Poondu Parupu Rasam : பூண்டு – பருப்பு ரசம்! மழைக்கு இதம்! காய்ச்சலுக்கு சுகம்!
Oct 01, 2023, 10:00 AM IST
Poondu Parupu Rasam : உடம்பு சரியில்லாத அன்று வாய்கசப்பை போக்கும், வாய்க்கு ருசியான ஒரு ரசம் வைக்கணுமா?
உடம்பு சரியில்லாததால், அடுப்பு முன்னாடி நீண்ட நேரம் நின்று சமைக்க முடியலையா? அப்ப சட்டுனுக்கு இந்த ரசத்தை வைத்துவிட்டு, சாதத்தை குக்கரலையோ அல்லது வடிச்சோ எடுத்து வைத்துவிட்டு, பேசாமல் சென்று ஓய்வு எடுத்தக்கொள்ளுங்கள். அப்பளம், வத்தல், ஊறுகாய் இருந்தாலே போதும் அன்றைய நாளை எளிமையாக முடித்துவிடலாம்.
தேவையான பொருட்கள்
பூண்டு – 4 பல்
மிளகு – அரை ஸ்பூன்
சீரகம் – ஒரு ஸ்பூன்
ஓமம் – கால் ஸ்பூன்
வெந்தயம் – கால் ஸ்பூன்
பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்
தக்காளி – 1
புளி – எலுமிச்சை அளவு புளியை 10 நிமிடம் சுடு தண்ணீரில் ஊறவைத்து கரைத்து புளிக்கரைசர் எடுத்துக்கொள்ளவேண்டும்.
மஞ்சள் தூய் – கால் ஸ்பூன்
நல்லெண்ணெய் – 2 ஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை – ஒரு கைப்பிடி
ரசப்பொடி – 1 ஸ்பூன்
உப்பு -தேவையான அளவு “
பெருங்காயம் – சிறிதளவு
இஞ்சி – அரை இன்ச்
கடுகு – கால் ஸ்பூன்
உளுந்து – கால் ஸ்பூன்
செய்முறை
ஒரு குக்கரில் ஒரு பாத்திரத்தில் பருப்பு, மஞ்சள் தூள், உப்பு, பெருங்காயம், நல்லெண்ணெய் அனைத்தையும் வைத்துவிடவேண்டும்.
அதே குக்கரில் மேலே மற்றொரு பாத்திரத்தில் புளித்தண்ணீர், தக்காளி, பூண்டு 2 பல் மட்டும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
இரண்டையும் வைத்துவிட்டு, குக்கரை மூடி இரண்டு விசில் விடவேண்டும்.
மிளகு, சீரகம், ஓமம், வெந்தயம், பூண்டு 2 பல் அனைத்தையும் சேர்த்து நன்றாக நைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஒரு கடாயில் எண்ணெய் சூடாக்கி, கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், நன்றாக துருவிய இஞ்சி அனைத்தையும் சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின்னர், இடித்து வைத்துள்ள விழுதை சேர்த்து நன்றாக பச்சை வாசம் போகும் வரை வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதில் வேகவைத்த புளித்தக்காளி தண்ணீரை கரைத்து சேர்த்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் பருப்பு தண்ணீர் மற்றும் தண்ணீரை சேர்த்து நன்றாக கொதிக்க விடவேண்டும்.
கடைசியாக கைப்பிடி கொத்தமல்லித்தழை தூவி இறக்க வேண்டும். சூடான பருப்பு – பூண்டு ரசம் சாப்பிட தயாராக உள்ளது.
இதை நீங்கள் சூடான சாதத்தில் சேர்த்து சாப்பிட சுவை அள்ளும். மழைக்காலத்தில் காய்ச்சல் நேரங்களில் இது உடலுக்கு இதமாக இருக்கும்.
டாபிக்ஸ்