Rava Idly : சுவையான ரவை இட்லி – குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்!
Oct 04, 2023, 02:29 PM IST
Rava Idly : சுவையான ரவை இட்லி, குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். வீட்டிலேயே ரெஸ்டாரன்ட் சுவையில் செய்ய முடியும்.
தேவையான பொருட்கள்
ரவை – 2 கப்
பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கியது)
புளித்த தயிர் – 2 கப்
வெங்காயம் – அரை (பொடியாக நறுக்கியது)
சோடா உப்பு – கால் ஸ்பூன்
கொத்தமல்லி – கைப்பிடி
உப்பு – தேவையான அளவு
தாளிக்க
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
நெய் – 1 டேபிள் ஸ்பூன்
கடுகு – கால் ஸ்பூன்
உளுந்து – 2 ஸ்பூன்
கடலை பருப்பு – 1 ஸ்பூன்
பெருங்காயம் – ஒரு சிட்டிகை
முந்திரி – 15 (உடைத்தது)
கேரட் – 2 டேபிள் ஸ்பூன் (துருவியது)
பீட்ரூட் – 2 டேபிள் ஸ்பூன் (துருவியது)
பச்சை பட்டாணி – 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை
கடாயில் எண்ணெய் மற்றும் நெய் சூடாக்கி, கடுகு பொறிந்ததும், உளுந்து, கடலை பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம் அனைத்தும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
வெங்காயம் கண்ணாடி பதம் வந்தவுடன், ரவையை சேர்த்து நல்ல மணம் வரும்வரை வதக்க வேண்டும்.
பின்னர் அடுப்பை அணைத்துவிட்டு, அதே சூட்டில், தயிர் சேர்த்து கெட்டியாக பிசைந்து அரை மணி நேரம் ஊற வைத்து விடவேண்டும்.
பின்னர் போதிய அளவு தண்ணீர், சோடா உப்பு, உப்பு, மல்லித்தழை ஆகிய அனைத்தும் சேர்த்து நன்றாக கலந்துகொள்ள வேண்டும்.
இதில் நீங்கள் விரும்பினால் உங்களுக்கு பிடித்த காய்கறிகள் நறுக்கியது மற்றும் துருவிய தேங்காய் ஆகியவற்றையும் சேர்த்துக்கொள்ளலாம். இல்லாவிட்டால் உங்கள் விருப்பம்.
மற்றொரு முறையில் அந்த காய்கறிகளை தனித்தனியாக தட்டில் சேர்த்துக்கொள்ள வேண்டும். பின்னர் அதில் மாவை பரப்பில் இட்லிகளாக செய்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
காய்கறிகளை நீங்கள் மாவிலே சேர்த்துக்கொள்கிறீர்கள் என்றால் பீட்ரூட்டையும் சேர்த்தால் அது இட்லியின் நிறத்தை மாற்றிவிடும். எனவே அதை நீங்கள் பார்த்து சேர்த்துக்கொள்ளுங்கள்.
பின்னர் உங்களுக்கு எப்படி விருப்பமோ அப்படி இட்லி தட்டில் சேர்த்து இட்லிகளாக வார்த்து எடுக்க வேண்டும். எடுக்கும்போது நன்றாக இட்லிகள் வெந்துவிட்டதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.
இதற்கு தேங்காய், தக்காளி, கடலை, புதினா, கொத்தமல்லி, கறிவேப்பிலை என எந்த சட்னி வேண்டுமானாலும் சேர்த்து சாப்பிடலாம். காய்கறிகள் சேர்த்து செய்யும் குருமாதான் கூடுதல் சுவையை கொடுக்கும். சாம்பார், மட்டன், சிக்கன், மீன் குழம்புகளும் இதற்கு பெஸ்ட் காம்போதான்.
வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய உணவாக இந்த ரவை இட்லி இருக்கும்.