காய்களை எடுத்து பூசணி பச்சடி, புடலங்காய், பொறியல், சிறு கிழங்கு பொறியல் என கமகமவென மதிய உணவு தயாராகும். அடுத்து சிறு கிழங்கு, சேப்பங்கிழங்கு, பிடி கிழங்கு, கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, அவரை, முருங்கை, நாட்டு வாழைக்காய், மாங்காய் சேர்த்து ஸ்பெஷல் அவியல் சமைப்பர். இதனையடுத்து தயாராவது இடி சாம்பார். சாதாரண சாம்பாருடன் கருவேப்பிலை, கொத்தமல்லி போன்ற மணம் கூட்டும் பொருட்கள் சேர்த்து இடி சாம்பார் போன்றவற்றுடன் இடி சாம்பார் தயாராகும்.
பச்சடி, அவியல், இடி சாம்பார் போன்றவற்றுடன் மதிய உணவை மக்கள் விரும்பி சாப்பிடுவது வழக்கம். மதிய சாப்பாடு முடிந்தவுடன் மீதமுள்ள பச்சடி, அவியல் போன்றவற்றை இடி சாம்பாருடன் மிதமான சூட்டில் சுண்டக்கறி தயார் செய்யப்படுகிறது. இதன் வாசனை பலரையும் சுண்டி இழுக்கும். இதுபோல் மீதமுள்ள சாதத்தில் தண்ணீர் ஊற்றி வைத்துவிடுவர்.
பொங்கல் தினம் முடிந்த அடுத்த நாள் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் பெரும்பாலான வீடுகளில் சுண்டக்கறி சாப்பாடுதான் நடக்கும். இதற்காக பழைய சாதத்துடன் தயிர் சேர்த்து சுண்டக்கறியை மீண்டும் சூடேற்றி சாப்பிடுவர். பச்சரிசி சாதத்துடன் சுண்டக்கறி சேர்த்து சாப்பிட்டால் தனிச்சுவையாக இருக்கும். இது சைவ பிரியர்களுக்கு ஏற்ற உணவாக இருக்கும்.
அதற்கடுத்தநாள் அதே சுண்டக்கறியுடன் நல்லெண்ணய் சேர்த்து சாதம் சாப்பிடுவது தனிச்சுவையாக இருக்கும். சூடான இட்லி, தோசையுடன் இந்த சுண்டக்கறியை சேர்த்து சாப்பிடலாம். மிகவும் சுவையானதாக இருக்கும். காய்கறிகளை வீணாக்கக் கூடாது என்ற எண்ணத்தில் சுண்டக்கறி சமைத்து அதை சாப்பிடுவது என்பது தென் மாவட்ட மக்களின் பொங்கல் சிறப்பாக உள்ளது. விளைவித்த பொருட்களை சமைத்து அதை வீணக்காமல், ஒரு கலவையாக மதிப்புக்கூட்டி சுண்டக்கறி என இரண்டு நாட்களுக்கு பயன்படுத்துவது என்பது பொங்கலின் மற்றொரு சிறப்பு.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்